கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனை குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை தமிழகத்தில் 67 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்கள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
உலக நாடுகளில் பல்வேறு தலைவர்களுக்கு இந்த கரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்றொரு நாட்டில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு அந்த அச்ச உணர்வு வரவில்லையா?
அச்சம் ஏற்பட்டாலும் நான் வீட்டில் முடங்க முடியாது, எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. நான் ஏன் இரவு ஒரு மணிக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு செல்கிறேன், ஒரு துறையின் தலைமை பொறுப்பில் இருக்கின்ற போது நான் சென்றால்தான் அங்கு இருக்கும் மருத்துவர்களுக்கு உத்வேகம் கொடுக்கும். வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொடுக்கும். அதனால் இதற்காக பயந்துகொண்டு வேலை செய்யாமல் முடங்க முடியாது. எதையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு சரியான முறையில் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றதே?
சரியான கேள்வி, தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நமக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வோம். அது தற்போது தடைபட்டுள்ளது. இருந்தாலும், தற்போதைய நிலையில் அனைத்தும் சரியான நிலையில் இருந்துகொண்டு இருக்கின்றது. போதுமான உபகரணங்கள் நம்மிடம் இருக்கின்றது. பாதுகாப்பு அனைவருக்கும் உறுதி செய்யப்படுகின்றது. நேற்று கூட ஓமந்தூரார் மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட தனி மருத்துவமனையை முதல்வர் ஆய்வு செய்து பாராட்டினார். சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த 21 நாட்கள் என்பது ஹாலிடே கிடையாது, அரசாங்கத்தின் உத்தரவு, கட்டளை என்பதை கருதி பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் நாம் அடுத்த நிலைக்கு செல்லாமல் நம்மை காக்க முடியும்.