மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க.வின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனும் விழுப்புரத்தில் களம் காண்கிறார்கள். பிரதான கூட்டணிகளின் சார்பில் போட்டியிடும் இவ்விருவருமே வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், நிதி வசதியிலும் பின்தங்கி இருப்பவர்கள்.
எனினும் தொண்டர்கள் பலத்தில் இருவருமே சரிசமமாக உள்ளனர். அ.தி.மு.க., தி.மு.க. தலைமைகளின் கண்ணசைவுக்கேற்பதான் களத்தில் இவர்களின் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் தெரியும். தி.மு.க.வின் விழுப்புரம் மத்திய மா.செ. பொன்முடி, தனது மகன் கௌதம சிகாமணி போட்டியிடும் கள்ளக்குறிச்சியிலேயே கவனம் செலுத்துவதால், தெற்கு மா.செ.அங்கயற்கண்ணி, வடக்கு மா.செ.மஸ்தான் மற்றும் எம்.எல்.ஏ.க்களான மாசிலாமணி, சீத்தாபதி, ராதாமணி, கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோரையே அனைத்து ஒத்துழைப்புகளுக்கும் பெரிதும் நம்பியுள்ளார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ரவிக்குமார்.
"கட்சித் தலைமையிடம் காட்டும் நெருக்கம் அளவுக்கு அடிமட்டத் தொண்டர்களிடம் ரவிக்குமாருக்கு நெருக்கமில்லை. என்றாலும் இந்தத் தேர்தல் எங்களுக்கு வாழ்வா சாவா என்கிற நிலையில் இருப்பதால், தலைவர் திருமாவின் கட்டளையை ஏற்று ரவிக்குமாரின் வெற்றிக்குப் பாடுபடுவோம். அதேபோல் உதயசூரியன் சின்னத்தில் ரவிக்குமார் நிற்பதால், தி.மு.க.வினரும் உழைப்பும் சிறப்பாகவே இருக்கும்'' என்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகளின் தொண்டர்கள்.
பா.ம.க. ஏரியாவிலும் புலம்பல்கள் கேட்கின்றன. "பாக்கெட்ல இருந்து பைசாவை எடுப்பதற்கு ரொம்பவே யோசிப்பாரு. இதுவே ஏ.டி.எம்.கே. கேண்டிடேட்டா இருந்தா தாராளமா அள்ளிவிடுவாரு. ஆனா இப்ப என்ன செய்றது, யார்ட்ட சொல்றது'' என புலம்புகிறார்கள் பா.ம.க. தொண்டர்கள்.
இரு கட்சிகளின் பொ.செ.க்களுக்கு எதிராக அ.ம.மு.க. சார்பில் களம் இறங்கியிருக்கிறார் வானூர் எக்ஸ் எம்.எல்.ஏ.கணபதி. எனவே விழுப்புரம் தொகுதியில் மும்முனைப் போட்டி இருந்தாலும் உதயசூரியனுக்கும் மாம்பழத்துக்கும் இடையேதான் கடும் போட்டி.