Skip to main content

வந்தே பாரத் - சென்னையில் பயணத்தைத் துவக்கும் இந்தியாவின் புல்லட் ரயில்

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

ரகத

 

இந்தியாவில் ரயில் சேவை தொடங்கி ஏறக்குறைய 170 வருடங்கள் நிறைவுபெற உள்ளது. நூற்றுக்கணக்கான ரயில்களை இந்திய ரயில்வே பல்வேறு வழித்தடங்களில் இயக்கி வருகிறது. முதல் ரயில் மும்பை மற்றும் தானே இடையே 34 கி.மீ தூரத்துக்கு இயக்கப்பட்ட அந்தக் காலத்தில் தொடங்கி, இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நீண்ட தூர ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இன்றுவரை இருந்து வருகிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வே துறைக்கு என்று பல வருடம் தனி பட்ஜெட் போடப்பட்டு வந்த நிலையில் சில ஆண்டுகளாக அது நிறுத்தப்பட்டது.

 

இந்நிலையில் ரயில்வே துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக அதிவேக ரயில்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. ராஜ்தானி, சதாப்தி வரிசையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயில் டெல்லி மற்றும் வாரணாசி இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது. தற்போது நான்கு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில், நாளை மறுநாள் சென்னையிலிருந்து மைசூருக்கு 5வது வழித்தடத்தில் இயக்கப்பட இருக்கிறது. 

 

சென்னையில் காலை 5.50 மணிக்குப் பயணத்தைத் துவங்கும் இந்த ரயில் பெங்களூருக்கு காலை 10.25 மணிக்குச் சென்றடையும். அங்கிருந்து 10.30 மணிக்குப் புறப்பட்டு 12.30 மணிக்கு மைசூரை சென்றடையும். கிட்டதட்ட 470 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி 40 நிமிடங்களில் இந்த ரயில் பயணிக்கின்றது. சதாப்தி ரயிலும் ஏறக்குறைய இந்த நேரத்தில் பயண தூரத்தை அடையும். மிகச் சில நிமிடங்கள்தான் இரண்டிற்கும் வேறுபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவும் காலப்போக்கில் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டு அதன் முழு வேகமான மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும்போது சதாப்தி ரயிலை விட வேகமாகச் செல்லும் என்று கூறப்படுகிறது.  

 

இது ஒருபுறம் இருக்க மற்ற ரயில்களை விட இந்த ரயிலில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலின் மொத்த எடை 38 டன் என்ற அளவில் இருக்கிறது. இந்த ரயிலின் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிவேகமாகச் செல்வதற்கும், சஸ்பென்சன் வசதி ஏற்படுத்துவதற்கும் இந்த முறை கையாளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வகை ரயில்கள் மற்ற ரயில்களைக் காட்டிலும் மின்சாரத்தை 30 சதவீதம் வரை சேமிக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. அவசரக் காலங்களில் விமானத்தில் உள்ளது போலப் பயணிகளை லோகோ பைலட்கள் தொடர்பு கொள்ள முடியும். 

 

மேலும் ரயிலில் உள்ள அனைத்து இருக்கைகளிலும் குஷன் சீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அமர்ந்து செல்வது இதன் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றார்கள். இந்த ரயில் பெட்டிக்கு உள்ளே மட்டும் அல்லாமல் பெட்டிக்கு வெளியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது. அனைத்துக் கதவுகளும் தானியங்கி முறையில் செயல்படக்கூடியது. ரயிலின் உட்புறத்தில் இருக்கும் பெட்டிகளை இணைக்கும் கதவுகளும் தானியங்கி முறையில் செயல்படக்கூடியது. மேலும் குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ரயில் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதைக் கண்டறியும் வசதி உள்ளிட்ட நவீன வசதிகள் அனைத்தும் இடம் பெற்றுள்ளது. உச்சக்கட்டமாகத் தண்டவாளத்தில் இரண்டு அடிக்குத் தண்ணீர் இருந்தாலும் கூட ரயிலை இயக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.