Skip to main content

வெற்றிபெற எடப்பாடி நினைக்கவில்லை... அவரது திட்டமே வேறு... கே.சி.பழனிசாமி அதிரடி..!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

KCP-OPS

 

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதில் சிட்டிங் எம்எல்ஏக்கள் 41 பேருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அக்கட்சி தலைமை மீது எதிர்ப்பு அதிகரித்துள்ளது. மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால், சிட்டிங் எம்எல்ஏ ராஜவர்மன், அமமுகவில் இணைந்துள்ளார். மேலும், பலர் இதுபோன்ற முடிவுகளை எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

 

இந்தநிலையில், அதிமுகவில் நடக்கும் இந்த விவகாரம் குறித்து நக்கீரனிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டார் அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி. 

 

அவர் கூறுகையில், ''ஒன்றுப்பட்ட அதிமுகவை உருவாக்கியிருக்க வேண்டும். அது ஏற்படுத்தப்படவில்லை என்பது தவறு. தேமுதிகவை அதிமுக கூட்டணியில் சேர்த்திருக்க வேண்டும். கூட்டணியில் இந்தக் கட்சி இருக்கிறது என்று பலம் காட்டிவிட்டு, பின்னர் இல்லை என்பது அதிமுகவுக்கு பலகீனம். இந்த இரண்டுமே அதிமுகவுக்கு வரும் வாக்குகளைப் பாதிக்கும். 

 

பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் சிறுபான்மையினர் வாக்குகள் எதிர் அணிகளுக்குச் செல்லும். வன்னியர் உள்ஒதுக்கீடு கொடுத்ததால், தமிழ்நாடு முழுவதும் வன்னியர் அல்லாத வாக்குகள் பாதிக்கும். சசிகலா ஒதுங்குவதாகக் கொடுத்த அறிவிப்பிற்கு பின்னால், பாஜக மற்றும் இ.பி.எஸ். கொடுத்த அழுத்தம்தான் காரணம் என முக்குலத்தோர் சமுதாயத்தில் அதிமுகவுக்கு எதிரான மனநிலை ஏற்படும். தேவேந்திரகுல வேளாளர் என்ற டைட்டில் கொடுத்ததால் மற்ற சமுதாய வாக்குகள் பாதிக்கும். 

 

அதிமுகவின் குறைந்த வாக்கு சதவீதம் என்று எடுத்துக்கொண்டால் 96ல் 28 சதவீதம் இருந்தது. அப்போது நான்கு தொகுதிகள் இருந்தது. இப்போது வெளியாகும் கருத்துக் கணிப்புகளில் அதிமுகவுக்கு 32 சதவிகித வாக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தவறுகளை சரிசெய்யாததால், தேர்தலில் 25 சதவிகிதம் வாக்குகளாகக் குறையும். இந்த 25 சதவிகித வாக்குகள் என்றைக்குமே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இரட்டை இலை என என்னைப் போன்றவர்களின் வாக்குகள்தான். இந்த வாக்குகள் எடப்பாடி பழனிசாமிக்கான வாக்குகள் அல்ல. இருபது சதவிகித வாக்கு வங்கியைக் குறைத்தது மட்டும்தான் எடப்பாடி பழனிசாமியின் சாதனையாக இருக்கும். 

 

மாநிலத்திற்கு எடப்பாடி பழனிசாமி, மாவட்டத்திற்கு அமைச்சர்கள். இவர்கள் தங்களுக்கு ஏற்றதுபோல் அடிமையாக இருப்பவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கருத்து வேறுபாடு உள்ளவர்கள், பிடிக்காதவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். 

 

எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பதற்காக தேர்தலை சந்திக்கவில்லை. அவரது திட்டமே வேறு. கட்சியைக் கைப்பற்றுவதற்கு யாரெல்லாம் தேவையோ அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். சின்னம் தொடர்பான வழக்கில், சட்டமன்றத்தில் இல்லாதபோது சின்னத்தில் போட்டியிட்டவர்களைக் கணக்கு எடுப்பார்கள். அப்போது அந்தச் சின்னத்தில் போட்டியிடுபவர்கள் தனக்கு ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தாரேயொழிய யாரெல்லாம் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தோடு வேட்பாளரை தேர்வு செய்யவில்லை. கட்சியைக் கைப்பற்றலாம் என்ற எண்ணத்தோடுதான் வேட்பாளர் தேர்வு, அரசியல் வியூகங்களை வகுத்திருக்கிறார். ஆட்சிக்கு வரவேண்டும் என்ற முனைப்பு இல்லை. இவ்வாறு கூறினார்.