ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தங்கதமிழ்செல்வனை அமைச்சராக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்து இருந்தோம். ஆனால் தற்போது டி.டி.வி. தினகரன் பின்னால் இருந்து கொண்டு எங்களை பற்றி பேசுகிறார். அதற்கு அவருக்கு தகுதி இல்லை. தினகரன் சுற்றுப்பயணம் என்ற பெயரில் மக்களுக்கு பணம் கொடுத்து பேக்கேஜ் முறையில் கூட்டத்தை கூட்டி வருகிறார். இது விரைவில் முடிவுக்கு வரும் என நிருபர்களிடம் கூறினார்.
எஸ்.பி.வேலுமணி பேட்டி குறித்து நக்கீரன் இணையதளத்திற்கு பதில் அளித்த தங்கத்தமிழ்ச்செல்வன்:-
திடீரென்று தங்கத்தமிழ்ச்செல்வன் மீது ஏன் இவ்வளவு அக்கறை. என்னை அமைச்சராக ஆக்காவிட்டாலும்கூட நாங்கள் கோவித்துக்கொண்டு வெளியே வரவில்லை. சசிகலா தலைமையில் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கிறோம். சசிகலா குடும்பம், ஜெயலலிதாவுக்காக பாடுபட்ட குடும்பம் என்பதற்காகத்தான், அந்த குடும்பம் எங்களுக்கு நல்லது செய்யாவிட்டாலுமகூட கோடிக்கணக்கான தொண்டர்களும், மாவட்டச் செயலாளர்களும், 18 எம்எல்ஏக்களும் உடன் இருக்கிறோம். எங்களுக்கு எந்த பிரதிபலனும் இல்லை.
ஆனால், சசிகலா குடும்பத்தினரால் பயன்பெற்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், செல்லூர் ராஜு, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் நம்பிக்கை துரோகிகள். இவர்கள் எங்களைப் பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை. நாங்கள் நல்லவர்கள் பக்கம் இன்று நிற்கிறோம். எங்களுக்கு சோதனை வந்தால் தாங்கிக்கொள்வோம்.
சசிகலா குடும்பத்தினரை எதிர்த்து ஆதாயத்துக்காக எடப்பாடிக்கிட்டேயோ, ஓ.பி.எஸ். கிட்டேயோ போயிருந்தா எனக்கு நிச்சயமாக மந்திரி பதவி கிடைச்சிருக்கும். சத்தியமா. பணமும் கோடிக்கணக்கில் கொடுத்திருப்பார்கள். அதனை நாங்கள் விரும்பவில்லை. இன்றைக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள். சசிகலா குடும்பம் நல்ல குடும்பம் என ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள். அது தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கிறது. நிச்சமாக டி.டி.வி. தினகரன் தலைமையில் நல்ல மாற்றம் வரும்.
டி.டி.வி. தினகரன் அணியினர் கொள்கையற்றவர்கள் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறியிருக்கிறாரே?
ஜெயலலிதாவுக்காக நம்பிக்கையாக 33 வருடமாக உழைத்தது சசிகலா குடும்பம். அந்த கொள்கையின் அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். இதைவிட என்ன கொள்கை வேண்டும். உங்களுக்கு கொள்கையே இல்லையே. பதவிக்காக எதையுமே இழக்க தயாராக இருக்கிறீர்களே. பணமும், பதவியும்தானே உங்களிடம் இருக்கிறது. அதனால்தான் உங்களை மக்கள் தெருவில் விடுகிறார்கள். எங்களை சிம்மாசனத்தில் உட்கார வைக்கிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.