தமிழகத்தில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு சாதனைப் படைத்துள்ளதாக மத்திய அரசின் கல்வி அமைச்சக ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ இந்தியா முழுவதும், 2019ஆம் ஆண்டை விட, 2024ஆம் ஆண்டில், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தாமல், நடுநிலை உயர்நிலை பள்ளிகளில் தொடர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு மாபெரும் சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பைத் தொடங்கிய 100 சிறுவர்களில் நடுநிலைப்பள்ளி முடிப்பை முடித்தவர்கள் 2019இல் 99 பேர் என்பது 2024இல் 100 பேர் என உயர்ந்துள்ளது.
அதேபோல, சிறுமியர் எண்ணிக்கை. 97.5இல் இருந்து 100 ஆக 2024இல் அதிகரித்து இடையில் படிப்பை விடுவோர் தமிழ்நாட்டில் இல்லை என்பது புலனாகியுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் 2019இல் 81.3 என இருந்தது 2024இல் 89.2ஆக உயர்ந்துள்ளது. மாணவிகளைப் பொறுத்தவரை 2019இல் 89.4 சதவிகிதமாக இருந்தது 2024இல் 95.6 சதவிகிதமாக அதிகரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பீகார் மாநிலத்தில் பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 மாணவர்களில் நடுநிலைப்பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் 2019ஆம் ஆண்டில் 78.6 சதவிகிதமாக இருந்தது 2024இல் 65 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. மாணவிகளைப் பொறுத்தவரை 2019இல் 81.1 சதவிகிதமாக இருந்தது 2024இல் 65.4 சதவிகிதமாக குறைந்து பள்ளிப் படிப்பைவிட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாயிற்று.
பீகாரில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் எண்ணிக்கை 51.2 சதவிகிதம் என்பது 38.8 சதவிகிதம் என 12.4 சதவிகிதம் குறைந்து இடையில் விடுபவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பதை வெளிப்படுத்துகிறது. அதேபோல மாணவிகளைப் பொறுத்தவரையிலும், மேல்நிலைப்பள்ளிப் படிப்பில் 2019இல் 51.6 சதவிகிதமாக இருந்தது 2024இல் 9.3 சதவிகிதம் குறைந்து அதாவது 42.3ஆக குறைந்து பள்ளிப் படிப்பை இடையில் விடுபவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.
அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை, பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 மாணவர்களில் நடுநிலைப்பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் 2019ஆம் ஆண்டில் 93.4 சதவிகிதமாக இருந்தது 2024இல் 82.6 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. மாணவிகளைப் பொறுத்தவரை 2019இல் 96.7 சதவிகிதமாக இருந்தது 2024இல் 88.7 சதவிகிதமாகக் குறைந்து பள்ளிப் படிப்பைவிட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாயிற்று. மேல்நிலைப்பள்ளிப் படிப்பைப் பொறுத்தவரை 2019இல் மாணவர்கள் எண்ணிக்கை 62.6 என்பது 2024இல் 57.4 சதவிகிதமாகவும், மாணவிகள் எண்ணிக்கை 64.6 சதவிகிதம் என்பது 63.7 சதவிகிதமாகவும் குறைந்துவிட்டது.
அரியானா மாநிலத்தை பொறுத்தவரை, பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 மாணவர்களில் நடுநிலைப்பள்ளி படிப்பை முடித்தவர்கள் 2019ஆம் ஆண்டில் 98.3 சதவிகிதம் என்பது 2024இல் 93 சதவிகிதமாகவும், மாணவிகளைப் பொறுத்தவரை 2019இல் 97.7 சதவிகிதம் என்பது 2024இல் 95.6 சதவிகிதமாகவும் குறைந்து பள்ளிப் படிப்பைவிட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேல்நிலைப்பள்ளி படிப்பை பொறுத்தவரை 2019இல் மாணவர்கள் எண்ணிக்கை 82.6 என்பது 2024இல் 77.3 சதவிகிதமாக குறைந்துவிட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிப் படிப்பை இடையில் விட்டோர் ராஜஸ்தான் மாநிலத்தில், பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 மாணவர்களில் நடுநிலைப்பள்ளி படிப்பை முடித்தவர்கள் 2019ஆம் ஆண்டில் 91.2 சதவிகிதம் என்பது 2024இல் 84.8 சதவிகிதமாகவும்; மாணவிகளைப் பொறுத்தவரை 2019இல் 90.8 சதவிகிதம் என்பது 2024இல் 86.6 சதவிகிதமாகவும் குறைந்து பள்ளிப் படிப்பைவிட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல, மேல்நிலைப்பள்ளி படிப்பை பொறுத்தவரை 2019-ல் மாணவர்கள் எண்ணிக்கை 78.6 என்பது 2024இல் 72.6 சதவிகிதமாகவும்; மாணவிகள் எண்ணிக்கை 78 சதவிகிதம் என்பது 76.9 சதவிகிதமாகவும் குறைந்துவிட்டது. இந்த ஆய்வின் மூலம் பீகார், அசாம், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பள்ளிப் படிப்பை இடையில் விடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
அதே சமயம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பில் சேரும் குழந்தைகள் அனைவரும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகச் செயல்படுத்தி வரும் காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம். எண்ணும் எழுத்தும் திட்டம். வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தும் திட்டம், முதலிய திட்டங்களால்தான் குழந்தைகள் பள்ளிக் கல்வியில் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து ஆர்வத்துடன் படிப்பதில் ஊக்கமும் உற்சாகமும் அடைகிறார்கள் என்பது மத்திய அரசின் கல்வி அமைச்சக (UDISE+) ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.