சேலம் மாவட்டம், மேட்டூரில் ‘மேட்டூர் அணை’ என்று அழைக்கப்படும் ஸ்டான்லி நீர்த்தேக்கம் மூலம் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் பல மாவட்ட பொதுமக்களின் குடிநீர் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணையிலிருந்து தண்ணீர் திறக்கும்போது அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மற்றும் காவிரி ஆற்றில் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக அண்மையில் அதன் முழு கொள்ளளவான 120 அடியை இரு முறை எட்டி இருந்தது. அந்த வகையில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை நேற்று (01.01.2024) எட்டியது. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு அதிகப்படியான நீர்வரத்து வந்த வண்ணம் உள்ளது. முன்னதாக பாசன தேவைக்காக 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
அதனைத் தொடர்ந்து டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பசானத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.