இந்தியா விடுதலை அடைந்து 1951-ல் முதல் தேர்தலை சந்திக்கிறது. அப்போது நாடாளுமன்றத்திற்கும் சென்னை மாகாணத்திற்குமான பொதுத் தேர்தல் ஒன்றாக நடந்தது. அரிசித் தட்டுபாடு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை காங்கிரஸ் கட்சி, தேர்தலுடன் சேர்ந்து எதிர்கொண்டது. ஆனால், இந்தியாவுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்தது காங்கிரஸ் எனும் கருத்தை முன்னிலைப்படுத்தி வெற்றியைப் பெற்றது காங்கிரஸ் கட்சி.
இருந்த போதிலும் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதன்பின் நீதிக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததோடு, சி. ராஜகோபாலச்சாரி எனும் ராஜாஜியை முதல்வராக்கியது. இந்தத் தேர்தலில்தான், முதன்முதலாக கட்சிகளுக்கென தனிச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் அதிமுக்கியமாக 21 வயது நிரம்பிய எந்தவொரு ஆணும் பெண்ணும் வாக்களிக்க முடியும் என புதிய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தைக் கொண்டு இந்தத் தேர்தலில் பலர் வாக்களித்தனர். (முன்னதாக 1921 -லேயே பெண்களுக்கான வாக்குரிமை சென்னை மாகாணத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதில் சொத்து வைத்திருப்பவர்களும் வரி செலுத்துபவர்களும் மட்டுமே வாக்களிக்க முடியும்) இந்தத் தேர்தலில் பெரும்பான்மையை நிரூபித்து காங்கிரஸ் 1952ல் ஆட்சியைப் பிடித்தது. ராஜகோபாலச்சாரி ஆட்சிப் பொறுப்பேற்றதும் குலக் கல்வித்திட்டத்தை அறிமுகம் செய்தார். அதன் விளைவு, கட்சிக்குள்ளும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
1954ஆம் ஆண்டு இந்த குலக் கல்வித்திட்டத்திற்கு காமராஜர் உட்பட காங்கிரஸின் மூத்த தலைவர்களே பல பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், குலக்கல்வித்திட்டம் குறித்து உள்கட்சியில் எவ்வளவு பேர் ஆதரவு என வாக்கெடுப்பு நடத்துவோம் என காமராஜர் முடிவெடுத்து சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தைக் கூட்டினார். ஆனால், ராஜாஜி அவராகப் பதவி விலகிக்கொள்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து காமராஜர் முதல்வரானார். அவர் வந்த பிறகு குலக்கல்வித் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதேவேளையில் சத்துணவுத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தபோதும் தமிழ் மண்ணின் அரசியலை முன்னெடுத்தார் காமராஜர். அதுவே அவரை 12 ஆண்டுகள் ஆட்சியில் அமர்த்தியது. இதுவெல்லாம் 1951 தொடங்கி 1962 வரையிலான அரசியலின் சிறு முன்னோட்டமே.
தமிழகத்தில் 1962 வரை இருந்த அரசியல் களம் வேறு அதன்பிறகான அரசியல் களம் வேறு. 1962 தேர்தலில் தமிழகத்தில் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. அதற்கு முன்னதாக 1937 முதல் இருந்த இந்தி தீ எரிவதும் பின்பு நீறு பூப்பதுமாக இருந்தது. இந்நிலையில், 1960ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். அதில், மத்திய அரசு பணியில் சேருவதற்குப் போதிய அளவில் இந்தி அறிவு வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இலவச இந்திப் பயிற்சி வழங்கப்படும் எனவும் இருக்கிறது.
இதற்கு முன்னதாக 1959 ஆண்டு ஆகஸ்டு மாதம் அன்றைய பிரதமர் நேரு, “எவ்வளவு காலத்திற்கு மக்கள் விரும்புகிறார்களோ அவ்வளவு காலத்திற்கு ஒரு மாற்று மொழியாக ஆங்கிலத்தை நான் வைத்திருப்பேன். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன், இந்தி பேசாத மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என அறிவித்திருந்தார். இந்த நிலையில், குடியரசுத் தலைவரின் மேற்குறிப்பிட்ட அறிவிப்பு பெரும் கண்டனங்களைப் பெற்றது. திமுக பொதுச்செயலாளர் அண்ணா, திமுகவினரை போராட்டத்திற்கு வரும்படி அறைகூவல் விடுத்தார். அப்போதும் அதில் தெளிவாக இருந்த அண்ணா, குடியரசுத் தலைவருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில், குடியரசுத்தலைவர் இங்கு வரும்போது அவரை யாரும் ‘திரும்பிப் போ’ என்று சொல்லக்கூடாது. ‘இந்தி ஒழிக; கட்டளையைத் திரும்பப் பெறுக’ என்றுதான் கோஷம் எழ வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார். இப்படிப் பல போராட்டங்களைச் சந்தித்து, 70 உயிர்களையும் இழந்தே இன்று செம்மொழி தனது தனித்தன்மையையும் உரிமையையும் இழக்காமல் இருக்கிறது. இதனையடுத்து வந்த தேர்தலில் (1962) திமுக 143 இடங்களில் போட்டியிட்டு, 50 இடங்களை வென்றது.
12 ஆண்டு கால காமராஜரின் முதல்வர் பதவியையும் காங்கிரஸின் ஆட்சியையும் மாற்றும் தேர்தலாக 1963 திருவண்ணாமலை இடைத்தேர்தல் அமைந்தது. 1963ஆம் ஆண்டு திருவண்ணாமலை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், திமுக வேட்பாளர் வெற்றி பெற்று, இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியும் வெல்லும் எனத் தமிழக அரசியலில் புதிய வரலாற்றை திமுக எழுதியது. இதனைத் தொடர்ந்து முதல்வராக இருந்த காமராஜர், மக்களிடத்தில் காங்கிரஸ் இன்னும் நெருக்கமாக வேண்டும் அதற்குப் பதவியில் இருக்கும் தலைவர்கள் பதவி விலகி மக்களிடத்தில் கட்சியை வளர்க்க வேண்டும் எனத் தீர்மானித்துப் பதவி விலகினார். காமராஜருக்குப் பிறகு தமிழகத்திற்குப் புதிய முதல்வராக பக்தவச்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவரையில் இந்தியைப் பெரிதாக எதிர்க்கவும் ஆதரிக்கவும் செய்யாத காமராஜர் தலைமையிலான தமிழகத்தில் நடந்துகொண்டிருந்த காங்கிரஸ் கட்சி முற்றிலும் எதிர் நிலைப்பாட்டை எடுத்தது. பக்தவச்சலத்தின் தலைமையிலான தமிழகத்தில் நடந்துகொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, இந்தியை நேரடியாக ஆதரிக்கத் துவங்கியது. திமுக தரப்பில் பலகட்டப் போராட்டம், சிறை உயிரிழப்பு ஆகியவை நடந்தது. இவையெல்லாம், 1967க்கு முன்னதாக தேர்தல் களத்தில் ஏற்பட்டிருந்த தாக்கங்கள். ஆனால், மொழியை மட்டும் கொண்டு 1967-ல் திமுக ஆட்சியைப் பிடித்ததா? ஆட்சி மாற்றத்திற்கும் அரசியல் மாற்றத்திற்கும் காரணம் என்ன? விரைவில் பார்ப்போம்..
திமுக ஆட்சியைப் பிடிக்க இது மட்டும்தான் காரணமா? அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்.. #2