Skip to main content

மந்திரிசபையில் இடம் பிடிக்க கோஷ்டி மோதல் நடக்கிறதா? வானதி சீனிவாசன் பேட்டி

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

 

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வி, மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறாதது, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை தமிழகத்தின் பிரதிநிதிகளாக கருத முடியாது என கே.எஸ்.அழகிரி கூறியது உள்ளிட்ட விமர்சனங்கள் குறித்து தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார். 

 

Vanathi Srinivasan




தமிழகத்தில் இருமொழிக் கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கண்டித்து வருகிறதே?
 

மும்மொழிக் கொள்கை பற்றி தெளிவாக மத்திய அரசாங்கம், மத்திய அமைச்சர்கள் விளக்கம் அளித்ததற்கு பின்பாகவும் திரும்ப திரும்ப இந்த கேள்வியை எழுப்புவது அவசியமற்றதாக பார்க்கிறோம்.
 

தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்காததால் ஒரு அமைச்சர் பதவி கூட கொடுக்கவில்லை. தமிழகத்தைப் புறக்கணித்து, அவமதித்துள்ளதாக மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளாரே?
 

ஸ்டாலினுக்கு தெரியும் தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் எங்கள் கூட்டணியில் வெற்றி பெற்றவர் ஒரே ஒருவர்தான். அதுவும் அதிமுகவைச் சேர்ந்தவர். கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு மத்திய அரசாங்கத்திடம் இருந்து அழைப்பு வந்ததா? அவர்கள் அமைச்சர் பதவி கேட்டார்களா? ஏன் மத்திய அரசாங்கம் கொடுக்கவில்லை? அல்லது இவர்கள் மறுத்துவிட்டார்களா? என்பது பற்றி அதிமுகதான் விளக்க வேண்டும். அழைப்பு கொடுப்பது என்பது பிரதம மந்திரியினுடைய தனிப்பட்ட உரிமை. அதைப்பற்றி தமிழக பாஜக சொல்ல முடியாது. 
 

கூட்டணி கட்சியான உங்கள் பார்வையில் அதிமுகவில் மந்திரிசபையில் இடம் பிடிக்க கோஷ்டி மோதல் நடக்கிறதா?
 

நாங்கள் அப்படி பார்க்கவில்லை. கூட்டணி கட்சி என்கிற முறையில் அந்த பொறுப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? அவர்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள்? என்பதெல்லாம் அதிமுகவில் உள்ளவர்கள்தான் அறிவிக்க வேண்டும்.


 

 

nirmala sitharaman jaisankar


 

மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கிற நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை தமிழர்கள் என்று கூறினாலும், தமிழக மக்களோடு தொடர்பில்லாத இவர்களை தமிழகத்தின் பிரதிநிதிகளாக கருத முடியாது என காங்கிரஸ் தலைவர் என கே.எஸ். அழகிரி கூறியுள்ளாரே?
 

நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு கடந்த பாஜக ஆட்சியில் என்னென்ன பணிகளை செய்திருக்கிறார் என்பதை என்னால் பட்டியலிட முடியும். கடந்த யுபிஏ ஒன்று மற்றும் இரண்டு காலக்கட்டத்தில் தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் என்னவெல்லாம் செய்ய இயலவில்லையோ, என்னவெல்லாம் செய்யாமல் விட்டார்களோ, அதைவிட ஒரு பங்கு அதிகமாக நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு செய்திருக்கிறார். 
 

உத்திரப்பிரதேசத்தில் அமைய இருந்த டிவென்ஸ் காரிடார் போலவே தமிழகத்திற்கும் அவர் கொண்டு வந்தார். திருப்பூர் சாயப்பட்டரை பிரச்சனை என்பது 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பிரச்சனை. ஒவ்வொரு முறை தமிழகத்தின் முதல் அமைச்சர்கள் பிரதமரை சந்திக்கும்போதும் பேசியிருந்த பிரச்சனை. அதை நிதி ஆயோக் வாயிலாக பெரும் உதவி செய்து அந்த தொகையை தமிழகத்திற்கு வாங்கிக்கொடுத்தவர். 
 

திருச்சியிலே பிஎச்இஎல் நிறுவனம் அதனுடைய ஆர்டர்களை வெளிமாநிலங்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் அவற்றையெல்லாம் திருச்சியில் இருக்கக்கூடிய துணை நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் பெறுகின்ற வகையில் அந்த துறை மந்திரியை பார்த்துப் பேசியவர். பேசி அதற்கான தீர்வையும் கண்டவர்.  
 

ஓக்கி புயலின் போது சம்மந்தப்பட்ட கன்னியாகுமரி எம்பியுடம், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் வெளிநாடு அரசுமுறைப் பயணமாக இருந்தபோது, அந்த புயல் பாதித்த மீனவர்களோடு இருந்து, அவர்களின் துன்பத்தை அறிந்து அவர்களுக்கான உதவிகளை செய்து, மீனவர்களை தேடும் பணிகளை செய்தவர். பாதுகாப்புதுறையை ஈடுபட வைத்து அந்த மக்களுக்கு துணை நின்றவர். 
 

கஜா புயலின்போது தமிழகத்திற்கு அவர் வந்து சென்ற நான்கு மணி நேரத்தில் தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க வைத்து, பெட்ரோலிய நிறுவனங்கள் வாயிலாக, சிஎஸ்ஆர் நிதியின் வாயிலாக உடனடியான உதவிகளுக்கும் ஏற்பாடு செய்தவர். மத்திய விவசாயத்துறை அமைச்சரை எங்களுடன் சேர்ந்து சந்தித்து தென்னை விவசாயிகளுக்கு தென்னை வாரியத்தின் வாயிலாக உதவிகளை பெற்றுத்தந்தவர். குரங்கனி தீ விபத்தில் உடனடியாக உதவி செய்தவர். 
 

திருப்பூரில் சிறு தொழிலில் ஈடுபடும் பட்டன் தைப்பவர்கள், காஜா எடுப்பவர்களுக்கு அரசாங்கத்தில் ஒரு பாலிசியை மாற்றி இறக்குமதி செய்யக்கூடிய பொருள்களின் ஒட்டுமொத்த பலனை அனுபவிக்குமாறு செய்தவர். திண்டுக்கல், திருச்சி பகுதிகளில் இயற்கை முறையில் தோலை பதப்படுத்தக்கூடிய தொழிலில் இருக்கக்கூடிய நபர்களுக்காக கடுக்காய் வாயிலாக தோலை பதப்படுத்தும் தொழிலுக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தந்தவர். 
 

தென்னை விவசாயிகளுடைய நலனுக்காக ரயில்வேக்கள் மூலம் தேங்காய், இளநீர் போன்றவற்றை எடுத்துச் செல்வதற்காக ரயில்வே அமைச்சரிடம் பேசி அதற்கு அனுமதி பெற்றுத்தந்தவர். கோவை - பெங்களூரு நேரடி ரயில் சேவை என்பது இருபது ஆண்டுகால கோவை மக்களின் எதிர்பார்ப்பு, அதனை அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் பியூஸ் கோயலிடம் பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்தார். 
 

கோவையில் சிறு குறு தொழில்கள் அதிகமாக உள்ள பகுதியில் கொடிசியா என்கின்ற அவர்களுடைய அமைப்புக்கு 20 கோடி ரூபாய் நிதி வழங்கி, பாதுகாப்புத்துறைக்கு அவர்கள் என்னென்னவெல்லாம் உபகரணங்கள் செய்ய முடியுமோ, அவற்றிற்கெல்லாம் செய்வதற்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தவர். defence innovation hub ஏற்படுத்திக்கொடுத்தவர். இந்தியாவிலேயே ஒரே ஒரு hub முதல் முறையாக வழங்கப்பட்டிருப்பது கோவையினுடைய கொடிசியாவிற்கு. இன்னும் நிறைய விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். 


 

 

mk stalin ks azhagiri


 

இத்தனை விஷயங்களை தமிழத்திற்கு செய்தவரை தமிழர் இல்லை என்று கே.எஸ். அழகிரி சொல்ல முடியும் என்றால், தமிழர்களாக இவர்கள் இருந்து தமிழகத்திற்கு செய்தது என்ன என்று அவர் அறிக்கை கொடுக்கட்டும். தமிழர்களாக இருந்து எய்ம்ஸ் கொண்டு வந்தார்களா? தமிழர்களாக இருந்து இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார்களா? இவர்கள் தமிழர்களாக இருந்து இந்திய, தமிழக மீனவர்களை காப்பாற்றினார்களா? என்று கே.எஸ்.அழகிரி சொல்ல வேண்டும். 
 

இவ்வளவு செய்துள்ளதாக சொல்லும் பாஜக, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐந்து இடங்களிலும் தோல்வி அடைந்திருக்கிறது...
 

ஆமாம் தோல்விதான். இல்லையென்று சொல்லவில்லையே. 
 

காரணம் என்ன?
 

காரணம் என்னவென்று விவாதிக்கிறோம். தோல்விக்கான காரணங்களை கண்டெறிந்து சரி செய்துகொள்வோம். மக்களுடனான தொடர்பை வலுப்படுத்துவோம். மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக வரக்கூடிய காலத்தில் செயல்திட்டங்களோடு பணி செய்வோம். 
 

அகில இந்திய அளவில் 300க்கும் அதிகமான இடங்களை பெற்ற பாஜக, தமிழகத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதுகுறித்து டெல்லி பாஜக தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்... 
 

பியூஸ் கோயல் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் எங்களை பார்க்கின்றபொழுது, கவலைப்பட வேண்டாம். ஒட்டுமொத்த தமிழகத்தையும் நாம் பிடிக்கக்கூடிய காலம் வரும். நீங்கள் தைரியமாக பணியாற்றுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்றுதான் சொல்லுகிறார்கள்.
 

தேர்தல் தோல்விக்காக தமிழக நிர்வாகிகளை பாஜக மேலிடம் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறதே? 
 

அதுவெல்லாம் ஒன்றுமே இல்லை.
 

அமித்ஷா அமைச்சரானதால் தலைவர் பதவியில் மாற்றம் வருமா? தமிழகத்தில் நிர்வாகிகள் மாற்றம் வருமா?
 

எங்கள் கட்சியில் ஒரு நபருக்கு ஒரு பதவி. ஒன்று கட்சியினுடைய பொறுப்பில் இருப்பார்கள் அல்லது பாஜக அரசாங்கம் இருந்தால் அரசாங்கத்தின் பொறுப்புக்களில் இருப்பார்கள். அந்த வகையில் பாஜக தேசிய தலைவராக இருந்த அமித்ஷா, இப்போது மத்திய அமைச்சராகியிருக்கிறார். புதிதாக ஒரு தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மூன்று வருடத்திற்கு ஒருமுறை அமைப்பு ரீதியான தேர்தலை நடத்துவோம். அந்த காலக்கட்டம் இன்னும் ஒன்று, இரண்டு மாதங்களில் வரும் என்பதால், எல்லா மாநிலங்களிலும் மாற்றம் நிகழும்போது தமிழகத்திலும் மாற்றம் நடக்கும்.