Skip to main content

திமுக மீது சந்தேக வலையை வீசும் காங்கிரஸ்! 

Published on 13/08/2019 | Edited on 13/08/2019


                   
காஷ்மீர் பிரச்சனையில் காங்கிரஸுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாள் சுழற்றினார் வைகோ. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டே காங்கிரஸுக்கு எதிராக வைகோ பேசுவதில் அதிர்ச்சியடைந்தது காங்கிரஸ் மேலிடம். உடனே வைகோவை கண்டிக்கும் வகையில் அறிக்கை வாசித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. உடனே இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மிக காட்டமாக காங்கிரஸை தாக்கினார் வைகோ. இதனால் இரு தரப்புக்குமான அரசியல் பொது வெளியில் சூடு பிடிக்க, வைகோவின் காங்கிரஸ் எதிர்ப்பில் திமுக ஒளிந்திருக்கிறதா? என்கிற விவாதம் சத்தியமூர்த்திபவனில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. 

 

vaiko


இது குறித்து நம்மிடம் பேசும் காங்கிரஸ் தலைவர்கள், ‘’திமுக கூட்டணியிலுள்ள காங்கிரசை வைகோ விமர்சிப்பதை திமுக இதுவரை கண்டிக்கவில்லை ; கண்டுகொள்ளவும் இல்லை. ஏதோ, இந்த விவகாரம் காங்கிரஸுக்கும் வைகோவுக்கும் தனிப்பட்டப் பிரச்சனை போல நினைத்து ஒதுங்கியிருக்கிறது திமுக. கூட்டணியின் தலைவர் என்கிற முறையில் வைகோவிடம் இது குறித்து மு.க.ஸ்டாலின் விசாரித்திருக்க வேண்டும். அல்லது இந்த விசயத்தில் திமுகவின் கருத்தையாவது வெளிப்படையாக அவர் சொல்லியிருக்க வேண்டும். இந்த இரண்டுமே நடக்காததால்தான் திமுக மீது எங்களுக்கு சந்தேகம் வருகிறது. 


        
அதாவது, சட்டமன்ற தேர்தலின் போது 200 இடங்களில் திமுக போட்டியிடவும், மீதமுள்ள 34 இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் திமுக திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் எங்களுக்கு கிடைக்கிறது. கூட்டணியில் காங்கிரசை வைத்துக்கொண்டு திமுக மட்டுமே 200 இடங்களில் போட்டியிட முடியாது. அதனால் காங்கிரசை கழட்டி விட நினைக்கிறது திமுக. அதற்காக  காங்கிரசுக்கு எதிரான அரசியலை வைகோ மூலம் திமுக தூண்டிவிடுவதாக எங்களுக்கு சந்தேகம். வைகோ மூலம் காங்கிரசின் மனநிலையை ஆழம் பார்க்கிறது திமுக. அதனால்தான், காங்கிரசுக்கு எதிராக வைகோ கடுமையாக பேசியும் அது குறித்து கண்டிக்காமல் மௌனமாக இருப்பது ஆரோக்கியமா? 

 

கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்தால், கூட்டணியின் தலைவர் அதில் தலையிட்டு சரி செய்வதுதான் அரசியல் நாகரீகம். அப்போதுதான் தேர்தல் காலங்களில் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் விறுப்பு வெறுப்பின்றி வேலைப்பார்ப்பார்கள். அப்படி இல்லையெனில், அது கூட்டணியாக இருக்காது. அந்த வகையில், இரு தரப்பையும் அழைத்து திமுக பேசாமால் இருப்பதால் காங்கிரசை கழட்டிவிட திமுக நினைப்பதாகத்தான் நாங்கள் கருத வேண்டியிருக்கிறது. அதனால் வைகோவின் பேச்சின் பின்னணியில் திமுக இருக்கலாம் என நாங்கள் சந்தேகப்படுவது நியாயம்தானே? நாடாளுமன்ற தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக ஜெயிக்க காங்கிரசும் முக்கிய காரணம் என்பது அரசியல் கட்சிகளுக்குத் தெரியும்’’ என்கிறார்கள் ஆவேசமாக கதர்சட்டை தலைவர்கள். திமுக தரப்போ, வைகோவின் அரசியல் தனிப்பட்டது. அவரின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையிலும் திமுக எப்படி கேள்வி கேட்க முடியும் என்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்