உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற்றுநோய் மருத்துவமனையில், பல்வேறு துறைகளுக்கு பணி நியமனம் செய்ய தேர்வு நடத்தப்படுகிறது. அந்த தேர்வில் கலந்து கொள்வதற்காக வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களில் விண்ணப்ப கட்டணத்தோடு 18% ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த விண்ணப்ப படிவத்தில், ஓ.பி.சி அல்லது இ.டபுள்யு.எஸ் (EWS) ஆகிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.1,000 விண்ணப்ப கட்டணத்தோடு 18% ஜிஎஸ்டி ரூ.180 விதித்து மொத்தம் ரூ.1,180 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.600 விண்ணப்ப கட்டணத்தோடு 18% ஜிஎஸ்டி ரு.108 விதித்து மொத்தம் ரூ.780 செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த விவகாரத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும், வயநாடு எம்.பியுமாக பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பா.ஜ.கவால் இளைஞர்களுக்கு வேலை வழங்க முடியாது, ஆனால் தேர்வுப் படிவத்தில் 18% ஜிஎஸ்டியை வசூலித்து இளைஞர்களின் காயத்தில் உப்பை தேய்ப்பது நிச்சயம்.
அக்னிவீர் திட்டம் உட்பட ஒவ்வொரு அரசுப் பணிக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. படிவத்தை பூர்த்தி செய்த பின், அரசின் தோல்வியால் பேப்பர் கசிந்தாலோ, ஊழல் நடந்தாலோ, இளைஞர்கள் செலுத்திய இந்த பணம் வீணாகிறது. பெற்றோர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து ஒவ்வொரு பைசாவையும் சேமித்து தங்கள் குழந்தைகளைப் படிக்கவும், தேர்வுக்கு தயார்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால் பாஜக அரசு அவர்களின் கனவுகளை வருமான ஆதாரமாக மாற்றியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.