பரப்புரை பயணத்தில் கூடும் கூட்டமெல்லாம் கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்தது என்பது இ.பி.எஸ்.ஸுக்கு தெரியும். ஜெ.வுக்காக அவரே இப்படியான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். அதனால், அவர் நம்புவது மூன்று தரப்பினரை என்கிறார்கள் நெருக்கமானவர்கள்.
உளவுத்துறை முன்னாள் ஐ.ஜி சத்தியமூர்த்தி ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார். தேர்தல் ஆலோசகர் சுனில் தரப்பில் ஒரு பட்டியல், எஸ்.பி.சி.ஐ.டி ஒரு பட்டியல். இதில்தான், அ.தி.மு.க வேட்பாளர்கள் அடங்கியிருக்கிறார்கள். இவர்களில் செலவு செய்யக்கூடியவர்களாகவும், தனக்கு விசுவாசமாக இருப்பவர்களாகவும் கவனமாகப் பார்த்து ‘டிக்' செய்ய ரெடியாகி வருகிறார் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி.
கட்சி நிர்வாகத்துக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மா.செ.க்கள் நியமிக்கப்பட்டு, அவர்களை ஒருங்கிணைக்க மண்டல பொறுப்பாளர்களும் போடப்பட்டாலும் எடப்பாடிக்கு முழு நம்பிக்கை வந்தபாடில்லை. சீட் கொடுத்து, ஜெயித்த பிறகு மண்டல பொறுப்பாளர்களுடன் சிண்டிகேட் அமைத்து, தனக்கு எதிராக களம் அமைப்பார்களோ என்ற சந்தேகத்திலேயே இருக்கிறார், தனக்கு பதவி தந்த சசிகலாவையும் அவர் குடும்பத்தினரையுமே ஓரங்கட்டியவரான எடப்பாடி.
தேர்தல் ஆலோசகர் சுனில் தரப்பிடம் நடத்தப்பட்ட ஆலோசனையில், மூன்று லிஸ்ட்டுகளிலிருந்து விசுவாசிகளை மட்டும் தேர்வு செய்யச் சொல்லியிருக்கிறார். தேர்தலுக்கு வேறென்ன வியூகம் தேவை என்றும் கேட்டிருக்கிறார். அதன் விளைவுதான், மா.செ.க்கள் - மண்டல பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பேசிய பேச்சு.
"10 வருசமா நல்லா சம்பாதிச்சிருக்கீங்க. அதிலும் இந்த நாலு வருசம் உங்களுக்கு முழு சுதந்திரம் இருந்தது. அதனால அடிச்ச பணத்தை தேர்தலில் செலவு பண்ணுங்க. சம்பாதிச்சதில் பாதியையாவது செலவு பண்ணலைன்னா ஜெயிக்க முடியாது. நாம மறுபடியும் ஆட்சிக்கு வரலைன்னாலும், இருக்கிறதை வச்சி நிம்மதியா இருந்திடலாம்னு கணக்குப் போட்டு செலவு பண்ணாம இருந்திடாதீங்க. தி.மு.க நம்ம மேலே செம கடுப்புல இருக்குது. அவங்க ஜெயிச்சி வந்தா, என்னையும் சேர்த்து நம்ம எல்லாருக்கும் ஜெயில் களிதான்'' என்று கறார் குரலில் பேசியிருக்கிறார் பழனிசாமி.
முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க தலைமை முடிவு செய்யும் என்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் குரலும் எடப்பாடி பழனிசாமியை டென்ஷனாக்கியுள்ளது.
"பா.ஜ.கவுடன் கூட்டணி தொடரும் என அரசு விழா மேடையில் அறிவிக்க வேண்டிய நிர்பந்தந்தத்தைத் தனக்கு உருவாக்கிவிட்டு, ரஜினியைக் கட்சி ஆரம்பிக்கவும், கமலை கொம்பு சீவியும், முருகனைப் பேசவைத்தும் ஆட்டத்தைக் கலைக்கிறதா பா.ஜ.க மேலிடம் என்ற கோபமும் எடப்பாடிக்கு இருக்கிறது'' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.