தமிழகத்திற்காக தடகளத்தில் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருபவர் காரைக்குடி அருகே தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர். கதிரவன் குணசேகரன். தனது அண்ணனை பார்த்து தடகளத்தில் நுழைந்து, பள்ளியில் பயிலும்போதே மாநில அளவில் பதக்கங்களை வெல்ல ஆரம்பித்தவர். 11ஆம் வகுப்பு பயிலும்போது மாநில அளவிலான 100 மீட்டர் தூரத்தை 10.7 வினாடிகளில் கடந்த பலவருடமாக இருந்த தேசிய சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்தவர்.
தொடர்ந்து ஜூனியர், அண்டர் -14, அண்டர் -17, அண்டர் -20 ஆகிய பிரிவுகளில் தற்போது பொதுப்பிரிவிலும் களம் கண்டு சாதித்து வருகிறார். கெலோ இந்தியா 2020 -ல் 100 மீட்டரில் தங்கமும், 4*100 பிரிவில் வெள்ளியும் வென்று சாதித்தார். தமிழ்நாடு சீனியர் ஸ்டேட் மீட்டில் 100 மீட்டரில் வெள்ளியும், 4*100 ரீலேவில் தங்கம், 24வது பெடரேஷன் கப் சீனியர் கப் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி, முதலாவது நேஷ்னல் அண்டர் 23 அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி, 93வது சீனியர் ஓப்பன் ஸ்டேட் மீட்டில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி, 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம், 4*100 ரிலேவில் தங்கம், 81வது ஆல் இந்தியா இன்டெர் யூனிவர்சிட்டி அத்லெடிக்சில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி, 4*100 மீட்டரில் தங்கம் என கடந்த ஆண்டும் கதிரவன் குணசேகரனின் சாதனை பயணம் தொடர்ந்தது.
தடகளத்தில் தங்கம், வெள்ளி என குவித்தாலும், களத்திற்கு வெளியே அவரை சூழ்ந்துள்ளது வறுமைதான். வறுமைக்கு மத்தியில்தான் அவரது கால்கள் இத்தனை சாதனைகளை படைத்து வந்துள்ளது. 2019-ல் அவரது அப்பா இறந்துவிடவே குடும்பச்சூழல் காரணமாக தடகளத்தில் இருந்து விலக முடிவு செய்தார். நல்வாய்ப்பாக பல்வேறு தன்னார்வலர்கள் உதவியால் இன்று வரை தடகளத்தில் சாதித்து வருகிறார். ஜீ.வி பிரகாஷும் கதிரவனுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். பொருளாதார தடைகள், குடும்பச்சூழல் என்று பல்வேறு காரணங்கள் கடந்தும் தனது விடாமுயற்சியாலும், தன்னார்வலர்களின் உதவியாலும் தனது கால்களை அடுத்த பதக்க வேட்டைக்கு தயாராகி வருகிறார் தடகள வீரர் கதிரவன் குணசேகரன்.
கர்நாடக மாநிலத்தில் வருகின்ற பிப்ரவரி 27-29 வரையில் நடைபெறும் கெலோ இந்தியா போட்டிகளுக்கும், மார்ச் 10-13 வரையில் நடைபெற நேஷ்னல் பெடரேஷன் போட்டிகளுக்கும் தற்போது தயாராகி வரும் கதிரவன் குணசேகரன் தடகளத்தில் தனது சாதனை பயணத்தை தொடர உதவிகளை எதிர்நோக்கியுள்ளார். தமிழக அரசின் உதவி தனக்கு கிடைக்குமா என்பதும் கதிரவன் குணசேகரனின் எதிர்பார்ப்பாக உள்ளது. உதவிக்கரம் நீளும் பட்சத்தில் கதிரவன் குணசேகரனின் கால்கள் தடகளத்தில் தங்கங்களை குவிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.