ஐ.பி.எல். போட்டிக்கு எதிரான போராட்டத்திற்கு தமிழிசை சவுந்திரராஜன் வந்திருக்க வேண்டும். 'Go back Modi' என்ற முழக்கத்தை தமிழக பாஜக முன்னெடுத்திருக்க வேண்டும் என்று தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், காங்கேயம் தொகுதி எம்எல்ஏவுமான தனியரசு கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார் தனியரசு.
ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, பிரதமர் வருகைக்கு கருப்பு கொடி காட்டுவது சிறுபிள்ளைத்தனமானது. தமிழகத்தில் நடப்பவை போராட்டம் அல்ல. தேச விரோத செயல்கள். இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத வரை ஐ.பி.எல். போட்டியை தமிழகத்தில் நடத்தக் கூடாது என்பது ஒட்டுமொத்த கட்சிகளின் விருப்பம், பாஜகவை தவிர. 7 கோடி மக்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம் என்பது இவரது பேச்சில் தெரிகிறது. பாஜகவை மக்கள் நிராகரிப்பார்கள்.
தமிழ்நாட்டில் ராணுவத் தளவாடங்களை நிறுவக் கூடாது. அண்டை நாடுகள் போர் காலத்தில் எதிரிகளின் இலக்காக இருக்கக்கூடிய ஆயுத தொழிற்சாலைகள், உற்பத்தி பொருட்களைத்தான் தாக்குவார்கள். அப்படி தாக்கும்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆயுத தொழிற்சாலை மீது அபாயகரமான தாக்குதல்களை வானில் இருந்து நடத்தலாம். அதில் தமிழ்நாட்டு மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இந்த தொழிற்சாலை லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு தரும் என்பதை ஏற்க முடியாது. ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த பெல் நிறுவனம், சேலம் உருக்காலையை மூட மத்திய அரசு முயற்சி செய்தது. நெய்வேலி அனல்மின் நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முயச்சி செய்தது. ஆயிரக்கணக்கானவர்களின் வேலையை பறிக்க நினைக்கும் அரசு எப்படி லட்சக்கணக்கானவர்களுக்கு வேலையை வழங்கும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பையே நடைமுறைப்படுத்தாத, நடுவர் மன்ற தீர்ப்பை மதித்து அதனை செயல்படுத்தாத, 7 கோடி தமிழர்களுக்கு மதிப்பளிக்காத, சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்காத, முதல்வர் தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் முன்னிலையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தின் தீர்மானத்திற்கு மதிப்பளிக்காத பிரதமரை எப்படி தமிழக மக்கள் வரவேற்பார்கள். மத்திய அரசு மதிக்கவில்லை என்றுதான் பொதுமக்கள் தானாக முன்வந்து கருப்புக்கொடி போராட்டத்தில் பங்கேற்றனர்.
நேற்று நடந்த கருப்புக்கொடி போராட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளாரே?
அப்படியென்றால் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களா? ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களா?. தமிழக மக்களின் நலன்களுக்காக போராடுகின்ற அறவழி போராட்டக்காரர்களை, ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தியவர்களை கேவலப்படுத்துவது, இழிவுப்படுத்துவது, தேச விரோதிகள் என்று அடையாளப்படுத்த முயற்சிப்பது அரசியல் பண்புக்கு எதிரானது. எச். ராஜா, தமிழிசை ஆகியோர் இதுபோன்ற கருத்துக்களை பரப்ப வேண்டாம். வெகுஜன மக்களின் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
ஐபிஎல் போட்டியை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் பங்கேற்க பாஜக வந்திருக்க வேண்டும். தமிழிசை அவர்கள் வந்திருக்க வேண்டும். மோடி தமிழகத்திற்கு வரக்கூடாது என்று 'Go back Modi' என்ற முழக்கத்தை பாஜக முன்னெடுத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்களின் விருப்பத்திற்கு, தமிழக பாஜகவின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காத மோடியை வரவேற்க விருப்பவில்லை என்று தமிழக பாஜகவே எதிர்த்திருக்க வேண்டும். அப்படி எதிர்ப்பை காட்டியிருந்தால் தமிழக பாஜகவை பொதுமக்கள் நம்புவார்கள். தமிழ்நாட்டு மக்களெல்லாம் ஓரணியாக இருக்கிறார்கள். தமிழக பாஜக தனியாக இருக்கிறது என்பது புலப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குறைந்த பட்ச செல்வாக்கையும் பாஜக தற்போது இழந்துள்ளது. ஆகையால் இவர்களின் கருத்துக்களை பொருட்படுத்த வேண்டாம். இவ்வாறு கூறியுள்ளார்.