இரட்டை இலக்கத்தில் பா.ஜ.க எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்குள் செல்வார்கள் என உறுதியாகக் கூறுகிறார் பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன். நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி விவரம்:-
பா.ஜ.க.வில் அகில இந்திய மகளிர் அணித் தலைவர் பதவியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பாஜகவில் மகளிர் அணித் தலைவர் என்கிற பொறுப்பு இத்தனை வருடக் காலத்தில் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை தேசிய அரசியலில் இல்லாத நான், இந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பது வட இந்தியாவில் மிகப்பெரிய ஆச்சரியத்தையும், அதேசமயம் நல்ல வரவேற்பையும் கொடுத்துள்ளது. ஏனென்றால் தென்னிந்தியாவில் அடுத்து வரும் காலங்களில் கட்சி வளர்ச்சிக்கு இது துணையாக இருக்கும் என்று நம்புகிறார்கள். எனக்குமே இது மிகப்பெரிய பொறுப்பு. நல்லபடியாகச் செய்தாக வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி இருக்கிறது.
இந்தப் பதவியில் இருக்கும்போதே ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
நிச்சயமாக. ஒவ்வொருவருமே பொறுப்புகளில் வரும்போது, தங்கள் காலத்தில் ஒரு விசயத்தை நல்லபடியாகச் செய்தாக வேண்டும் என்ற ஆவல் இருப்பது இயல்புதான். அந்த வகையில் மகளிரை முன்னேற்ற வேண்டும், மகளிரை முன்னிலைப்படுத்தி வளர்ச்சி அடைய வேண்டும் எனப் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். அதனுடைய பலனை எடுத்துச் செல்வதிலும், எடுத்துச் சொல்வதிலும் மகளிரணி முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.
தமிழகம் அறிந்த பா.ஜ.க. தலைவர்களில் நீங்களும் ஒருவர். மாநிலப் பொறுப்பு கொடுத்திருந்தால், மாநிலத்தில் கட்சி பெரிய அளவில் வளர வாய்ப்பிருந்திருக்கும் என்கிறார்களே?
இப்போது தமிழகத்தைத் தாண்டி மற்ற மாநிலங்களிலும் கட்சியை வளர வைப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இதன் வாயிலாகத் தமிழகத்தையும் உள்ளடக்கித்தான் இந்தப் பொறுப்பு என்பதினால், பாஜகவின் வளர்ச்சிக்கு என்னுடைய பொறுப்பில் இருந்து பணியாற்றுவேன்.
தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் களம் எப்படி உள்ளது?
நாங்களும் எங்களது பணிகளைத் தொடங்கிவிட்டோம். எங்களுடைய நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடக்க இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பொறுப்பாளர்களை அறிவிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே, நாங்கள் களத்தில் இருக்கிறோம். தேர்தல் களம் என்பது பாஜகவுக்கு புதிதாக ஆரம்பிக்கக்கூடிய ஒன்று அல்ல. வருடத்தின் 365 நாட்களும் பா.ஜ.க மக்கள் பணியில், அரசியல் பணியில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறது. வரக்கூடிய காலங்களில் எங்கள் பணிகள், அதனுடைய வேகம், வீச்சு அதிகமாக இருக்கும். சமீபத்தில்தான் வெற்றிகரமாக வெற்றிவேல் யாத்திரையை முடித்திருக்கிறோம். இதன் மூலமாக மாவட்டந்தோறும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த யாத்திரையில் பங்குகொண்டிருக்கிறார்கள். யாத்திரை மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. அடுத்தகட்டமாக தேர்தல் களத்தில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது, மக்களை மத்திய அரசின் திட்டங்கள் வாயிலாகத் தொடர்பு கொள்வது என வெகு வேகமாக எங்களது பணிகள் தொடரும்.
சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் நம்பிக்கை என்ன?
இந்தச் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சியினுடைய எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் நுழைவார்கள் என்பது பாஜகவின் நம்பிக்கை. இரட்டை இலக்கத்தில் சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்பது எங்களது இலக்கு என்றார் உறுதியாக.