
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிவை பதவி விலக வலியுறுத்தியும், வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் மதுரையில் இன்று (26-04-25) மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு. பூமிநாதன் மற்றும் கழக துணைப் பொதுச்செயலாளர் தி. மு.இராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கலந்துகொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரைமாநகர் மாவட்ட செயலாளர் எஸ். முனியசாமி வரவேற்றார், பூமிநாதன் தொடக்க உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் பேசிய துரை வைகோ, “கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு எனது அஞ்சலி செலுத்துகிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மன அமைதியையும் ஆறுதலையும் தந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக்கொள்கிறேன். குழந்தைகளும் பெண்களும் கதற கதற அவர்களின் தந்தையர்களும் கணவர்களும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். காக்கா குருவிகளை சுடும் போது கூட வன்மத்தோடு சுட்டிருக்க மாட்டார்கள். ஆனால், இங்கு வன்முத்தோடு சுட்டிருக்கிறார்கள் சுடப்பட்ட அப்பாவி மக்களுக்கு எந்த அரசியலும் தெரியாது, வன்மமும் தெரியாது. தாக்குகின்ற தீவிரவாதிகளின் குருற நோக்கமும் தெரியாது எதற்காக நாம் சுடப்படுகிறோம் என்றும் தெரியாது. இது மதம் சார்ந்ததா என்றால் அதுவும் கிடையாது. எந்த மதமும் இது போன்ற இழி செயல்களை ஆதரிப்பதில்லை. இந்து மதமும் இஸ்லாமோ கிறிஸ்தவமோ எந்த மதமும் இதுபோன்ற இழிசெயலை ஆதரிப்பதில்லை. இது போன்ற இழி செயல்கள் மிகப்பெரிய பாவச் செயல் என்றே அனைத்து மதமும் கூறுகிறது. மதத்துக்கும் இதற்கும் என்னையா சம்பந்தம்? ஆனால் இதை மதப் பிரச்சனையாக திசை திருப்புகிறார்கள்.
இந்த மேடையின் முன்னாள் அமர்ந்திருக்கிற மதுரையில் உள்ள நம் மாமாக்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இதை ஆதரிக்கிறார்களா? கிடையாது. ஆனால், சமூக வலைதளங்களில் எதை பரப்பிக் கொண்டுள்ளார்கள் இந்த மதவாத சக்திகள்? என்ன அக்கிரமம்? இந்த துயர சம்பவத்தை வைத்து, இந்த கொடூரச் செயலை வைத்து, சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் பிணங்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் மதவாத வலதுசாரி அரசியல் சக்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்களே அது உங்கள் கையில் தான் உள்ளது. பாகிஸ்தான் துணை பிரதமர், காஷ்மீர் விடுதலைப் போராட்ட வீரர்கள் இதை செய்திருக்கலாம் என்று ஒரு அபாண்டமான விஷமத்தனமான கருத்தை முன்வைக்கிறார். நான் ஒன்றை சொல்கிறேன். விடுதலைப் போராட்ட வீரர்கள் தங்கள் உயிரை துச்சம் என்று நினைத்து போராடக் கூடியவர்கள். ஒருபோதும் இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். அவர்கள் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினரை எதிர்ப்பார்கள். துப்பாக்கி ஏந்திய காவல்துறையை தாக்குவார்கள். ஆனால், இது போன்ற அப்பாவி மக்களை ஒருபோதும் தாக்க மாட்டார்கள். ஈழ விடுதலைப் போரிலும் சரி, பாலஸ்தீனத்திலும் சரி அப்படி யாரும் நடந்து கொள்ளவில்லை. இதற்கெல்லாம் காரணம் யார்? நான் அரசியலுக்கு வந்த ஏழு வருடத்திற்கு முன்பாக சொன்னேன், வலதுசாரி சக்திகள் தான் இவைகளுக்கு காரணம் என்று.

இந்த தீவிரவாத இளைஞர்களுக்கு இளம் வயதிலேயே மத ரீதியிலான வன்மத்தை ஊட்டி இருப்பார்கள். பின் கையில் துப்பாக்கியை கொடுத்து அனுப்புகிறார்கள். இதற்கு காரணம் இஸ்லாமிய வலதுசாரி சக்திகள். உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி உண்பதற்காக அடித்துக் கொல்கிறானே அது இந்துத்துவ வலதுசாரி சக்திகள். இலங்கையில் நமது தொப்புள் கொடி உறவுகளான தமிழர்களை கொன்று குவித்தானே அது சிங்கள இனவாத வலதுசாரி சக்திகள். ரொகிங்கியா முஸ்லிம்களை கொன்று குவித்தார்களே அது புத்த மதவலதுசாரி சக்திகள். நம் தமிழ்நாட்டில் சாதி அரசியலை செய்து கொலைகளுக்கு காரணமான சக்திகளும் வலதுசாரி சக்திகள் தான். இந்த வலதுசாரி அரசியல் நம் நாட்டை விட்டு எப்போது வெளியேறுகிறதோ அன்றுதான் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட இது போன்ற துயர சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி ஏற்படும். மக்கள், அரசியலில் ஈடுபடுபவர்களை அவர்களின் மக்கள்நல பணிகளை பார்த்து, அவர்கள் செய்யும் செயல்கள் நன்மையா தீமையா என்பதை பார்த்து தலைவர்களையும், அரசியல் இயக்கங்களையும் தேர்ந்தெடுங்கள். ஒருபோதும் சாதி மதத்தை வைத்து தேர்ந்தெடுக்கக்கூடாது என்று என் அன்பான பணிவான வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் சையத் அடில் ஹுசைன் என்ற இஸ்லாமிய இளைஞனும் ஒருவர். இவர் சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற முயற்சித்தபோது தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். குதிரை சவாரி மூலம் சொற்ப வருமானம் ஈட்டி தனது ஏழைக் குடும்பத்தை பராமரித்து வந்தவர். நமது சகோதரன் கொல்லப்படுகிறானே என்ற ஆதங்கத்தில் தீவிரவாதிகளிடமிருந்து துப்பாக்கியை பறிக்கும் போராட்டத்தில் வீர மரணம் அடைந்துள்ளார். இந்துக்களை காப்பாற்றும் போராட்டத்தில் அவன் இறந்திருக்கிறான். இங்கு எங்கு மதம் வந்தது? சாவது யார்? சுடுவது யார்? என்று அவன் மதத்தை பார்க்கவில்லையே. அது அல்லவா மனிதநேயம். அந்த தீவிரவாத செயல் இந்தியாவுக்கு எதிரானது மட்டுமல்ல இஸ்லாத்திற்கும் எதிரானது மனிதநேயத்திற்கும் எதிரானது.
ஒரு இந்து சகோதரி அவர் கண்முன்னே அவரது தந்தை சுட்டுக் கொல்லப்படுகிறார். தன் இரண்டு குழந்தைகளை காப்பாற்ற பதறி அடித்து ஓடியுள்ளார். அதை பார்த்த முசாஃபிர் என்ற வாகன ஓட்டி அவர்களை காப்பாற்றி அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துவிட்டு, நண்பர் சமீருடன் சென்று அந்தப் பெண்ணின் தந்தையின் சடலத்தின் முன் இரவு முழுதும் காவல் காத்திருக்கிறார். அந்தப் பெண்மணி சொல்கிறார், காஷ்மீரில் என் தந்தையை இழந்தேன்; அதே சமயம் இரண்டு சகோதரர்கள் கிடைத்துள்ளார்கள் என்று. இது அல்லவா மனிதநேயம். வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு என நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. தமிழ்நாட்டை தாண்டி உத்திரபிரதேசம், ஜார்கண்ட், பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு சென்றால், அங்கு கல்வி இல்லை, வேலையில்லை. அவர்கள் வேலைவாய்ப்பு தேடி தமிழ்நாட்டிற்கு சாரை சாரையாய் வந்து கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு ஒன்றிய அரசிடம் பதில் உண்டா? பல பகுதிகள் வறட்சியான பகுதிகளாக, வானம் பார்த்த பூமியாக விவசாயமே செய்ய முடியாத பகுதிகளாக, தொழிற்சாலைகளே இல்லாத பகுதிகளாக உள்ளது. அவர்கள் இந்த 100 நாள் வேலையைத்தான் நம்பி உள்ளனர். அதை வைத்துத்தான் அவர்களின் இல்லங்களில் அடுப்பெரிகிறது, மூன்று வேளை உணவு உண்ண முடிகிறது. ஆனால், அதற்கு போதிய நிதி ஒதுக்காத ஒன்றிய அரசிடம் பதில் உண்டா? இல்லை. இதையெல்லாம் மடைமாற்றத்தான் இந்த வக்ஃப் திருத்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்” எனப் பேசினார்.