Skip to main content

துக்ளக் படிப்பவர்கள் அறிவாளி என்றால் அதை படிக்காதவர்கள் முட்டாள்களா..? - திருமுருகன் காந்தி கேள்வி!

Published on 27/01/2020 | Edited on 27/01/2020

துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில செய்திகள் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது காவல்துறையினரிடம் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசிய பேச்சுக்கு நீங்கள் கருத்து தெரிவித்திருந்தீர்கள். உலகம் முழுவதும் அறிந்த, தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தை அவர் தெரிவித்த ஒரு கருத்துக்காக அவரை முட்டாள் என்று விமர்சனம் செய்வதை எப்படி பார்க்கிறீர்கள்?

தற்போது இந்தியாவில் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும், தமிழ்நாட்டில் தற்போதைய சூழ்நிலைகளை கவனிக்க வேண்டும். குடியுரிமை சட்டத்தை  எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. அஸ்ஸாமில் 19 லட்சம் மக்களை திறந்தவெளி சிறையில் அடைந்து வைத்திருக்கிறார்கள். நமக்கும் அந்த நிலை வந்து விடுமோ என்ற மற்ற மாநில மக்கள் பயப்படுகிறார்கள். ஆனால் இங்கே என்ற நடைபெறுகிறது. 5ம் வகுப்பு மாணவனுக்கு பொதுத்தேர்வு, நீட் தேர்வு, மீத்தேன் எடுக்கும் திட்டம் என பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ள தமிழக மக்கள் அதில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். 

ஆனால் பெரியாரை பற்றி எதுவும் தெரியாமலும், திராவிட சிந்தாந்தங்களை பற்றி எதுவும் அறியாமலும் அவதூறாக ஒரு கருத்தை பொதுவெளியில் பேசுகிறீர்கள். தன்னுடைய முக்கியத்துவமும் தெரியாமல், வரலாற்றின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள், பொதுமக்களின் போராட்டத்தை உணராதவர்களை வேறு என்னவென்று சொல்வீர்கள். உங்களுக்கு பின்னால் இருந்துகொண்டு வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் பாஜக-வுக்காக அவர்கள் இத்தனை ஆண்டுகாலமாக உடைக்க முடியாத பெரியாரின் பிம்பத்தை, நீங்கள் சொல்வது போல் உலகம் அறிந்த உங்களை வைத்து அவர்கள் உடைக்க முயலும் போது அதற்கு நீங்கள் இடம் கொடுத்தீர்கள் என்றால் உங்களை வேறு என்னவென்று சொல்வது. 
 

ghj



அவர் என்ன சொல்கிறார், துக்ளக் படிப்பவர் எல்லாம் புத்திசாலிகள் என்றால் துக்ளக் படிக்காதவர்கள் எல்லாம் முட்டாள்களா? எதை சொல்ல வருகிறீர்கள். துக்ளக் யாருக்கான பத்திரிக்கை. துக்ளக் வெகுஜன மக்களின் பிரச்சனைகளை ஒருபோதும் பேசியதில்லை. இன்றைக்கு உழைப்பவர்கள் பற்றியோ, பாமரர்களை பற்றியோ, குடிசையில் வசிப்பவர்கள் பற்றியோ அவர்கள் ஒரு போதும் பேசியதில்லை, பேசப்போவதுமில்லை. விவசாயிகள் பிரச்சனை பற்றி துக்ளக் என்றைக்காவது எழுதியிருக்கா அல்லது பேசியிருக்கா? என்றைக்கும் அதனை அவர்கள் செய்ததில்லை. அதனுடைய வரலாறு என்ன, குறிப்பிட்ட மக்களுக்கு ஆதரவாக பேசுவது என்பது வேறு, பெருவாரியான மக்களுக்கு எதிராக பேசவது என்பது வேறு. அப்படி பேசித்தான் துக்ளக் வளர்ந்திருக்கு. 

இதுதான் நூறு சதவீதம் உண்மை. அப்படிப்பட்ட ஒரு பத்தரிக்கையை புத்திசாலி என்றால் நீங்கள் எந்த மக்களை புத்திசாலி என்கிறீர்கள், யாரை மடையன் என்கிறீர்கள். இன்றைக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று கொண்டு வருகிறது. அதை பற்றி என்றைக்காவது நீங்கள் பேசி இருக்கிறீர்களா? என்றால் அதைபற்றி இன்று வரை வாய் திறக்கவில்லை. இந்த குடியுரிமை திருத்த சட்டத்தில் ஏதோ முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படுவதை போல சிலர் செய்திகளை சொல்கிறார்கள். அது உண்மையல்ல, ஏனெனில் அஸ்ஸாமில் திறந்தவெளி சிறையில் இருப்பவர்கள் எல்லாம் முஸ்லிம்களா? இது இந்தியாவில் இருக்கின்ற அனைவருக்குமான பிரச்சனையாகத்தான் இதனை எதிர்கொள்ள வேண்டும். தமிழகம் அப்படித்தான் தொடர்ந்து பார்க்கும். ஆனால் அதை எதைபற்றியும் பேசாமல் தேவையற்ற விஷயங்களில் கருத்து தெரிவிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.