நடிகர் விஷாலின் அறிமுக படமான 'செல்லமே' படத்தின் இயக்குநர் காந்தி கிருஷ்ணா. சில தினங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நடிகர் விஷால் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில், சினிமா தொடர்பாக சில முக்கிய தகவல்களை அவரிடம் கேள்விகளாக நாம் முன்வைத்தோம். அதற்கு அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,
இந்தியன் படத்தின் கதையை முதலில் ரஜினியிடம் தான் இயக்குநர் ஷங்கர் கூறியதாகவும், ஆனால், ரஜினி முதலில் அதில் நடிக்க மறுத்ததாகவும், பிறகு படம் வந்த பிறகு நீங்கள் என்னிடம் இந்தமாதிரி கதை சொல்லவில்லையே என்று ஷங்கரிடம் கேட்டதாக ஒரு கதை நீண்ட நாட்களாகவே தமிழ் சினிமா உலகத்தில் சுற்றுகிறதே, இது உண்மையா?
இந்தியன் படத்தை பார்த்த அனைத்து நடிகர்களுக்கு அந்த ஃபீல் இருக்கத்தான் செய்யும். ஒரு நல்ல படித்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தால் யார்தான் வருத்தப்பட மாட்டார்கள். எல்லா நடிகர்களுக்கும் அந்த இழப்பு இருக்கத்தான் செய்யும். அவர்களும் மனிதர்கள் தானே.
முதல்வன் படத்தின் கதையை கூட முதலில் நடிகர் விஜய்யிடம் கூறியதாகவும், அவர் முடியாது என்று கூறியதால்தான் அந்த படத்தில் அர்ஜீன் நடித்ததாக கூறுவது உண்மையா?
யாரும் வேண்டாம் என்று கூறமாட்டார்கள். ஷங்கர் சார் கதை சொல்லும் விதமே ரொம்ப ஃபோர்ஸா இருக்கும். அதை கேட்பவர் எடுத்துக்கொள்ளும் மனநிலைதான் ஒவ்வொரு நடிகருக்கும் வேறுபடும். முதல்வன் பட கதை என்பது வேற லெவல் கதைக்களம். ஒரு முதல்வரை எதிர்க்கும் மாதிரியான கதையை சொன்னால், எந்த நடிகராவது அல்லது தயாரிப்பாளராவது உடனடியாக ஏற்றுக்கொள்வார்களா? நாளைக்கு பிரச்சனை வருமே, கட்சிகாரர்கள் அடிப்பார்களே என்றுதான் நினைப்பார்கள். இதற்குதான் சிலபேர் யோசிப்பார்களே தவிர படத்தில் நடிக்க பிடிக்காமல் மறுப்பதில்லை. அதற்காக கதையில் எந்த சமரசமும் அவர் செய்துகொள்வதில்லை. தனிப்பட்ட தாக்குதலை தன் படங்களில் ஒருபோதும் ஷங்கர் சார் அனுமதிப்பதில்லை. படத்தின் டப்பிங் முடியும் வரையில் அந்த கொள்கையில் இருந்து அவர் பின்வாங்க மாட்டார். சிலபேர் குறிப்பிட்ட நபர்களை தாக்கி நேரடியாகவே படங்களை எடுத்துள்ளார்கள். ஆனால், அத்தகைய செயலை ஷங்கர் சார் இத்தனை ஆண்டுகால சினிமா அனுபவத்தில் ஒருமுறை கூட செய்ததில்லை. ஜென்டில்மேன் கதையில் நடிகர் சரத்குமார் நடிப்பதாக முதலில் முடிவு செய்யப்பட்டு பத்திரிக்கை கூட அடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஒரே இரவில் நடிகர் மாற்றப்பட்டு அர்ஜீன் நடித்தார். அந்த வகையில் சினிமாவில் சில சூழ்நிலைகளே நடிகர்களை முடிவு செய்யும். சில நபர்களிடம் பயம் இருக்கிறது. அதுவே சில படங்களில் நடிக்க, நடிகர்கள் தயங்குவதற்கு காரணமாக உள்ளது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் அது மாறும். அதன் காரணமாகவே ரஜினி, விஜய் ஆகிய இருவரும் ஷங்கர் சாருடன் இணைத்து தொடர்ந்து படம் செய்தார்கள். அதனால், சினிமாவில் சகஜமான ஒன்றுதான்.
பேஸ்புக்கில் நீங்கள் 'சினிமா வேண்டுமா, பாவங்கள் செய்ய பயப்பட கூடாது. ஆனால்'...என்று ஒரு போஸ்ட் போட்டு இருந்தீர்கள். அதற்கு என்ன அர்த்தம்?
அதை நீங்கள் தான் யோசித்து கண்டுபிடிக்க வேண்டும், ஏன்னா பட்டால்தான் சில விஷயங்களை புரிந்துகொள்ள முடியும்.
தமிழ் சினிமாவில் இருக்கும் மற்ற இயக்குநர்கள் எல்லோருக்கும் இதற்கான அர்த்தம் தெரியுமா?
கண்டிப்பாக தெரியும். உங்களுக்கு இந்த வயதில் புரியாமல் இருக்கலாம். ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு நிச்சயம் புரியும்.