சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் (உபா) செய்யப்பட்டுள்ள திருத்தத்தை வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் நினைத்தால் எந்த ஒரு தனிநபரையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்திவிடலாம். அவர் எந்தக் கோர்ட்டுக்கும் அப்பீல் செய்ய முடியாது.
இந்தச் சட்டத்தின்படி பாதுகாப்பு நிறுவனங்கள் யாரை பரிந்துரைக்கிறதோ அவரை பயங்கரவாதி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புக்கொண்டு கையெழுத்து இட வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு, பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட நபர் உள்துறை அமைச்சகத்துக்கு அப்பீல் செய்யலாம். அந்த அப்பீல் மீது 45 நாட்களில் அமைச்சகம் முடிவு செய்யும்.
அதிலும் அவர் மீதான முத்திரை களையப்படாவிட்டால், மத்திய உள்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற அல்லது பணியிலிருக்கிற மூன்று நீதிபதிகள் கொண்ட கமிட்டி முன் அப்பீல் செய்யலாமாம்.
அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் தீர்வு என்ன என்பதோ, பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட நபருக்கு என்ன தண்டனை, எத்தனை ஆண்டு சிறைவாசம் என்பதெல்லாம் முடிவு செய்யப்படாத விஷயங்களாக இருக்கின்றன.
பல்வேறு நாடுகளில் உள்ள சட்டங்களின் அடிப்படையில்தான் இந்தச் சட்டதிருத்தம் செய்யப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா.விடம் இந்தியா முறையிட்டபோது, இந்தியாவில் ஏன் அவரை பயங்கரவாதி என்று அறிவிக்காமல் இருக்கிறீர்கள் என்று அதிகாரிகள் கேட்டார்களாம். அதன் விளைவாகத்தான் இந்தச் சட்டத்திருத்தமாம். இந்தச் சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் முதலில் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படப் போகிறவர்கள் மசூத் அசாரும், லஸ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீதும்தான் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
அவர்கள் இப்படிக் கூறினாலும், பாஜகவுக்கு எதிரான சக்தி வாய்ந்த பிரச்சாரகர் யாராக இருந்தாலும் அவர்கள் அச்சுறுத்த அமித் ஷாவும் பாஜகவும் இந்த சட்டத்தை பயன்படுத்துவார்கள் என்பதே அரசு சொல்ல வரும் சேதி என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
குஜராத்தில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய ஹர்திக் படேல் போன்றவர்கள் தேசப்பாதுக்காப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதே அமித் ஷா, மோடி ஆகியோரின் நடவடிக்கைகளுக்கு உதாரணம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அமித் ஷாவின் கடந்த கால கிரிமினல் நடவடிக்கைகள், அவர் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய அவர் மேற்கொண்ட வழிமுறைகள் ஆகியவற்றையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.