ஒவ்வொரு நாட்டிற்கும், மாநிலத்திற்கும் தனித்தனி அடையாளங்கள் உள்ளன. மாநில சின்னம், மாநில கொடி, மாநில வாழ்த்துப் பாடல், மாநில விலங்கு, மாநில பறவை, மரம், நடனம் என ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொன்று அடையாளமாக இருக்கும். அதேபோல் தற்போது மாநிலத்தின் வண்ணத்துப்பூச்சியாக தமிழ் மறவன் என்ற வண்ணத்துப்பூச்சியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
தமிழ் மறவன் இதன் அறிவியல் பெயர் (Cirrochroa thais), இதன் ஆங்கிலப் பெயர் தமிழ் இயோமேன் (tamil yeoman) கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த முயற்சியின் முடிவாக இந்த வண்ணத்துப்பூச்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். தமிழ் லேஸ்விங், தமிழ் இயோமேன் ஆகிய இரு வண்ணத்துப்பூச்சிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன. கடைசியில் தமிழ் மறவன் தேர்ந்தெடுக்கப்பட்டது.
6 முதல் 7.5 செ.மீ வரை வளரக்கூடிய இது, வேகமாகவும், நேராகவும் பறக்கக்கூடியது. ஒருசில இறக்கை அசைவிலேயே நீண்டதூரம் செல்லக்கூடியது. இது செங்குத்தாக ஒரு பிண்ணப்பட்ட சங்கிலியைப்போன்று முட்டையிடும் இதில் 8 முதல் 10 லார்வாக்கள் இருக்கும். மறைவான அல்லது இலைக்கு அடிப்பகுதியிலேயே முட்டையிடும்.
இந்த வண்ணத்துப்பூச்சி அதிவேகமாக பறந்துசெல்லக்கூடியது இதனால்தான் அது தமிழ் மறவன் என்ற பெயர் பெற்றுள்ளது. மாநிலத்தின் மொழியை பெயராக சூட்டப்பட்டிருப்பதாலும், தமிழ் கலாச்சாரம், வீரத்தை குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டிருப்பதாலும், தென்னிந்தியாவின் மிக அழகிய வண்ணத்துப்பூச்சிகளில் இதுவும் ஒன்றாக இருப்பதாலும் இந்த வண்ணத்துப்பூச்சியை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசின் அரசாணையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வண்ணத்துப்பூச்சி மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும். நீலகிரியைப் பொறுத்தவரை முதுமலை புலிகள் காப்பகம், குன்னூர், கூடலூர் ஆகிய இடங்களில் காணலாம். இதுவரை கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் மட்டுமே மாநிலத்திற்கான வண்ணத்துப்பூச்சியை அறிவித்துள்ளன. இவைகளைத்தொடர்ந்து தமிழ்நாடு 5வது மாநிலமாக அறிவித்துள்ளது.