நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்கள் எப்போதும் தடாலடி கருத்துகளைக் கொண்டதாகவே இதுவரை இருந்திருக்கிறது. அதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் அவர் பேசியிருப்பது அக்கட்சியினருக்கு மகிழ்ச்சியையும், ஆளுங்கட்சியினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், தன்னைக் குறிப்பிட்ட கட்சியினர் சங்கி என்று அழைப்பதற்கும், பி டீம் கட்சி என்று கூறுவதற்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போது யாரும் எதிர்பாரா வகையில் திடீரென காலணியை தூக்கிக் காட்டி அதிர்ச்சி ஏற்படுத்தினார். பொதுமேடையில் அவர் காலணியை காட்டியது தொடர்பாக சமூகவலைதளங்களில் அவருக்கு எதிராக கடும் எதிர்ப்புக்களை பதிவு செய்யப்பட்டது.
பிற கட்சிகளை சார்ந்தவர்களும் இது மிகவும் தவறான முன் உதாரணமாகிவிடும் என்றும், இதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நாம் காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியிடம் நாம் கேட்ட போது அவர் கூறியதாவது,
" அவரின் செயல்பாடுகளை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். கனத்த இதயத்தோடு நாம் இதைப்பற்றி பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நான் துவக்கத்தில் அவரின் பேச்சுக்களையும், அவரின் தமிழ் வார்த்தைகளையும் கேட்டு அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். ஆனால் அவர் எப்போது மேடையில் காலணியை எடுத்துக்காட்டினாரோ அப்போது அனைத்தும் மாறிப்போனது. தான் என்ற அகந்தை, ஆணவம், இறுமாப்பு இந்த மாதிரியான பேச்சுக்களை பேச வைக்கிறது. அதையும் தாண்டி ஏதோ ஒரு அதிகார மையத்தின் ஆசி அவருக்கு இருக்கிறது என்பதே அவரின் பேச்சு வழியாக நாம் புரிந்துகொள்ள முடிகின்ற ஒரு செய்தியாக இருக்கிறது.
இந்த இந்தியாவில் உச்சபட்ச பதவி ஒன்று இருக்கிறது என்றால் அது பிரதமர் பதவி தான். அந்த பதவியில் தான் நேரு முதல் இன்றைக்கு இருக்கிற மோடி வரை அமர்ந்திருக்கிறார்கள். இந்த பதவியில் கூட அதிகபட்ச அதிகாரத்தோடு அமர்ந்திருந்தவர் என்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர் இந்திராகாந்தி. அவரே கைவிலங்கு இட்டு சிறைச்சாலை சென்ற வரலாறு எல்லாம் இந்திய ஜனநாயகத்தில் நிகழ்ந்துள்ளது. எனவே எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற எண்ணம் அரசியலில் இந்த மாதிரி பேசுபவர்களை தனிமைப்படுத்திவிடும். அவருக்கு ஆணவம், அகம்பாவம் எல்லாம் எல்லை மீறிவிட்டது, இதோடு நிறுத்திக்கொள்வது என்பது அவருக்கு மிக நல்லது. தன் பிள்ளைகள் மற்றும் மனைவிக்காகவாவது இதே மாதிரி பேசுவதை அவர் நிறுத்த வேண்டும். இது அவர்களுக்கு புகழைத் தராது" என்றார்.