Skip to main content

தமிழனுக்கு மதம் இருக்கிறதா...அரசியல் சூழ்ச்சி...கீழடி தரும் அதிர்ச்சி தகவல்!

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

இந்திய வரலாற்றை வடக்கின் பார்வையிலிருந்தே எழுதிவந்த ஆய்வாளர்கள் தெற்கு நோக்கித் திரும்பவேண்டும் என்பதைப் பன்னெடுங்காலமாக வலியுறுத்தி வரப்பட்ட நிலையில், ஹரப்பா, ராகிகடி புதைபொருள் ஆய்வுகள் வரிசையில் அதனை உறுதியாக மெய்ப்பித்திருக்கிறது கீழடி. சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ளது பள்ளிச்சந்தைப் புதூர். இங்குள்ள உழவுநிலமான மண்மேட்டில் தொல்லியல் எச்சங்கள் பலமுறை கண்டெடுக்கப்பட்ட நிலையில், 2015-ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடங்கியது மத்திய தொல்லியல் துறை. அது நடத்திய மூன்றுகட்ட ஆய்வுகளில் கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் நாகரிகம் கி.மு.3-ம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டது. ஆனால், மத்திய தொல்லியல் துறையின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, நான்காம் கட்ட ஆய்வை 2018-ல் கையிலெடுத்தது மாநில தொல்லியல் துறை.

 

keeladi



தமிழகத்தில் நிலவிய சங்ககால பண்பாட்டு வரலாற்று ஆய்வில் மாபெரும் திருப்புமுனையாக இந்த ஆய்வு அமையுமென்று அதுவரை யாரும் எதிர்பார்க்கவில்லை. கீழே தோண்டத்தோண்ட தமிழரின் பெருமையை மென்மேலும் உயர்த்தி இருக்கிறது கீழடி. வைகை நதிக்கரை நாகரிகமாக கீழடியில் வசித்துவந்த தமிழரின் நாகரிகம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், அதாவது 2,600 ஆண்டுகள் பழமையான சிறப்பம்சங்களைக் கொண்டிருந்ததையும் இந்த ஆய்வு உறுதிப் படுத்துகிறது.

 

research



சிந்துச் சமவெளி நாகரிகம் தொல்தமிழர் நாகரிகம் என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆய்வுகள் வழியாக உறுதிப்படுத்தினர். அதை ஆரிய நாகரிகமாக சித்தரிக்க எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியையும், வரலாற்று தொன்ம ஆதாரங்கள் முறியடித்து வருகின்றன. குறிப்பாக ஹரியானா மாநிலம் ராகிகடியில் எடுக்கப்பட்ட 4,500 ஆண்டுகள் பழமையான மனித எலும்புக்கூடுகளின் மரபணு ஆய்வு முடிவு, ஸ்டெப்பி புல்வெளிப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துவந்த ஆரியர்களின் மரபணுக்களோடு ஒத்துப் போகவில்லை என்பதை உறுதிசெய்தது. மேலும், இந்தியா முழுமைக்கும் பரந்துவிரிந்த நிலப்பரப்பில் வாழ்ந்த, ஆரியர்களுக்கு முற்பட்ட மனிதர்களின் மரபணுவாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் விவாதிக்கப்பட்டன.

 

keeladi



இந்நிலையில், உலக அரங்கில் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும் புதிய பலமாக கீழடி அகழாய்வு முடிவுகள் பார்க்கப்படுகின்றன. சங்ககாலத் தமிழரின் வைகை ஆற்று நாகரிகத்தில் வேளாண் சமூகமாக, நகர நாகரிகமாக, வளமும் செழுமையுமாய் நம் மூதாதையர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கீழடியில் கிடைத்துள்ளன. அகழாய்வு நடந்த பகுதி தொழில்நகரமாக இருந்திருக்கிறது. நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், சுட்ட செங்கற்களும், சுண்ணாம்பும், கூரை ஓடுகளும் கொண்டு எழுப்பப் பட்டவை. பூச்சுக்காக பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்புச் சாந்தில் 97 சதவீதம் சுண்ணாம்பு இருந்ததுதான் இத்தனை ஆண்டுகாலம் அவை நிலைத்திருந்ததற்கான காரணம்.

இந்தியாவிலேயே மிகவும் பழமையான சிந்துச் சமவெளி பண்பாட்டின் வரிவடிவங்களின் நீட்சியாகவும், தமிழ் பிராமி எழுத்துகளின் முன்னோடியாகவும் கீறல்கள் எனப்படும் வரிவடிவங்கள் பார்க்கப்படுகின்றன. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பானை ஓடுகளில் இந்தக் கீறல்கள் இடம்பெற்றிருப்பதும், அவை சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகளோடு ஒத்துப்போவதும் இந்தியா முழுமைக்கும் தொல்தமிழர் நாகரிகம் பரவிக் கிடந்ததற்கான சான்றுகளுக்கும், பார்வைக்கும் வித்திடுகின்றன. அதுபோக, சங்ககாலத்தில் புலவர்கள் மட்டுமின்றி, எளிய மக்களும் எழுத்தறிவு பெற்றிருந்ததற்கான ஆதாரங்களாக அவை விரிகின்றன.


வைகை நதிக்கரை நாகரிகத்தில் வேளாண் சமூகமாகவும், கால்நடைத் தொழிலை முதன்மையாகக் கொண்டும் செழுமையாக வாழ்ந்திருக்கிறார்கள் தமிழர்கள். அங்கு கிடைத்த உயிரினங்களின் எலும்புகளில் வெட்டுத் தழும்புகள் இருப்பதன்மூலம், உணவுக்காக அவற்றைப் பயன்படுத்தியதும் தெரியவருகிறது. திமிலுள்ள காளை, பசு, காட்டுப்பன்றி, வெள்ளாடு, எருமை, மயில் போன்ற உயிரினங்களாகவே அவை இருப்பதாலும், ஆரியம் தன் புராணங்களில் முன்வைக்கும் குதிரை இல்லாதபடியாலும், இது ஆரியம் நுழைவதற்கு முந்தைய நாகரிகம்தான் என்பதை நிறுவ இயலும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கீழடி அகழாய்வில் சுடு மண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650-க் கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், 35 காதணிகள், அணிகலன்கள், தங்கம், செம்பு, இரும்பு போன்ற உலோக தொல்பொருட்கள் கிடைத்துள்ள போதிலும், மத வழிபாட்டுக்கான எந்தவித ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆரியர்களின் வேத நாகரிகத்துக்கு மாறான, தனித்துவமிக்க இயற்கை சார்ந்த சமூகமாக தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதையே கீழடியும் உண்மையாக்குகிறது. இதன்மூலம், எந்தவொரு மத அடையாளத்தையும் தமிழர்கள் கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் எழுதப்படுவதற்கு முன்பே அந்த வாழ்க்கை முறையைத் தமிழர்கள் கடைப்பிடித்திருப்பதும் தெரிய வருகிறது.

தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்யும் இந்தப் பணியை சிறப்புடன் மேற்கொண்டு ஆய்வு முடிவுகளை வெளியிடுவதில் முனைப்பு காட்டிய தமிழக தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., தீராத எழுத்துப்பணியின் மூலம் முறையான அகழாய்வு மேற்கொள்ள வலியுறுத்திவந்த சு.வெங்க டேசன் எம்.பி., அகழாய்வுக்கான நிலத்தை வழங்கியவர்கள் என எல்லோருடைய மதிப்பையும் இன்னும் பல படிகள் கூட்டியிருக்கிறது கீழடி. தமிழகத்தின் மீதான மத்திய அரசின் போக்குகளைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும், கீழடி விவகாரத்தில் உறுதியாக நின்ற தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் பாராட்டப்படுகிறார்.

பெருமையும் தொன்மையும் மிக்க ஆய்வுக்காக தன் விளைநிலத்தை வழங்கிய பேராசிரியர் கரு.முருகேசன், மத்திய தொல்லியல் துறை ஆய்வில் பல அரிய தகவல்களை வெளிக் கொண்டு வந்த டாக்டர் அமர்நாத், அவரை அந்தப் பணியிலிருந்து மாற்றி, அகழாய்வு பணிகளை முடக்க முயன்ற மத்திய அரசின் சதித்திட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து வென்ற வழக்கறிஞர் கனிமொழிமதி என இந்த ஆய்வுக்கு வலுச்சேர்த்தவர்கள் ஏராளம்.

கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வு தொடங்கவுள்ள நிலையில், அருகிலுள்ள பகுதிகளிலும் ஆய்வுப் பணி நீட்டிக்கப்பட இருக்கிறது. வைகை நதிக்கரை மட்டுமின்றி ஏற்கனவே ஆய்வுக்குட்பட்ட அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளிலும், கடலுக்குள் மூழ்கிய பூம்புகார் பகுதியையும் ஆய்வு செய்யும்போது, தொல்தமிழர் பண்பாட்டு அடையாளம் இன்னும் பல மடங்கு வெளிப்படுவதுடன், இந்தியா முழுவதும் திராவிட அடையாளங்கள் நிறைந்திருந்த காலமும் உறுதியாகும்.

இதுவரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை அங்கேயே அருங்காட்சியம் அமைத்து பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளாக தென்னை மரங்களால் பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு மேட்டைக் கிளறி, மேலே கொண்டுவரப்பட்ட தமிழரின் பெருமையை அதிகார பலத்தின் கரங்களுக்கு இரையாகக் கொடுத்து விடக் கூடாது என அனைத்து தரப்பும் வலியுறுத்துகின்றன.