25 வருடங்களாக நிலை கொண்டிருந்த கேள்வியை புரெவி புயல் வலுவடைந்த டிசம்பர் 3 அன்று அரசியல் கரை கடக்கச் செய்திருக்கிறார் ரஜினி. பதில் சொல்லி, தனது ஆன்மீக குருவான பாபாஜியின் பிறந்த நாளான நவ.30-ஆம் தேதியன்று, ரஜினி மக்கள் மன்றத்தின் மா.செ.க்கள் கூட்டத்தை ராகவேந்திரா மண்டபத்தில் கூட்டினார் ரஜினி. அப்போதே அரசியல் அறிவிப்பை நிர்வாகிகள் எதிர்பார்த்தனர்.
உடல்நிலை குறித்து பேசி, ஒன்றைரை மணி நேரத்தில் கூட்டத்தை முடித்து விட்டு, போயஸ்கார்டன் சென்றதும், "விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன்' என மீடியாக்களிடம் சுருக்கமாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார். தீவிர யோசனையில் இருந்த அவரிடம் பேசியவர்கள் மனைவி லதாவும் இளைய மகள் சௌந்தர்யாவும். உடல்நலன்-அரசியல் நுழைவு குறித்து ஆலோசித்துள்ளனர். மறுநாள், அரசியலுக்கு வரவில்லை என்ற பிரஸ் ரிலீஸை கொடுத்து, ராகவேந்திரா மண்டபத்தில் அதனை மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் ரிலீஸ் செய்யத் திட்டமிட்ட நிலையில், கடைசி நேரத்தில் அதனை தவிர்க்கச் சொல்லிவிட்டார் ரஜினி.
தனது அப்பா ரஜினி யிடம் தனியாக பேசியுள்ளார் சௌந்தர்யா. பீகார் தேர்த லுக்குப் பின் பிஜேபி மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவாதம், எதிர்கால பலாபலன்களை விரிவாக எடுத்துச் சொல்லி, ரஜினியின் அரசியல் எண்ட்ரியை மேலும் வலுப்படுத்தியுள்ளார் சௌந்தர்யா. இதே பாணியில் ரஜினியை சந்தித்த தமிழருவி மணியனும் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை தோறும் அதிகாலைதியான நேரத்தில் மனதிற்கு கிடைக்கும் உத்தரவின் அடிப்படையில் ரஜினி பல முடிவுகள் எடுப்பார். அதனடிப் படையில்தான் டிசம்பர் 3 அன்று காலை 2 மணி நேரம் ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது அவருக்கு சில உத்தரவுகள் கிடைத்திருக்கலாம் என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமான ஆன்மீக நண்பர்கள்.
அரசு விழா மேடையிலேயே பா.ஜ.க.வுடன் கூட்டணி என இ.பி.எஸ்- ஓ.பி.எஸ். இருவரும் சொன்னாலும், அமித்ஷா அந்த விழாவில் கூட்டணிப் பேச்சைவிட வாரிசு அரசியல் பற்றித்தான் பேசினார். அவர் மனதிலிருந்த கணக்கு, ரஜினி. அதுதான், டிசம்பர் 3ல் வெளிப்பட்டுள்ளது என்கிறார்கள்.
தொடங்கப்படாத அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ளார் ரஜினி. மக்கள் மன்றத்தின் மா.செ.க்கள், மூத்த நிர்வாகிகள் மத்தியிலோ, அர்ஜுன மூர்த்தி நியமனம் ஒருவித தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட நிர்வாகி ஒருவர் நம்மிடம், ""எங்களைப் போன்ற ரசிர்களுக்கு சம்பந்தமில்லாத வங்தான் இந்த மணியனும், அர்ஜூன மூர்த்தியும். கல்லூரிகள் நடத்துற ஏ.சி.சண்முகம் ஏற்கனவே புக்கிங் பண்ணிவிட்டார். சைதை துரைசாமியும் ஆதரவு தெரிவிச்சிருக்காரு. கராத்தே தியாகராஜன் ஏற்கனவே ரெடியா யிட்டாரு. அவர் மூலம் ஒரு குரூப் உள்ளே வரும். முப்பது நாற்பது வருசமா தலைவரே கதி என கிடக்குறோம். பணமூட்டைகள் ஈஸியா உள்ளே வந்திடுது. அதனால் எங்களின் 32 மா.செ.க்களில் நான்கைந்து பேருக்கு தேர்தலில் சீட் கிடைத்தாலே பெருசு. எல்லா சவால்களையும் எங்க தலைவர் எப்படி சமாளித்து சோதனைகளை வெல்லப் போறாருன்னு தெரியல'' என்றார்.
ராஜு மகாலிங்கம் வி.எம்.சுதாகர் டாக்டர் இளவரசன்
தமிழகத்தில் அனைத்து கிராமங்கள் வரையும் ரஜினி ரசிகர் மன்றம் பரவியபோது, அதனை ஒருங்கிணைக்கும் பணியை செய்தவர் சத்யநாராயணன். நிர்வாகிகள் பலரை நேரில் அறிந்தவர். சில மனக் கசப்புகளால், கடந்த பத்து வருடங்களாக ஒதுங்கியே இருக்கிறார் சத்யநாராயணன். அவருக்குப் பிறகு மன்றத்தை ஒருங் கிணைத்து நடத்தி வந்தார் வி.எம். சுதாகர். ரஜினி மக்கள் மன்றம் ஆன பிறகு அதன் தலைமை நிர்வாகியாக இருந்த சுதாகர், வெறும் நிர்வாகி ஆனார். அதன் பின் ராகவேந்திரா மண்டப நிர்வாகியாக இருந்த சிவா, ர.ம.ம.வின் நிர்வாகப் பொறுப்புகள் சிலவற்றைக் கவனித்து வந்தார்.
ஐ.பி.எஸ். பதவிக்கு வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு வந்த ராஜசேகர் என்பவர் சில மாதங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டார். லைக்கா நிறுவனத்திலிருந்து வந்த ராஜு மகாலிங்கம் சில மாதங்கள் மாநிலச் செயலாளராக இருந்தார். இவருக்கு அடுத்து மாநில அமைப்பாளராக ஏழெட்டு மாதங்கள் இருந்தார் விருத்தாசலம் டாக்டர் இளவரசன். இப்போது அர்ஜுன மூர்த்தியும் தமிழருவி மணியனும்.
நம்மிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி ஒருவரோ, “ஆன்மீக ஜனதா கட்சி என்ற பெயரை எங்க தலைவர் தேர்தல் கமிஷ னில் பதிவு பண்ணப் போறதா சொல்லுதாவ. தமிழ்ல்ல சுருக்கமா சொன்னா ஆ.ஜ.க., இங்கிலீஷ்ல ஏஜேபி. ரெண்டுக்கும் ஏதோ கனெக்ஷன் இருக்கிற மாதிரியே இருக்குல்ல''’என்கிறார்.
எதுவும் நடக்கலாம் என்பதுதானே அரசியல்!
-ஈ.பா.பரமேஷ்வரன்