Skip to main content

மோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிப்பு! ஜோதிமணி கடும் தாக்கு!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

ddd

 

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி, கடந்த இரண்டு நாட்களாக, பஞ்சாப் விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், டெல்லியில் நுழைவதைத் தடுக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசி, தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

இதுதொடர்பாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

 

அப்போது அவர், ''விவசாய விரோத வேளாண் மசோதாவைக் கொண்டு வந்ததில் இருந்து பஞ்சாப், ஹரியானா உள்பட பல்வேறு மாநிலங்களில், விவசாயிகள் கடுமையான போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இது முழுக்க முழுக்க அந்நிய முதலீட்டார்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விவசாயிகளை அடகு வைக்கும் மசோதா.

 

உரிய நேரத்தில் கடன் வழங்க வேண்டும், குளிர்பதனக் கிடங்குகள் இருக்க வேண்டும், சரியான விற்பனை சந்தைகள் இருக்க வேண்டும், நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும், மண் பரிசோதனை உள்பட பல்வேறு விஷயங்களில் உரிய நேரத்தில் அரசு விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். கடன் பிரச்சனைகளால் விவசாயிகள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். ஆகையால் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. 

 

ddd

 

இந்தப் பிரச்சனைகளையெல்லாம் சரி செய்தால்தான் ஒரு விவசாயி, ஒரு உற்பத்திப் பொருளை விளைவிக்க முடியும். இந்த இடத்தில் விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யத் தயாராக இல்லாத அரசு, கடன் பட்டு, கஷ்டப்பட்டு எந்த அரசாங்கத்தின் உதவியில்லாமல் உருவாக்குகிற ஒரு விளைபொருட்களை மட்டும் அந்நிய முதலீட்டார்களும், கார்ப்பரேட்டுகளும் அனுபவிக்கனும் என்று நினைக்கிறது. அதனால் இந்த மசோதா எவ்வளவு மோசமானது என்று விவசாயிகளுக்குத் தெரிகிறது. அதனால்தான் அவர்கள் போராடுகிறார்கள். 

 

விவசாயிகளுக்கு வங்கியில் கடன் கொடுக்க மறுக்கின்றனர். ஆனால் ஆயிரக்கணக்கான கோடிகளை ஏமாற்றியவர்களை இந்த அரசு பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது. போராடுகிற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளையும், தடியடியையும், வன்முறையும் இந்த அரசு ஏவுகிறது.

 

இந்த விவசாயிகள் இல்லையென்றால், இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் பட்டினிதான் கிடக்க வேண்டும். இந்தத் தேசம் ஒரு காலத்தில் பட்டினியாலும், பஞ்சத்தாலும் பிரிக்கப்பட்டதாக இருந்தது. அப்படிப்பட்ட தேசத்தை, விவசாயிகளின் உதவியோடு, விவசாயிகளின் கடும் உழைப்பின் காரணமாக, இந்திரா காந்தி 'பசுமைப் புரட்சி' மூலமாக மாற்றினார். இதனால், இன்றைக்கு உணவு தானியங்கள் தேவைக்கு அதிகமாகக் கையிருப்பு இருக்கிறது. இந்த அளவுக்கு இந்தியா வருவதற்குக் காரணம், நம் இந்திய விவசாயிகள். இந்த அளவுக்குக் கொண்டு வந்த விவசாயிகளின் பின்னணியில் நிறைய கண்ணீர்க் கதைகள் இருக்கிறது.

 

ddd

 

இந்திய பிரதமராக நரேந்திர மோடி வந்த பிறகு, விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு இந்த அரசாங்கம் தொடர்ந்து எந்த உதவியும் செய்ய மறுக்கிறது. உதவி செய்யாதது மட்டுமல்ல, விவசாயிகளுக்கு எதிரான விசயங்களிலும் இந்த மோடி அரசாங்கம் ஈடுபடுகிறது. 

 

இதே காலக்கட்டத்தில் சில கம்பெனிகளுக்கு, கடன் தள்ளுபடி செய்துகிறது. ஐந்து லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு, வரிச்சலுகை கொடுக்கிறது. இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையும் அழித்து, பத்து கார்ப்பரேட்டுகளுக்கான சமுகத்தை உருவாக்குவதற்கு மோடி தீவிரமாக இருக்கிறார். அதனால்தான் விவசாயிகள் இதனை எதிர்த்துப் போராடுகிறார்கள். போராடும் விவசாயிகளை அழைத்துப் பேச அரசு தயாராக இல்லை. 
 

cnc


நரேந்திர மோடி பதவியேற்று ஏழு வருடங்கள் ஆகப்போகிறது. அந்நிய முதலாளிகள், கார்ப்பரேட் முதலாளிகள், சினிமா பிரபலங்கள் ஆகியரோடு அவர் ஃபோட்டோ எடுத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், எங்கேயாவது விவசாயிகளோடு, அவர்களை சந்தித்துப் பேசியதுபோன்று ஃபோட்டோ எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? 100 நாட்கள் டெல்லியில் போராட்டம் நடத்திய அய்யாக் கண்ணுவை ராகுல்காந்திதான் வந்து பார்த்தார். மோடி பார்க்கவில்லை. 

 

இந்த தேசத்தில், விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால், அவர்களுக்காக குரல் கொடுத்து நிற்பது ராகுல்காந்தி மட்டும்தான். உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராடியபோது, அவர்களுடன் ராகுல்காந்தி நடந்தார். அதன் பிறகுதான், நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற்றும் இழப்பீட்டுச் சட்டம் வந்தது. அந்தச் சட்டம் விவசாய நிலம் அரசுக்குச் சொந்தம் என்ற நிலைமையை மாற்றி, விவசாய நிலங்கள் விவசாயிக்கே சொந்தம் என்ற நிலைமைக்குக் கொண்டு வந்த, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சட்டம். 

 

மோடி அரசு வந்தவுடன் அந்தச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கு, எல்லா முயற்சிகளையும் எடுத்தது. காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி அந்தச் சட்டத்தைக் காப்பாற்றியது. ஆனால், இன்று பல விதங்களில், அந்தச் சட்டத்தை, நீர்த்துப்போக வைக்கிறார்கள். இன்று, தமிழகத்தில் எட்டு வழிச்சாலை, விவசாய நிலங்கள் மீது போகிறது. மின் கோபுரங்கள், விவசாய நிலங்கள் மீது போகிறது. இவையெல்லாமே சட்டத்திற்குப் புறம்பாகவே நடக்கிறது. ஒருபக்கம் விவசாய நிலங்களை, விவசாயிகளின் சம்மதம் இல்லாமல் கையகப்படுத்துகிறார்கள். இன்னொரு பக்கம் விவசாயிகளை, அந்நிய முதலீட்டார்களிடமும், கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் அடகு வைக்கிறார்கள். இன்னொரு பக்கம், விவசாயிகள் தற்கொலை நிகழ்வுகளை இந்த அரசு கண்டும் காணாமலும் இருக்கிறது. 

 

விவசாயிகளுக்கு ஒரு பொருளை விளைவிக்கிற காலக்கட்டத்தில், இந்த அரசு எந்த உதவியும் செய்வதில்லை. முழுக்க முழுக்க விவசாயிகளை எல்லா இடத்திலும் ஓடவிட்டு அடிக்கிற அரசாங்கமாகத்தான் இருக்கிறது. 

 

விவசாய விரோத வேளாண் மசோதா, நாடாளுமன்றத்தில் வரும்போது, காங்கிரஸ், தி.மு.க கடுமையாக எதிர்த்தது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக, நாடாளுமன்றத்தில் நான் கடுமையாக எதிர்த்துப் பேசினேன். ஆனால், இங்குள்ள அ.தி.மு.க அரசாங்கம் இந்த மசோதாவைப் பகிரங்கமாகவே ஆதரித்தது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்ச் சொத்து இருக்கிற போலி விவசாயி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தச் சட்டத்தை ஆதரிக்கிறார்.

 

ddd

 

இந்தியா முழுவதும் விவசாயிகள் எதிர்க்கிற இந்த மசோதாவை தாங்களும் எதிர்க்கிறோம் என்று பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வக் கூட்டணிக் கட்சியாக இருந்த, அமைச்சரவையில் பங்கு வகித்த சிரோன்மணி அகாலி தளம் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கூட்டணியில் இருந்தும் வெளியேறியது. 
 

nkn


இந்த அரசால் எஸ்.வி.சேகரை பிடித்து உள்ளே வைக்க முடியவில்லை. டெல்லிக்குப் போராடச் சென்ற விவசாயச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை, இந்த அரசாங்கம் வீட்டுக் காவலில் வைத்துள்ளது. விவசாயி நிலத்தில் விதை விதைத்தால் அது பயிராகும். ஆனால், எந்த விவசாயியாவது தன்னுடைய நிலத்தில், ஒரு சொட்டு கண்ணீரை விதைத்தார்கள் என்றால், அது ஆட்சியாளர்களின் அழிவுக்குத்தான் வழி வகுக்கும். இந்தத் தேசமும், இந்திய விவசாயிகளும், இந்த அரசாங்கத்தைத் திருப்பி அடிக்கும் காலம், வெகு விரைவில் இருக்கிறது. 

 

விவசாயிகளுக்கு வருடத்தற்கு ஆறாயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்று பா.ஜ.க பிரச்சாரங்களில் சொல்லி வருகிறது. தமிழ்நாடு முழுக்க இந்தப் பணத்தை பாஜகவினரும், அதிமுகவினரும் எடுத்துக் கொண்டனர். விவசாயிகளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் கோடிக் கணக்கில் ஊழல் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளியானது அனைவருக்கும் தெரியும். விவசாயிகளுக்கு இந்த அரசு நன்மை செய்திருந்தால், ஏன் விவசாயிகள் தலைநகர் டெல்லியை நோக்கிப் போராடப் போகிறார்கள்?'' எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் அழுத்தமாக.