Skip to main content

அதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை?

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

adani

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, பேட்டிங் ஆடி வந்தது. போட்டியின் 7-ஆவது ஓவரின்போது மைதானத்துக்குள் நுழைந்த இரு ஆஸ்திரேலியர்கள் 'எஸ்.பி.ஐ அதானிக்கு 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் கடன் வழங்காதே!' என்ற வாசகத்துடன் கூடிய பதாகையை ஏந்தி இந்திய ஸ்டேட் பேங்கிற்கு கோரிக்கை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் இரண்டு நிமிடங்கள் இவர்களால் ஆட்டம் தடைப்பட்டது. மைதானத்தின் பாதுகாவலர்கள் இருவரையும் அப்புறப்படுத்தியதையடுத்து, போட்டி தொடர்ந்து நடைபெற்றது.

 

அந்த இரு ஆஸ்திரேலியர்கள் எதற்காக மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அதானிக்கு கடன் வழங்காதே என்கிற பதாகையை ஏந்தி வந்தனர் என்பதற்குப் பின்னால் பழங்குடியினர் மற்றும் சூழலியலாளர்கள் கிட்டத்தட்ட பத்துவருடப் போராட்டம் அடங்கியிருக்கிறது. இவர்கள் இத்தனை ஆண்டுகளாக குயின்ஸ்லாந்த் அருகே கலீலி ஆற்றுப் பள்ளத்தாக்கிலுள்ள கார்மைக்கேலில் அமைய இருக்கும், நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராகப் போராடி வருபவர்கள். குவின்ஸ்லாந்தின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம், உலகின் மிகப்பெரிய சுரங்கங்களுள் ஒன்று. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், 'கார்மைக்கேல்' சுரங்கம் என்று பெயரிடப்பட்ட திட்டத்தை, குவின்ஸ்லாந்து மாகாண அரசு முன்மொழிந்தது. இதுமட்டுமல்லாமல், 'ரயில் பாதை' அமைக்கும் ஒரு திட்டம் என இவ்விரு திட்டங்களும் முக்கியமான திட்டங்களாகக் கருதப்பட்டது. இந்தத் திட்டம் குறித்து, முதலில் அறிவிக்கும்போது, சுமார் 150 ஆண்டுகளுக்கு நிலக்கரி சுரங்கம் செயல்பாட்டில் இருக்கும் என்று அறிவித்தது. அதனையடுத்து அது, 90 ஆண்டுகளானது. கடைசியில் 2016 -ஆம் ஆண்டு 60 ஆண்டுகள் என்று முடிவுக்கு வந்தது. 

 

தொடக்கத்திலிருந்து மக்கள் மத்தியிலும், சூழலியலாளர்கள் மத்தியிலும் பெரும் விமர்சனங்களைப் பெற்று, தடைப்பட்டு தடைப்பட்டு தொடங்கப்பட்டது, இந்த நிலக்கரி சுரங்கத் திட்டம். இந்தச் சுரங்கத்திலிருந்து ஒருவருடத்திற்கு, 10 மில்லியன் டன் நிலக்கரி எடுக்கப்படும் என்று, 'அதானி நிலக்கரி நிறுவனம்' இப்பணியைத் தொடங்கும் முன்பு தெரிவித்தது. 2014 -ஆம் ஆண்டிலிருந்து, இந்தத் திட்டத்தில் கவனம் செலுத்தி வரும் அதானி குழுமம், சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த அனுமதியைப் பெற்றுள்ளது. அது என்ன மாதிரியான நிபந்தனைகள் என்றால், 'நிலத்தடி நீர்', 'அழிவின் விளிம்பில் இருக்கும் மிருகங்களைப் பாதுகாத்திட வேண்டும்' போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தினை செயல்படுத்தும்போது கண்டிப்பாக, சுற்றுச்சூழல் கெடும் என்று பல வருடங்களாகப் போராடி வருகின்றனர். அதானியின், இந்தத் திட்டத்தை எதிர்த்து 'ஸ்டாப் அதானி' என்று ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

adani 2

 

நிலக்கரி எடுக்கும்போது, கார்பன் டை ஆக்சைட் அதிகமாக வெளிப்படுவதால், அது பெரிதும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல, அங்கிருந்து எடுக்கப்படும் நிலக்கரியை அருகிலிருக்கும் துறைமுகத்திற்கு எடுத்துச்செல்ல புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது. இதனால், 'ரீஃப்' என்று சொல்லப்படும் கடல்நீர் பாறை பெரிதும் பாதிக்கப்பட இருக்கிறது. இதனால், அந்தச் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும். இதுமட்டுமல்லாமல், இந்த ஒரு நிறுவனம் அனுமதி பெற்றுவிட்டால், இதனையடுத்து ஆறு நிலக்கரி சுரங்கம் தொடங்கப்படும், இதனால் எங்களின் சுற்றுச்சூழல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும் என்று இந்த நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

cnc

 

இதுவரை, அதானி குழுமத்திற்கு நிதியுதவி செய்யவிருந்த நிறுவனங்கள் பல இந்த மக்களின் வலுவான எதிர்ப்பால் பின்வாங்கிவிட்டனர். இதனால், 16 பில்லியன் பட்ஜெட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தை 2 பில்லியனாகக் குறைத்துக்கொண்டது அதானி குழுமம். கடந்த 2019 -ஆம் ஆண்டு, இந்த நிறுவனம் நிலக்கரி சுரங்கத்தை தொடங்க ஆஸ்திரேலிய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து, 2021 -ஆம் ஆண்டு முதல் சுரங்கத்திலிருந்து நிலக்கரி எடுக்கும் பணி தொடங்கும் என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது. இருந்தபோதிலும், ஒரு பக்கம் பழங்குடியினர், சூழலியலாளர்கள் நிலக்கரி சுரங்கத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர். வாங்கன் மற்றும் ஜாகலிங்கேஜ் பழங்குடியினர், சுரங்கத்திற்குச் செல்லும் வழிப்பாதையை முடக்கி யாரையும் அந்தப் பக்கம் ஐந்து நாட்களுக்குச் செல்ல முடியாமல் செய்து, தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். 

 

மைதானத்திற்குள் மட்டுமல்ல மைதானத்திற்கு வெளியேவும் 'ஸ்டாப் அதானி' என்கிற அமைப்பு, 'அதானிக்கு கடன் வழங்காதே!' என்று பேனர்களை வைத்துக்கொண்டு போராட்டத்தை நடத்தியுள்ளனர்...