அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணம் கூற வேண்டுமென்றால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சொல்லலாம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் உள்ள வரை வாய்பேசாத அமைச்சரவை கூட்டத்தில் இவரும் ஒருவர் அவ்வளவுதான். "ஜெ" இறப்புக்கு பிறகு அதிர்ஷ்டம் போல் சசிகலாவால் முதல்வராக்கப்பட்டார். அந்த நாற்காலிக்கு எந்த ஆபத்தும் வராமல் மூன்றாண்டுகளாக சாதித்தும் வருகிறார் எடப்பாடி.
ஆட்சியில் மட்டுமல்ல கட்சிக்குள்ளும் தனது தனிப்பட்ட பவரை அதிகரித்து வருவதால்தான் அவரது கொங்கு மண்டலம் மட்டுமல்லாது தென் மாவட்டத்திலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகளை தனது விசுவாசிகளாகவும் மாற்றம் பெற வைத்து வருகிறார். ஆரம்பத்தில் போட்டியாளராக இருந்த ஓ.பி.எஸ். அணியையும் பெரும்பாலும் தனக்கு சாதகமாக்கி ஓ.பி.எஸ்.ஐ டம்மி லெவலுக்கு கொண்டு போய்விட்டார் இ.பி.எஸ். என ர.ர.க்கள் பேசுமளவுக்கு வந்து விட்டது. ர.ர.க்களும் புது புது பட்டங்களை எடப்பாடிக்கு வழங்கி வருகிறார்கள்.
அந்த வரிசையில் பெரியார் நகர், காமராஜர் நகர், அண்ணா நகர், கலைஞர் கருணாநிதி நகர், எம்.ஜி.ஆர் நகர், ஜெயலலிதா பெயரில் "ஜெ. ஜெ" நகர் வைத்ததை பார்த்துள்ளோம். இப்போது இ.பி.எஸ். பெயரிலும் எடப்பாடியார் நகர் என்ற பெயரும் வைக்கப்பட்டு தலைவர்கள் வரிசையில் இணைக்கப்பட்டிருக்கிறார் முதல்வர் இ.பி.எஸ். ஆச்சரியம்தான் ஆனால் உண்மை. இப்படி பெயர் வைத்ததும் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.தான்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாஜலம், கட்சிக்குள் உள்ளடி வேலை செய்து இவரது அமைச்சர் பதவியை, பவானி K.C. கருப்பனன் பெற்றார் என்பது தனி கதை. அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும் அ.தி.மு.க.வில் கட்சி விசுவாசியாக தொடர்ந்து செயல்படுகிறார் தோப்பு வெங்கடாஜலம்.
அப்படிப்பட்ட தோப்புவின் தொகுதிக்குட்பட்ட பெருந்துறை பேருராட்சியில் 10வது வாட்டில் பெருந்துறை ரயில் நிலைய சாலையில் புதிதாக அமைந்துள்ளது ஒரு குடியிருப்பு பகுதி. அதற்குத்தான் "எடப்பாடியார் நகர்" என்று பெயர் சூட்டி அந்த பெயர் பலகையையும் திறப்பு விழா செய்துள்ளார் எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாஜலம்.
இது பற்றி தோப்பு நம்மிடம், "பெருந்துறை தொகுதியின் நீண்ட கால கோரிக்கையான அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் முதல்வர். அதேபோல் சுகாதாரமான குடிநீர் வேண்டும் என்று கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மறைந்த முதல்வர் அம்மாவிடம் கோரிக்கை வைத்தேன், அவரும் செயல்படுத்துவதாக அறிவித்தார். அவர் இறப்புக்கு பிறகு இந்த குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் பல தடைகள் வந்தது, அவற்றை முறியடித்து குடிநீர் திட்டத்தையும் நிறைவேற்றி கொடுத்துள்ளார் முதல்வர். அந்த குடிநீர்தான் இந்த பகுதிக்கும் வருகிறது. தொகுதியில் உள்ள இரண்டு லட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கொடுக்க காரணம் முதல்வர் இ.பி.எஸ் தானே, அதற்கு நன்றி பாராட்டும் விதமாகத்தான் இந்த பகுதியை எடப்பாடியார் நகர் என்று பெயரிட்டோம்" என்றார்.
இப்படியே போனால் எங்க கொங்கு மண்ணை சேர்ந்த எடப்பாடியார் பெயரில் விரைவில் பேரவை உருவானாலும் ஆச்சரியப்படாதீங்க... என உற்சாகமாக கூறுகிறார்கள் கொங்கு ர.ர.க்கள்.