தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு இயக்குநர் கரு.பழனியப்பன் பதிலளிக்கிறார்.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. உயர்நீதிமன்றமே நேரடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டு வருகிறார். இந்தச் சம்பவங்கள் எல்லாம் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
எந்தக் குற்றமும் செய்யாத ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண் மக்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று கொலை செய்தார்கள் என்ற கோபமே தற்போது அனைவரின் மனதிலும் ஆறாமல் இருந்து கொண்டிருக்கின்றது. இன்றைக்கு காவல்துறையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் எல்லாம் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதைப் போன்று எவ்வளவோ சம்பவங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் இவ்வளவு கொடூரமாக ஒரு சம்பவத்தை நாங்கள் இதுவரை பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். உங்களுக்கும் எனக்கும் இது ஒரு செய்திதான். அதில் நாம் சம்மந்தப்பட்டவர்கள் இல்லை. காவல்துறை மூத்த அதிகாரிகளே அதிர்ந்து போகிறார்கள் என்றால் இது எவ்வளவு பெரிய மூர்க்கத்தனமான சம்பவமாக இருக்க முடியும்.
இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த விசாரணையின் முடிவில் உண்மை வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளதே?
உண்மை வெளியே வர வேண்டும். இதை நாம் அனைவரும் விடாமல் இந்த விஷயத்தை ஃபலோ செய்துகொண்டு இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தக் குற்றத்துக்குரிய நீதி கிடைக்கும். இந்த ஊடங்கள் இவ்வளவு பெரிய வெளிச்சம் போட்டு காட்டியதால்தான் அந்தப் பெண் காவலர் ரேவதிக்கு உரிய விடுப்பு கிடைத்துள்ளது. தற்போது காவலர் ஒருவர் அவரது வீட்டிற்கு பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளார். அது எவ்வளவு காலம் நிலைபெறும் என்று தெரியவில்லை. அது நிலைபெறுவதற்கு என்ன வழி இருக்கிறது என்றால், இந்த ஊடகங்களும், பொதுமக்களும் இந்த வழக்கைக் கண்காணிப்பதும், அதைப் பின்தொடர்வதும்தான் அவர்கள் இருவருக்கும் உரிய நீதியைப் பெற்றுதரும்.
காவல்துறையும் ஆட்சியாளர்களின் கீழ்தான் வருகிறது. எனவே இந்த விஷயத்தில் அவர்களும் தொடர்பில் இருப்பார்கள் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தக் கொலையை வெளியே கொண்டுவந்ததில் ஊடகத்திற்குப் பெரிய பங்கு உண்டு. அச்சு ஊடகம், காட்சி ஊடகம் இவை இரண்டும் தொடர்ச்சியாக இதனைப் பேசிக்கொண்டே இருந்தார்கள். 'நக்கீரனில்' இது சம்பந்தமாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி கொண்டே இருந்து. பல ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளை அம்பலப்படுத்திக்கொண்டே சென்றார்கள். அதுவே இந்த வழக்குப் பெரிய அளவில் பேசப்பட காரணமாக இருந்திருக்கிறது. உயர்நீதிமன்றக் கிளை வழக்கை நடத்துகிறது. நீதிபதி இதுதொடர்பாக விசாரணைக்குச் செல்கிறார். போனால் அங்கே அவருக்கு உரிய மரியாதைத் தரப்படவில்லை. விசாரணைக்குச் சென்ற நீதிபதி மிரட்டப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை என்று அனைவரும் கூறுகிறார்கள்.
அந்த அளவில் தான் காவல்துறை நீதிதுறையினருக்கு மரியாதைத் தருகிறார்கள். எந்த ஒரு சம்பவத்திலும் விசாரணை செய்யப் போகும் நீதிபதியிடம் கும்பிடு போட்டு தன் பங்கில் இருக்கும் நியாயத்தை எடுத்துக்கூறி தனக்குச் சார்பாக நோட் எழுத வேண்டும் என்பதற்காக காவல்துறையினர் அனைத்து வேலைகளையும் செய்வார்கள். இந்த வழக்கில் மட்டும்தான் நீதிபதியை உட்கார வைத்துக்கொண்டு அவரை மிரட்டுவதும், அவரது பேச்சைக் கேட்காதது போல இருப்பதும் எனக் காவலர்கள் நடந்து கொண்டது இதற்கு முன் எப்போது நடக்காத ஒன்று. தங்களை என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணம் தான் அவர்களைை இதை எல்லாம் செய்ய வைக்கிறது, என்றார்.