ஈழத்தில் தமிழ் இனத்தை அழித்த போர்க்குற்றவாளிகளான ராஜபக்சே சகோதரர்களிடம் இலங்கையின் அரசு அதிகாரம் மீண்டும் சிக்கியிருப்பது ஈழத்தமிழர்களிடம் அச்சத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பதவி காலம் முடிவதையொட்டி ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. மீண்டும் அவர் போட்டியிட வாய்ப்பிருந்தும் அவரோ அவருடைய இலங்கை சுதந்திரா கட்சியோ தேர்தலை எதிர்கொள்ளவில்லை. ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கே, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என அவரது கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், பிரதமர் ரணிலுக்கு எதிராக கட்சியின் துணைத் தலைவர் சஜீத் பிரேமதாச போர்க் கொடி உயர்த்தியதை அடுத்து, அவரையே தனது கட்சியின் வேட்பாளராக அறிவித்தார் ரணில் விக்கிரமசிங்கே! இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா என்கிற கட்சியை துவக்கிய மகிந்த ராஜபக்சே, ஆளும் கட்சியின் பிரேமதாசவை எதிர்த்து தனது சகோதரர் கோத்தபய ராஜபக்சேவை நிறுத்த, தேர்தல் களம் சூடு பிடித்தது.
தேர்தல் பிரச்சாரத்தில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் பொதுவான அரசியலை மையப்படுத்தி வாக்கு சேகரித்தார் சஜீத் பிரேமதாச. ஆனால், சிங்கள பௌத்த பேரினத்தின் கலாச்சாரத்தையும் ஒற்றுமையையும் பாதுகாப்பேன் என்கிற பிரச்சாரத்தை மட்டுமே முன்னிறுத்தினார் கோத்தபய ராஜபக்சே! இதனால் ஜெயிக்கப் போவது யார்? என்கிற வாதங்கள் இலங்கை அரசியலில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்திருந்தன. இந்த நிலையில், சிங்களவர்களின் 90 சதவீத ஆதரவில் 52 சதவீத வாக்குகளைப் பெற்று ஏழாவது ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளார் கோத்தபய! ஆளும் கட்சியில் போட்டியிட்ட சஜீத் பிரேமதாசவிற்கு 42 சதவீத வாக்குகள் கிடைத்தன. தமிழர்களின் தாயகப் பிரதேசமான வட கிழக்கு இலங்கையில் பிரேம தாசவுக்கு அமோக ஆதரவை தமிழர்களும் முஸ்லீம்களும் தந்திருக்கிறார்கள். அதேசமயம், தமிழர் பிரதேசத்தில் கோத்த பயவுக்கு 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன. 2015 தேர்தலின் போது மகிந்த ராஜபக்சேவுக்கு கணிசமான ஆதரவை தந்த கிழக்குப் பிரதேசம் கூட இந்த முறை கோத்த பயவை கைவிட்டது. ஆனால், இதையெல்லாம் முறியடிக்கும் வகையில் தென்னிலங்கையில் பெரும்பான்மையாக கோலோச்சும் சிங்களவர்கள், கோத்தபயவை ஒருங்கிணைந்து ஆதரித்து அவரை ஜனாதிபதியாக்கியிருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கொழும்பு பத்திரிகையாளர்கள், "சிங்கள பௌத்த அடிப்படை தேசிய வாதத்தை ராஜபக்சே சகோதரர்கள் உயர்த்திப் பிடித்ததால் கோத்தபயவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. சிறுபான்மையினரான தமிழர், முஸ்லிம் வாக்குகள் தமக்கு அவசியமில்லை; சிங்கள வாக்குகளே போதுமானது என ஆரம்பத்திலேயே திட்டமிட்டு சிங்களவர்களிடம் காய்நகர்த்தியிருந்தார் கோத்தபய! அதேசமயம், இன அழிப்பை திட்டமிட்டு நடத்திய போர்க்குற்றவாளிகளை ஆதரிக்க தமிழர்கள் தயாராக இல்லை. அதன் உணர்வுகளை வெளிப்படுத்தவே சஜீத்தை ஆதரித்தனர் தமிழர்கள். அதே போல, ஈஸ்டர் தினத்தில் கிறிஸ்துவ தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக ராஜபக்சே சகோதரர்கள் சித்தரித்ததால் முஸ்லிம் சமூகமும் கோத்தபயவை ஆதரிக்கவில்லை.
தமிழர்களும் முஸ்லிம்களும் சஜீத்தை ஆதரித்தது அவர் நல்லவர் என்பதற்காக அல்ல; கோத்தபய பதவிக்கு வரக்கூடாது llஎன்பதற்காக மட்டுமே! சஜீத்தை ஆதரிக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அறிவுறுத்தியிருந்தாலும் இந்த அறிவுறுத்தல்களுக்கு முன்பாகவே கோத்தபயவுக்கு எதிராகவே வாக்களிக்க தமிழர்கள் முடிவு செய்திருந்தனர். அதை கச்சிதமாக நிறைவேற்றியும் இருக்கிறார்கள். ஆனால், கோத்தபயவின் வெற்றி மூலம் தமிழர்களின் எதிர்பார்ப்பு முற்றிலும் சிதிலமடைந்திருக்கிறது. சிங்கள பௌத்த பேரினவாதத்தில் மிக கடும்போக்காளர்களான ராஜபக்சே சகோதரர்களிடம் அரசு அதிகாரம் மீண்டும் ஒருமுறை சிக்கியிருப்பதால் ஈழத்தமிழர்களின் இன சிக்கலுக்கான அரசியல் தீர்வு, போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்படும். யுத்த காலத்தில் இருந்த அச்சத்தைப் போல இரு மடங்கு அச்சம் இனி உருவாகும்'' என்கிறார்கள் பல்வேறு சூழல்களை விவரித்தபடி!
யாரிடம் அதிகாரம் போய்விடக்கூடாது என பயந்தார்களோ அவர்களிடமே அதிகாரம் சென்றிருப்பதில் ஈழத்தமிழர்களிடம் ஒருவித பயம் பரவியுள்ளது. அதனை நிரூபிப்பது போல, ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டதும், "சிங்கள மக்களின் வாக்குகளினாலேயே நான் வெற்றி பெற்றுள்ளேன். தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் ஆதரவை கேட்டிருந்தேன். அதனை அவர்கள் ஏற்கவில்லை. நாட்டை கட்டியெழுப்ப எனது நிறைவேற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்துவேன். நான் ஒரு சிங்கள பௌத்தர். அதனால் பௌத்தத்தை பாதுகாப்பதுடன் அதன் கலாச்சாரத்தையும் ஒற்றுமையையும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்'' என சூளுரைத்திருக்கிறார் கோத்தபய ராஜபக்சே!
இலங்கையின் அதிபர் பதவியை 2005-ல் மகிந்த கைப்பற்றியதை தொடர்ந்து அமெரிக்காவிலிருந்த கோத்தபய இலங்கைக்கு திரும்ப, அவரை பாதுகாப்புத்துறையின் செயலாளராக்கினார் மகிந்த. இலங்கை அரசின் முப்படைகளுக்கு தலைவராக மகிந்த இருந்தபோதும், கோத்தபயவின் கட்டளைகளுக்கே முப்படைகளும் தலையாட்டின. ஈழத்தில் நடந்த இறுதி யுத்தத்தின் ஒவ்வொரு திட்டமிடலும் கோத்தபயவின் உத்தரவின்படியே நடந்தது, ராஜபக்சே சகோதரர்கள் இருவரும் இணைந்து அப்பாவி மக்கள் மீதான கொத்துக் குண்டுகள் தாக்குதல் மூலம் நடத்திய தமிழின அழிப்பில் ஒன்னரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
நிராயுதபாணியாக சரணடைந்த போராளிகள் சித்தரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை ராணுவத்திடம் சிக்கிய புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனையும் சுட்டுக்கொன்றனர். கோத்தபயவின் உத்தரவின் பேரிலேயே அனைத்து போர்க்குற்றங்களும் நடந்தன. ஈழத்தில் நடத்திய இன அழிப்பை தொடர்ந்து சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஹீரோவாக ராஜபக்சே சகோதரர்கள் நிலை நிறுத்தப்பட்டனர். இவர்கள் நடத்திய இன அழிப்பு பயங்கரம் என்பது மனசாட்சியுள்ள சர்வதேச நாடுகளை உலுக்கியது. அதேசமயம், ராஜபக்சேக்களுக்கு எதிரான போர்க்குற்றங்களுக்கான பல்வேறு ஆதாரங்கள் ஐ.நா.வில் தாக்கல் செய்யப்பட்டன.
ராணுவத்திடம் சரணடைந்த போராளிகளும் சிறுவன் பாலச்சந்திரனும் கோத்தபயவின் கட்டளையின்படியே கொல்லப்பட்டனர் என ராணுவ தளபதியாக இருந்த சரத்பொன்சேகா சாட்சியமளித்திருக்கும் நிலையில், கோத்தபய மீது போர்க்குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் ஐ.நா.வில் முறையிடப்பட்டது. ஆனால், இந்தியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல், ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் ஆதரவில் போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நீர்த்துப்போக வைக்கப்பட்டன.
அந்த சூழலில் பத்திரிகையாளர்களிடம் கோத்தபய, "விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், இஸ்ரேல், உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் பெருமளவில் ஆயுதங்கள் வழங்கின. இந்தியாவோ இலங்கை ராணுவத்திற்கு தேவையான அத்தனை பயிற்சிகளையும் அளித்தது. அதனால் உள்நாட்டு பயங்கரவாதத்தை ஒடுக்கியதை போர்க் குற்றமாக சொல்ல முடியாது'’ என கொக்கரித்திருந்தார்.
இந்த நிலையில், சீனாவை முன்னிறுத்தியே மகிந்தாவின் அரசியல் நகர்ந்ததால் 2015 தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவை அதிபராக கொண்டு வந்தது இந்தியாவும் அமெரிக்காவும். ஆனால், சர்வதேச நாடுகள் எதிர்பார்த்த அரசியலை மைத்ரியால் கொடுக்க முடியாத நிலையில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததுடன் சிறுபான்மை மக்களின் இனநலன் குறித்த சிக்கல்களும் அதிகரித்தேபடியே இருந்தது. இதனால் சிங்கள பௌத்த மக்களின் வெறுப்பை சம்பாதித்தார் மைத்ரிபால சிறிசேன. அதற்கேற்ப இந்தியாவின் ஆதரவுடன் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கேவிற்கும் சிறிசேனாவுக்குமிடயே முரண்பாடுகளும் வளர்ந்த நிலையில், சிங்களவர்களின் நம்பிக்கையைப்பெற பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கிவிட்டு மகிந்தாவை திடீரென பிரதமராக்கினார் மைத்ரி. இதில் எழுந்த சட்டச்சிக்கலால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவியை மகிந்த துறக்க, ரணிலே பிரதமரானார். இந்த நிலையில்தான், சிங்கள பௌத்த பிக்குகளின் பின்னணியில் தனிக்கட்சியை துவக்கி தனது சகோதரர் கோத்தபயவை ஜனாதிபதியாக்கியிருக்கிறார் மகிந்த ராஜபக்சே!
சிங்கள மக்களின் காப்பானாக தன்னை அடையாளப்படுத்தியிருக்கும் கோத்தபயவின் வெற்றி இந்தியாவுக்கு பின்னடைவுதான் என்கிறார்கள் இலங்கையின் அரசியல் விமர்சகர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், "கோத்தபயவிற்கு முதல் வாழ்த்து இந்திய பிரதமர் மோடியிடமிருந்துதான் கிடைத்திருக்கிறது. இருப்பினும் கோத்தபயவின் அரசியலை முழுமையாக அறிந்தவரில்லை மோடி. குறிப்பாக, மகிந்த ராஜபக்சேவின் முந்தைய தோல்விக்கு இந்தியாவின் ரா அமைப்புதான் காரணமென பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருக்கிறார்கள் ராஜபக்சே சகோதரர்கள். அதாவது, இந்தியாவை நேரடியாகவே பகைத்துக் கொண்டவர்கள். இந்த சூழலில், பிரதமராக இந்தியாவின் ஆதரவை பெற்ற ரணிலும், ஜனாதிபதியாக சீனாவின் செல்லப்பிள்ளையான கோத்தபயவும் இருப்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தவே செய்யும். இந்தியாவின் நட்பை ஏற்பதுபோல ராஜபக்சேக்கள் தோற்றம் காட்டினாலும் சீனாவின் ஆலோசனைகளுக்கே முக்கியத்துவம் தருவார்கள். அதனால், கோத்தபயவை கையாள புதிய தந்திரத்தைத்தான் இந்தியா கண்டுபிடிக்க வேண்டும். அந்த வகையில், கோத்தபயவின் வெற்றி இந்தியாவுக்கும் ஒரு வகையில் மிரட்டல்தான்.
குறிப்பாக, தெற்காசிய கடல் பிரதேசத்தை ஆள்வதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நிறைய மோதல்கள் இருக்கின்றன. அதேபோல, இலங்கையின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் தகராறுகள் உண்டு. அந்த வகையில், இலங்கையின் கடல் வாணிபத்தையும் பொருளாதாரத்தை முந்தைய தனது ஆட்சிக் காலத்தில் சீனாவிடம் தாரை வார்த்திருந்தார் மகிந்தா. ஆனால், மைத்ரி அதிபரானதையடுத்து சீனாவின் ஆதிக்கம் முடக்கப்பட்டிருந்த நிலையில் அரசு அதிகாரம் மீண்டும் ராஜபக்சேக்களிடம் வந்திருப்பதால் சீனாவின் ஆதிக்கம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும். இது, இந்தியாவுக்கு ஆபத்தானது'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதனை இந்தியா உணர்ந்துள்ளதால்தான் கோத்தபயவிடம் 15 நிமிடம் பேசிய இந்திய பிரதமர் மோடி, கோத்தபயவின் முதல் வெளிநாட்டு பயணம் இந்தியாவில் இருக்க வேண்டும் என அழைத்திருக்கிறார். இந்த நிலையில், கோத்தபயவின் வெற்றியை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் உற்று நோக்கியிருக்கின்றன.
கோத்தபயவின் வெற்றி சர்வதேச நாடுகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடம் நாம் பேசியபோது, "உலக நாடுகளில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள்தான் இலங்கையை மையப்படுத்தி அரசியல் செய்கின்றன. மகிந்த ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதோடு பொருளாதார உதவியையும் சீனா செய்தது. அதற்கேற்ப பல்வேறு திட்டங்களுடன் இலங்கையில் வலுவாக கால் ஊன்றியிருக்கிறது. இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகம், விமான நிலையம், கப்பற்படை தளங்கள் உள்ளிட்டவற்றில் கிட்டத்தட்ட 4 லட்சம் பில்லியன் டாலர்கள் முதலீடு செய்திருக்கிறது சீனா. ரயில் பாதைகள், சாலை போக்குவரத்து உள்ளிட்ட திட்டங்களிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகம். கடந்த 5 வருடங்களில் இவை முடக்கப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் இவை உயிர்ப்பித்துவிடக் கூடாது என கவனிக்கத் துவங்கியுள்ளது அமெரிக்கா. அதனால், இனி வரும் நாட்களில் இலங்கையில் பல சம்பவங்கள் அரங்கேறும்'' என்கின்றனர்.
சிங்களவர்களின் பெரும்பான்மை வாக்குகளில் கோத்தபய ஜெயித்திருந்தாலும், இன அழிப்புக்கான எதிரி என்பதை தமிழர்கள் உணர்த்தியிருக்கிறார்கள். இந்த நிலையில், ஈழ மக்களின் கதி என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவில் புதிய வியூகங்களுடன் தங்களுக்கான அரசியலை முன்னெடுப்பதில்தான் இருக்கிறது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு!