கரோனாவை ஒழிப்பது இனி கடவுள் கைகளில்தான் இருக்கிறது என சமீபத்தில் தெரிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி! அவரின் இத்தகைய பேச்சு பகுத்தறிவாளர்களை மட்டுமல்ல, ஆன்மீகவாதிகளையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக, மக்களின் பாதுக்காப்பு மீது அக்கறையில்லாமல் அவர் பேசுகிறார் என்கிற வகையில் விமர்சனங்களும், சர்ச்சைகளும் எதிரொலித்தன! இந்த நிலையில், தமிழக ஆன்மீகவாதிகள் சங்கம் என்கிற பெயரில் முதல்வருக்கு கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகிறதாம்!
அதில், “நெருக்கடியான காலக் கட்டங்களில் அதனை எதிர்கொண்டு மக்களை பாதுகாப்பதுதான் திறமையான அரசுக்கு அடையாளம். ஆனால், அதனை தவிர்க்கும் வகையில், கடவுள் மீது சுமைகளை இறக்கி வைப்பது சரி அல்ல! கரோனாவை அழிப்பது கடவுள் கைகளில்தான் இருக்கிறது என நீங்கள் சொல்லியிருப்பதால், உங்களது அரசை நம்புவதில் பலனில்லை . அதனால் கோவில்களை திறந்து விடுங்கள், கடவுள்களிடம் நாங்கள் முறையிட்டுக் கொள்கிறோம்” என்று சுட்டிக்காட்டியுள்ளனராம் ஆன்மீகவாதிகள்!
இதற்கிடையே, கடவுள் கைகளில்தான் இருக்கிறது என்ற முதல்வரின் பேச்சு அரசியல் ரீதியாக மக்களிடம் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கியிருப்பதாக முதல்வருக்கு ரிப்போர்ட் கிடைத்துள்ளது!