நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷானவாஸிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு,
இந்தியாவில் இருக்கும் சிறும்பான்மையினர் பாதுகாப்பு முக்கியமானது என்று கருதும்போது, வெளிநாடுகளில் உள்ள சிறும்பான்மை சமூகமாக உள்ள இந்துக்கள் பாதுகாக்க வேண்டும் என்று பாஜக அரசு நினைப்பதில் தவறு இருக்கிறதா?
அதை யார் தடுத்தார்கள் என்று கூறுங்கள். பாகிஸ்தானில் இருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை கொடுக்க கூடாது என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா? அங்கிருந்து வரும் சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்க கூடாது என்றாவது யாராவது கூறியிருக்கிறார்களா? அப்படி யாராவது கூறியிருந்தால் சொல்லுங்கள். அப்படி யாருமே எங்கும் சொல்லவில்லையே. அப்படி ஒரு குரல் இந்தியாவில் ஒலித்ததா. அரசியல் அறிவற்றவன் கூட அப்படி சொல்லவில்லை. சாதாரண ஒரு பாமரன் கூட அப்படி சொல்லவில்லை. கொடுக்க கூடாது என கூறவில்லை. ஆனால், நீங்கள்தான் மத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து இவர்களுக்கெல்லாம் குடியுரிமை வழங்கப்படாது என்று கூறுகிறீர்கள்.
அமித்ஷா கிறிஸ்மஸ்க்கு பிறகு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இருக்கிறோம் என்று கூறுவதை பற்றி?
இப்போது ஏன் அமித்ஷா அதை சொல்கிறார் தெரியுமா, காஷ்மீரில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்கள். இவர்கள் ஏற்கனவே இந்தியா முழுவதும் விதைத்து வைத்திருந்த முஸ்லிம் வெறுப்பின் மூலம் 370 சட்ட நீக்கத்தை சமாளித்துவிட்டார்கள். இதற்காக பெரிய அளவிலான போராட்டத்தை அவர்கள் எதிர்கொள்ளவில்லை. காஷ்மீருக்குள் அதற்காக எத்தகைய கொதிப்புணர்வு இருந்தாலும், அங்கு இருக்கும் அரசியல் தலைவர்களை எல்லாம் கைது செய்து அதனை அடைக்கி ஒடுக்கிவிட்டார்கள். காஷ்மீரை வேட்டையாடிய அந்த நாக்கின் ருசி வடகிழக்கையும் வேட்டையாடலாம் என்று அங்கு போனது. ஆனால் இந்த குடியுரிமை திருத்த மசோதா அங்கு போன வேகத்தில் திரும்பி வந்துள்ளது.
போராட்டம் வன்முறையாக மாறுவதாக மத்திய அரசு தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் தெரிவிப்பதை பற்றி?
நம்முடைய தமிழ்நாட்டில் தான் நிறைய தடவை பார்த்திருக்கிறோம், போராட்டங்கள் எப்படி எல்லாம் வன்முறையாக யாரால் மாற்றப்படுகிறது என்று. போராட்டம் எப்படி வன்முறையாக மாறும். அவர்களுடைய நோக்கம் என்ன, மக்கள் பாதிக்கப்படும் ஒரு சட்டத்திற்கு எதிராக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். இதில் வன்முறையை நிகழ்த்த அவர்களுக்கு என்ன நோக்கம் இருந்துவிட போகிறது. காவல்துறையினர்தான் கண்ணில் சிக்கியவர்களை எல்லாம் அடித்துள்ளார்கல். ஏதோ குற்ற செயலில் ஈடுபட்டவர்களை போல மாணவர்களை அவர்கள் கடுமையான முறையில் தாக்கியுள்ளார்கள். இது அனைத்திற்கும் அவர்கள் காலத்திடம் பதில் சொல்லத்தான் போகிறார்கள். பிரதமர் போராட்டத்தில் வன்முறை கூடாது என்று இப்போது சொல்கிறார், வன்முறை செய்வது யார்? தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் யார் வன்முறை செய்தார்கள் என்று அவருக்கு தெரியாதா? தில்லி காவல்துறையினர் மாணவர்களை அடித்த வீடியோக்களை நாம் அனைவரும் பார்த்தோம். தமிழகத்தில் நடைபெற்றது போன்று அவர்கள் வாகனங்களை கொளுத்துவதையும் நாம் நேரடியாக பார்த்தோம். அதனால் வன்முறைக்கு யார் காரணம் என்று அனைவருக்கும் தெரியும்.