Skip to main content

“என்னப்பா அவமானப்படுத்துறீங்க?'' -கூட்டத்திலிருந்து வெளியேறிய சீனியர்!!! தனி விமானத்தில் டிடிவி! டெல்லியிடம் சசிகலா டீல்!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020
T. T. V. Dhinakaran

 

 

எப்பொழுதும் அ.தி.மு.க.வை எதிர்த்து விமர்சனம் செய்து கொண்டிருக்கும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சமீபத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஒரு இடத்திலும் அ.தி.மு.க. அரசை விமர்சிக்கவேயில்லை. காரணம், சசிகலா ரிலீஸ் அ.தி.மு.க.வில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள்தான் என்கிறார்கள்.

 

சசிகலாவின் விடுதலையை உறுதிப்படுத்தி கொள்வதற்காக செப்டம்பர் 20ந் தேதி டெல்லி பயணம் மேற்கொண்டார் டி.டி.வி.தினகரன். அதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதியின்றி தனி விமானத்தை அமர்த்துவதும், சென்னை டெல்லி போன்ற விமான நிலையங்களில் அதனை தரையிறக்குவதும் எளிதல்ல. ஆகவே டிடிவியின் டெல்லி பயணத்திற்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கிறது என்கிறார்கள் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

 

  sasikala

 

 

சட்டப்படி ஜனவரி மாதம் 20ந் தேதி வாக்கில் நான்கு வருட தண்டனை முடிந்து வெளியே வரும் சசிகலாவிற்கு முன்கூட்டியே விடுதலை கிடைக்குமா என்கிற முயற்சியில் மன்னார்குடி வட்டாரங்கள் ஈடுபட்டுள்ளன. சசிகலாவுடன் தண்டனை பெற்ற இளவரசி, சுதாகரன் ஆகியோர் அவர்கள் கட்ட வேண்டிய பத்து கோடி ரூபாய் அபராதத்தை கட்டிவிட்டார்கள். சசிகலா விரைவில் விடுதலையை எதிர்பார்க்கிறார். அப்படியானால் அபராத தொகையை உடனே கட்டிவிட வேண்டியதுதானே என மன்னார்குடி வட்டாரங் களை கேட்டோம்.

 

bjp

 

"சசிகலா அபராத தொகை கட்ட வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை. அதற்காக சசிகலா பா.ஜ.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். உடல்நிலை சரியில்லாத அமித்ஷாவுக்கு பதிலாக கட்சி நிர்வாக பொறுப்பை ஏற்றிருக்கும் ராஜ்நாத் சிங், சீனாவுடனான எல்லை மோதலுக்கு நடுவில் சசிகலா விவகாரத்தையும் பேசி வருகிறார். சசி விடுதலைக்குப் பிறகு எப்படி நடந்துகொள்ள வேண்டும். பாஜகவுடன் அடுத்த மூன்று, நான்கு வருடம் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும், பா.ஜ.க. கட்சிக்கு தேர்தல் நிதியாக எவ்வளவு கொடுக்க வேண்டும் என பல விஷயங்கள் சசிகலா, ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டு வருகிறது.

 

இதில் ராஜ்நாத் சிங், சீன எல்லை விவகாரத்தில் பயங்கர பிஸியாக இருப்பதால், சில தாமதங்கள் ஏற்படுகின்றன. அதனால்தான் சசிகலா அபராதத் தொகை கட்டுவதில் தாமதம் ஏற்படுகிறது. எப்படியும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் சிறையை விட்டு வெளியேவர அனைத்து முயற்சிகளையும் சசிகலா செய்து கொண்டிருக்கிறார் என்கிறது மன்னார்குடி வட்டாரங்கள்.

 

இதற்கிடையே தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தனது சொந்த சகோதரன் திவாகரன் ஆகியோரிடம் சிறையில் இருந்தபடியே செல்போனில் சசிகலா பேசி வருகிறார். அதற்கேற்ற திரைமறைவு அரசியல் நகர்வுகள் அ.தி.மு.க.வில் நடைபெற ஆரம்பித்துவிட்டன.

 

admk

 

சசிகலாவிடம் முதலில் சமாதானமாகி நல்ல பெயரை பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் மீது தனது கனிவான பார்வையை சசிகலா திருப்பினார். அந்த நேரத்தில் எடப்பாடி தனக்கு வேண்டிய வருமான வரித்துறை அதிகாரிகளை தூண்டிவிட்டு போயஸ்கார்டனில் சசிகலா கட்டி வரும் வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ் ஒட்ட வைத்தார். இதனால் டென்ஷனான சசிகலா ராஜ்நாத்சிங்கிடம் இதுகுறித்து ஒரு தொழிலதிபர் மூலமாக பேசினார். அந்த சந்திப்பிற்கு பிறகு ராஜ்நாத்சிங், சசிகலா பேச்சுவார்த்தையில் வருமான வரித்துறை நடவடிக்கைகள், சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் என அனைத்தும் இடம்பெற்றன.

 

admk

 

நிலைமை தனக்கெதிராக போவதைக் கண்ட எடப்பாடி கொங்குமண்டலத்தை ஜெ. ஆட்சியில் கவனித்து வந்த ராவணன் மூலம் சசிகலா தரப்பிடம் பேச ஆரம்பித்தார். ராவணன் சொன்னபடி ஒரு காலத்தில் செயல்பட்டு வந்தவர்களான இன்றைய அமைச்சர் தங்கமணியும், அமைச்சர் வேலுமணியும் எடப்பாடிக்காக பேச ஆரம்பித்தார்கள். பழைய பாசத்தோடும் விசு வாசத்தோடும் எடப்பாடி இந்த பேச்சுவார்த்தையை அணுகினார் என்கிறார்கள்.

 

admk

 

இந்நிலையில், எடப்பாடிக்கு டெல்லியில் இருந்து வந்த ஒரு மெசேஜ் அவரை டென்ஷனாக்கிவிட்டது. ஓ.பி.எஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 11 பேர், ஆட்சிக்கு எதிராக வாக்களித்த வழக்கை டெல்லி முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துவிட்டது. அதில் வரக்கூடிய தீர்ப்பு பற்றிய தாக்கம்தான் எடப்பாடியை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

 

எல்லா குழப்பத்திற்கும் காரணம் ஓ.பி.எஸ்.தான் என டென்ஷனோடு அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி கண் முன்பே, "அம்மாவின் ஆதரவு பெற்ற முதல்வர் வேட்பாளர் ஓ.பி.எஸ். வாழ்க'' என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் குரல் எழுப்ப, கட்டுக்கடங்காமல் கோபத்துடன் கூட்டத்திற்கு வந்தார். கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ்., "நான் வழிகாட்டு குழுவை அமைக்க சொன்னேன். கட்சியில் இருக்கக்கூடிய சீனியர்கள், ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் பதவியில் இருந்து விலகி கட்சி பணி ஆற்ற வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன். வழிகாட்டும் குழுவை எடப்பாடி அமைக்கவில்லை'' என்றார். உடனே எழுந்து பேசிய ஜெ.சி.டி.பிரபாகரன், "ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இணைப்புக்கு முன்பு எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் தங்கமணி, உடனடியாக வழிகாட்டுக்குழுவை அமைப்போம் என்று சொன்னார். அதன்படி நடக்கவில்லை'' என்றார்.

 

admk

 

இதனால் ஆவேசமடைந்த தங்கமணி, "அப்படியொன்றும் பேசவில்லை. கட்சியில் பல சீனியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாரை வழிகாட்டுதல் குழு உறுப்பினராக போடுவது என்பதில் சிக்கல் நிலவுகிறது. நாங்கள் கொங்கு மண்டலத்தில் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருக்கிறோம்'' என்றார். அதற்கு பதிலளித்த வைத்திலிங்கம், அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு யார் வேண்டுமென்றாலும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்துக்கொள்ளலாம். கொங்கு மண்டலத்தில் 61 தொகுதிகள்தான் உள்ளன. அதை வைத்து தமிழகத்தில் யாரும் ஆட்சி நடத்திவிட முடியாது'' என்றார்.

 

admk

 

இதற்கிடையே சி.வி.சண்முகம், இந்த ஆட்சியில் வன்னியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என தனக்கே உரிய பாணியில் குரல் எழுப்பினார். சசிகலாவை எதிர்த்து ஏதாவது பேசுங்கள் என ஜெயக்குமாரை சிலர் தூண்டி விட்டனர். அதை கேட்டு கொந்தளித்த ஜெயக்குமார், "நீங்களெல்லாம் ராசியாடுவீங்க. கடைசியில நான்தான் சசிகலாவுக்கு விரோதியாடுவேன்'' என கூட்டத்தைவிட்டே வெளியேறினார். இந்தக் கூட்டத்திற்கு பல அமைச்சர்கள் வரவில்லை. சென்னையில் இருந்தாலும் பல மாவட்டச் செயலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

 

கூட்டத்தின் இறுதியில் எடப்பாடி பேசினார். பன்னீர்செல்வத்தை உட்காரவைத்துக்கொண்டு அனைவர் முன்னிலையிலும் பன்னீர்செல்வத்தின் மீது எடப்பாடி பாயத் தொடங்கினார். "இவர் சொல்லித்தான் சசிகலாவை நான் எதிர்த்தேன். இல்லையென்றால் சசிகலா ஆதரவோடு முதலமைச்சரான நான், அப்படியே தொடர்ந்திருப்பேன்.

 

22 தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. 9 தொகுதியில்தான் நாம் ஜெயிச்சோம். அதனால அன்னைக்கு எனக்கு எதிராக ஓட்டுப்போட்ட இவரோட ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேரோட ஆதரவில்தான் ஆட்சி நிற்கிறது. அந்த 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கில் நமக்கு எதிராக ஒரு தீர்ப்பு வந்தால் நம்ம ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும். இன்னைக்கு இவர், சின்னமாவிடம் முதல் ஆளா போய் சரணடைந்திருக்கிறார். இவருக்கு கட்சியில் என்ன ஆதரவு இருக்கிறது. 80 சதவிகிதம் பேர் என்னை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் சுற்றித்திரிந்து செலவு செய்து, கஷ்டப்பட்டு இந்த ஆதரவை நான் திரட்டியிருக்கிறேன். என்னை ஓ.பி.எஸ்.ஸால் ஒன்றும் செய்து விட முடியாது'' என ஓ.பி.எஸ்ஸை உட்கார வைத்துக்கொண்டே எடப்பாடி எகிறியதால் டென்சன் அடைந்த ஓ.பி.எஸ். கூட்டத்தில் இருந்து வெளியேறி தனி அறைக்கு சென்றார்.

 

admk

 

சீனியரான ஓ.பி.எஸ்.ஸை எடப்பாடி அவமானப்படுத்தியதைக் கண்ட சீனியர் தலைவர்கள் நொந்துபோனார்கள். சீனியரான திண்டுக்கல் சீனிவாசன் எழுந்து, எடப்பாடிக்கு எதிராக "என்னப்பா நீங்க சீனியர் தலைவர்களையே அவமானப்படுத்துறீங்க'' என கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

 

இந்த மோதலைத் தொடர்ந்து எடப்பாடி வீட்டில் கூட்டப்பட்ட கூட்டத்தில் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அவருக்கு போன் போட்ட கே.பி.முனுசாமி, "என்னப்பா, கூட்டத்துல வன்னியருக்கு ஆதரவா பேசுனீங்க. இப்ப எடப்பாடி கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கீங்க.. சமுதாயத்தின் ஆதரவு தேவையில்லையா என கேள்வி எழுப்பினார் என்கிறது அதிமுக வட்டாரம்.

 

அ.தி.மு.கவுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டி, தங்களுக்கு கட்சிக்குள் ரீ-என்ட்ரிக்கான வாய்ப்பை உருவாக்கும் என நினைக்கிறது ரிலீசுக்கு தீவிரமாக முயற்சிக்கும் சசிகலா தரப்பு.

 

-தாமோதரன் பிரகாஷ், மகேஷ்