சேலம் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் கே.ஆர்.எஸ்.சரவணன் போட்டியிடுகிறார். ஒவ்வொரு வேட்பாளரும் அவரவர் ராசி, நட்சத்திரத்தின்படி நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்யும்படி கட்சித் தலைமை அறிவுறுத்தி இருந்தது. அதனால் அதிமுகவில் சில வேட்பாளர்கள் கடந்த 22ம் தேதி மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், சேலம் தொகுதியில் போட்டியிடும் கே.ஆர்.எஸ்.சரவணன், திங்கள்கிழமை (மார்ச் 25, 2019) மாலை 2.40 மணியளவில் சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரி ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக எம்எல்ஏ வெங்கடாஜலம் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் அருள் (பாமக), ராதாகிருஷ்ணன் (தேமுதிக), கோபிநாத் (பாஜக) ஆகியோர் வேட்புமனு தாக்கலின்போது உடன் இருந்தனர்.
முன்னதாக, சேலம் 5 ரோடு அருகே, அதிமுக தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் பொன்னையன் திறந்து வைத்தார். பின்னர், அண்ணா பூங்கா அருகில் இருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் அதிகபட்சம் நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், ஊர்வலமாக வந்தவர்களை ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவாயில் பகுதியிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த ஊர்வலத்தால், இதனால் ஓமலூர் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், நகரின் முக்கிய இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தக்கூட அனுமதிக்கூடாது என உயர்நீதிமன்றம் கடந்த நான்கு நாள்களுக்கு முன் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியினர் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் சென்றது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, அண்ணா பூங்கா அருகே அதிமுக எம்எல்ஏ வெங்கடாஜலத்தின் கார், சாலையில் நீண்ட நேரம் நின்று இருந்தது. இதைப்பார்த்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர், கார் ஓட்டுநரிடம் சென்று, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் உடனடியாக காரை அப்புறப்படுத்துமாறு கூறினார். அதற்கு கார் ஓட்டுநர், காரை எடுக்க மறுத்ததோடு, சீருடையில் இருந்த காவல் ஆய்வாளரிடம் கைகளை நீட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் சக கட்சியினர் மற்றும் காவல்துறையினர் கூடியதால், சமாதானம் அடைந்த கார் ஓட்டுநர் அங்கிருந்து வாகனத்தை நகர்த்தினார். ஆளுங்கட்சியினரின் பொறுப்பற்ற செயல்களால் ஓமலூர் பிரதான சாலையில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு ஆட்சியர் அலுவலக நுழைவாயிலுக்கு வந்த வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனிடம் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு, பேட்டி அளிக்கும்படி கேட்டனர்.
அப்போது வேட்பாளர் சரவணன், ''மறைந்த அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களில் தொடங்கி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாக தலைவர் வாசன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார். தான் இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.
பாமகவின் அன்புமணி ராமதாஸை அவர், 'சின்ன அய்யா', தேமுதிக தலைவரை 'கேப்டன்' என்றும் பவ்யமாக குறிப்பிட்டார்.
அவரிடம், 'எதை முன்னிறுத்தி பரப்புரை செய்வீர்கள்?' என செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'சேலம் தொகுதிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். சிறப்பான முறையில் பணியாற்றுவேன்,' என்றார். மேலும் அவரிடம், 'கட்சிக்குள் உங்களின் அணுகுமுறை சரியில்லை என்று பரவலாக கூறப்படுகிறதே?' என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் சொல்ல சற்று தயங்கிய சரவணனை, அருகில் இருந்த பாமக நிர்வாகி அருள், 'அதெல்லாம் பிறகு பேசலாம். வாருங்கள் போகலாம்' என அரவணைத்து அழைத்துச்சென்றுவிட்டார். கிட்டத்தட்ட ஆளுங்கட்சி வேட்பாளருக்கு வாய்ப்பூட்டு போட்டதுபோல் பாமக நிர்வாகி அவரை கட்டுப்படுத்தி அழைத்துச்சென்றது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகி ஒருவரிடம் விசாரித்தபோது, ''அதிமுக வேட்பாளருக்கு பத்திரிகையாளர்களிடம் பேசிய அனுபவம் இல்லை. அதனால் ஏதாவது உளறிக்கொட்டிவிடக்கூடாது என்பதற்காக பாமக அருள், அப்படி அழைத்துச்சென்று இருக்கலாம். மற்றபடி ஆளுங்கட்சியினரை பாமகவினர் கட்டுப்படுத்துகிறார்கள் என்று சொல்லி விட முடியாது,'' என்றார்.