Skip to main content

பணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்!

Published on 14/02/2020 | Edited on 03/03/2020

குழந்தை பராமரிப்பு வேலை, வீட்டு வேலை என்று ஏஜெண்டுகள் மூலமாக மலேசியா, சிங்கப்பூருக்கு செல்லும் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இப்போது சென்னை ஆவடியைச்சேர்ந்த ஜெயலட்சுமி, மலேசியாவில் ஒரு கும்பலிடம் சிக்கித்தவித்து நக்கீரன் எடுத்த அதிரடி முயற்சிகளால் அப்பெண் மீட்கப்பட்டுள்ளார்.

 

incident



ஆவடியைச்சேர்ந்த கால்டாக்சி டிரைவர் கோதண்டராமன் மனைவி ஜெயலட்சுமி. கணவர் வருமானம் குடும்பம் நடத்த போதவில்லை என்று ஓட்டல் வேலைக்கு சென்றுவந்தார். அப்போது அனுஷியா என்ற வெளிநாட்டு ஏஜெண்டு அவருக்கு அறிமுகம் ஆனார். குழந்தையை மட்டும் பார்த்துக்கொள்ளும் வேலை; 50 ஆயிரம் சம்பளம் என்றதும், ஜெயலட்சுமி மலேசியா செல்ல முடிவெடுத்தார். பிளஸ்டூ படிக்கும் மகளுக்கும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனுக்கும் ஸ்கூல் பீஸ் கட்ட வசதியாக இருக்கும் என்று ஜெயலட்சுமி சொன்னதால், கோதண்டராமனும் இதற்கு ஒத்துக்கொண்டார். மலேசியா செல்ல 50 ஆயிரம் ரூபாயை அனுஷியாவிடம் கொடுத்தார்கள். வேலூரைச் சேர்ந்த முகமது இம்ரான் மூலமாக கடந்த அக்டோபர் மாதம் மலேசியா சென்றார் ஜெயலட்சுமி.

சொன்னபடியே அங்கே குழந்தை பராமரிப்பு வேலை மட்டும் இல்லை. வீட்டு வேலைகள் அத்தனையையும் ஓய்வின்றி செய்யச் சொல்லி கொடுமைப்படுத்தினார்கள். தூங்கக்கூட முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளானார் ஜெயலட்சுமி. "தூங்கக்கூட முடியாத அளவுக்கு வேலை அதிகமாக இருக்கு. என்னால இதுக்குமேல இங்க இருக்கமுடியாது, ஊருக்கே அனுப்பி வச்சிடுங்க...' என்று, மலேசியா ஏஜெண்டுகள் வினோத், சரளாவிடம் அழுதார். "மூணு மாசம் கழித்து, வேறு வேலை வாங்கித் தருகிறோம். அதுவரை சமாளித்துக்கொண்டிரு' என்று ஆறுதல் சொல்லிவிட்டனர். ஆனால், மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அதே வீடுதான் அதே வேலைதான்.

 

incident



இதற்கிடையில் ஜெயலட்சுமியின் உடல்நிலையும் மிகவும் மோசமானது. இதற்கு மேலும் அங்கே இருந்தால் தனது பிணம்தான் ஊருக்கு செல்லும் என்று நினைத்த ஜெயலட்சுமி, அங்குள்ள ஒருவரின் மூலமாக கணவனை தொடர்புகொண்டு, அழுதிருக்கிறார்.

கோதண்டராமன் இது தொடர்பாக வினோத், சரளாவிடம் பேசியபின்னர், மூன்று மாதம் சம்பளம் என்று 76 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு கோதண்டராமன் பலமுறை முயன்றும் கூட ஜெயலட்சுமியிடம் பேசவே முடியவில்லை.

மனைவி கொடுமைப்படுத்தப்படுகிறாள் என்பதை உணர்ந்த கோதண்டராமன், "ஜெயலட்சுமியை ஊருக்கே அனுப்பி வைத்துவிடுங்கள்' என்று கெஞ்சினார். அதற்கு, "2 லட்சம் அனுப்பி வை. உன் பொண்டாட்டியை அனுப்பி வைக்கிறோம். இல்லேன்னா பொய் கேஸ் போட்டு ஜெயில்ல போட்டுவிடுவோம்'’என்று மிரட்டினார்கள்.


"மனைவியை மீட்டுத் தாருங்கள்' என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கோதண்டராமன் புகார் கொடுத்தார். அவர்கள், ஆவடி போலீஸ் ஸ்டேசனுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆவடி போலீஸ் ஸ்டேஷன்ல அனுஷியாவையும், இம்ரானையும் விசாரிச்ச எஸ்.ஐ., ‘அவுங்க சொல்ற மாதிரியே சுமுகமா முடிச்சிக்கோங்க'' என்று கை விட்டுவிட்டார்.

இந்த நிலையில், கோதண்டராமன் நக்கீரனை தொடர்புகொண்டு கண்ணீர் வடித்தார். உடனே, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் நேரடியாக புகார் மனு கொடுத்தோம். பின் கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, துணைக் கமிஷனர் உதவியுடன் வழக்குப் பதிவு செய்து, வெளிநாடு வாழ் தமிழக நல ஆணையர் தினேஷ்பொன்ராஜ் ஆலீவர் ஐ.ஏ.எஸ். மூலம் இந்திய தூதரகம் மற்றும் மலேசிய வெளியுறவுத் துறைக்கு புகார் அனுப்பப்பட்டது .


கலெக்டர் உதவியுடன், மலேசியாவில் செயல்படும் தன்னார்வலர் பாத்திமாவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. அந்த பாத்திமாவே ஒரு ஏஜெண்டு என்பதுடன், சரளாவுடன் சேர்ந்து கொண்டு அவரும் பணம் கேட்டு மிரட்டியது அதிர்ச்சியானது.

நடந்தவை அனைத்தையும் பின்னர் கலெக்டரிடம் கூறினோம். அதன் பின்னர் நடந்த முயற்சியினால், ஏழு நாட்கள் கழித்து ஜெயலட்சுமியை பேச வைத்தார்கள். ஆனாலும், ’பணம் தராவிட்டால் பொய்வழக்கில் ஜெயிலுக்கு அனுப்புவோம்’ என்றே மிரட்டி வந்தனர். இதையடுத்து, லண்டனில் உள்ள அப்துல் பாஷித் என்ற தன்னார்வலரான தமிழர் மூலம் மலேசியன் ஹைகமிஷனுக்கு அழுத்தம் தரப்பட்டது.

இந்த நிலையில், அப்துல் பாஷித் மற்றும் துணைக்கமிஷனர் நாகஜோதியின் அறிவுறுத்தலின்படி, 80 ஆயிரம் ரூபாய்க்கான தேதி குறிப்பிடாத காசோலைகள் கொடுக்கப்பட்டு ஜெய லட்சுமி மீட்கப்பட்டார்.

அடுத்தகட்ட நட வடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

மீட்கப்பட்ட ஜெய லட்சுமி நம்மிடம் பேசிய போது, "நக்கீரன் இல்லை என்றால் என் குழந்தைகள் இன்று என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது''’என்று சொல்லிவிட்டு அழுதார். அவர் மேலும், "உன் வீட்டுக்காரனால பணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட் டுப்போ'’’என்று சொல்லி அடித்து சித்ரவதை செய்தார்கள். நான் மீட்கப்பட்டுவிட்டேன். ஆனால், நான் இருந்த அறையில் இன்னொரு தமிழ்நாட்டுப் பொண்ணும், ஒரு வடமாநிலத்துப் பொண்ணும் சிக்கித் தவிக்கிறார்கள்''’என்று அதிரவைக்கிறார்.