பதவி நியமனம் செல்லாது என்று மதுரை உயர்நீதிமன்றமே பதவியைப் பறித்தாலும், அமைச்சர் முன்னிலையில் மீண்டும் தேனி மாவட்ட ஆவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் தம்பி ஓ.ராஜா.
தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக விதிகளை மீறி ஓ.ராஜாவும் 17 செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டதாக கூறி அவர்களுடைய பதவியை மதுரை உயர்நீதிமன்றம் பறித்து ஒருவாரம் கூட ஆகவில்லை. ஜனவரி 30ஆம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஓ.ராஜா தலைவராகவும், பதவி பறிக்கப்பட்ட 17 பேரும் செயற்குழு உறுப்பினர்களாகவும் மீண்டும் பதவியேற்றனர்.
எந்த விதிகளின்படி இவர்கள் மீண்டும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையிலேயே பதவியேற்றனர் என்பது தெரியவில்லை. எல்லா நியாயங்களும் தர்மங்களும் அறிந்த தர்மயுத்த நாயகனின் தம்பி அல்லவா? இப்படித்தான் நடக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் கமுக்கமாக கூறுவதை கேட்க முடிந்தது.
இது இப்படியென்றால் உள்ளாட்சி பதவிகளுக்கான மறுதேர்தலில் அ.தி.மு.க.வினரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சியையும் பார்க்க முடிந்தது.
தமிழகத்தில் நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முடிவுகளை அறிவிப்பதிலேயே அ.தி.மு.க.வினர் பல இடங்களில் அராஜகமாக நடந்துகொண்டதாக கூறப்பட்டது. அதன்பின்னரும் மாவட்ட ஊராட்சி, ஒன்றியத் தலைவர் தேர்தல்களிலும் பல இடங்களில் தில்லுமுல்லு அரங்கேறியது. இதன் காரணமாக தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சமமாக உள்ள சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலையும், 41 ஊராட்சி ஒன்றியத் தலைவர், 26 ஊராட்சி ஒன்றியத் துணைத்தலைவர் தேர்தல், 266 ஊராட்சித் துணைத்தலைவர் தேர்தல் என 335 இடங்களுக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இவற்றில் பெரும்பாலானவை இரண்டு கட்சிகளும் சம பலத்துடன் இருந்தவை அல்லது சுயேட்சைகளையோ, தி.மு.க. கூட்டணி உறுப்பினர்களையோ விலைக்கு வாங்கி ஜெயிக்க முடியும் என்று அ.தி.மு.க. நினைத்தவை ஆகும்.
இந்த இடங்களுக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 30-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சித் துணைத்தலைவர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் பங்கேற்க தி.மு.க.வைச் சேர்ந்த 8 உறுப்பினர்களும் வந்திருந்த நிலையில், அ.தி.மு.க.வின் 8 உறுப்பினர்களும் வரவில்லை. சமபலத்துடன் இருந்ததால் தலைவர் பதவியும் துணைத் தலைவர் பதவியும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காக அ.தி.மு.க.வினர் வரவில்லை என்று கூறப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத்தில் தி.மு.க.வுக்கு 11 இடங்களும் அ.தி.மு.க.வுக்கு 8 இடங்களும் கிடைத்திருந்தன. இந்த ஒன்றியத் தேர்தலை அமைச்சர் கடம்பூர் ராஜு தனது கவுரவப் பிரச்சனையாக்கியதால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜனவரி 30-ஆம் தேதி மறுதேர்தல் அறிவிக்கப்பட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த அன்புக்கரசி என்ற கவுன்சிலர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்பட்டது. அப்படி இருந்தாலும் அ.தி.மு.க. வேட்பாளர் கஸ்தூரிக்கு 9 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கும். ஆனால், தி.மு.க. வேட்பாளர் பூமாரி தோல்வியடைந்ததாகவும், கஸ்தூரி வெற்றிபெற்றதாகவும் தேர்தல் அதிகாரி உமாசங்கர் அறிவித்தார்.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த தி.மு.க.வினர் "நாங்கள் 10 பேர் இங்கே இருக்கிறோம். எப்படி அ.தி.மு.க. வெற்றிபெற்றதாக அறிவிக்கலாம்' என்று தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கனிமொழி எம்.பி.யும் மாவட்டச் செயலாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோரும் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அலுவலகத்திலிருந்து வெளியேறிய கனிமொழி தி.மு.க.வினருடன் சாலை மறியலில் ஈடுபட்டார். ஒன்றிய அலுவலகம் இருக்கும் சாலை திணறியது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் துரத்தினார்கள். அப்போதும் கனிமொழி மறியலைத் தொடர்ந்தார், அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜனநாயகத்துக்கு விரோதமாக அதிகாரி அறிவித்திருக்கிறார். மறுவாக்குப்பதிவு கேட்டு தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம். நீதிமன்றத்திலும் வழக்குத் தொடருவோம்'' என்று ஆவேசமாக கூறினார். இந்தப் போராட்டத்தின் இடையே, தேர்தல் முறைகேடைக் கண்டித்து சரவணன் என்பவரும் அவருடைய வயதான தாய் லட்சுமியும் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டத்தில் நல்லூர் மற்றும் மங்களூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தலில் நல்லூரில் மட்டும் தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க. வேட்பாளர் பா.ம.க.வைச் சேர்ந்த செல்வி ஆடியபாதம் 12 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் துரைக்கண்ணுவுக்கு 9 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. அதேசமயம் கடந்த முறை மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தின் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சுகுணாவும் அ.தி.மு.க. வேட்பாளர் மலர்விழியும் தலா 12 வாக்குகளுடன் சமபலத்தில் இருந்தனர். இதையடுத்து குலுக்கல் முறையில் தலைவரைத் தேர்வுசெய்ய தேர்தல் அதிகாரி முடிவுசெய்தார். ஆனால், அதை அ.தி.மு.க. ஏற்கவில்லை. எனவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், தனக்கு 14 பேர் ஆதரவு இருப்பதாக கூறி 30-ஆம் தேதி தேர்தலுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் தயாரானார். எனினும், அ.தி.மு.க. வேட்பாளர் ஜனநாயகத்துக்கு விரோதமாக ஆட்களை விலைக்கு வாங்கி தேர்தலை நடத்த முயற்சிப்பதாக கூறி தேர்தலுக்கே தி.மு.க. தடை பெற்று விட்டது.
பேராவூரணியில் அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வில் இணைந்த மாலா போத்தியப்பன் 7 வாக்குகளும் அ.தி. மு.க. வேட்பாளர் சசிகலா 8 வாக்குகளும் பெற்றிருந்தனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த தனது சாதி உறுப்பினர்கள் இருவர் தனக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று மாலா போத்தியப்பன் நினைத்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் பணம் கைமாறியதால் தோல்வியடைந்தார்.
ஈரோடு ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வும் அ.தி. மு.க.வும் ஆளுக்கு மூன்று உறுப்பினர்களுடன் சமபலத்தில் இருப்பதால் கடந்த முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த இருவர் தி.மு.க.வுக்கு வாக்களிக்க தயாராக இருப்பதால் அவர்களை அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் கடத்தி வைத்திருப்பதாக கூறப்பட்டது. இந்த முறையும் தி.மு.க.வைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். கடத்தப்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் வரவேயில்லை. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க தி.மு.க. தயாராக இருந்தாலும் அ.தி.மு.க. தயாராக இல்லை என்பதால் மீண்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
-பரமசிவன், சக்திவேல், ஜீவா, நாகேந்திரன்