தி.மு.க. எம்.எல்.ஏ.வாகிவிட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை எப்படியாவது கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு தீவிரமாக செயல்படுவதன் பின்னணி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. செந்தில் பாலாஜியும் அவருடைய தம்பி அசோக்கும் வீட்டில் இருக்கும் நேரத்தில், அவர்களுடைய வீடுகளை சோதனை செய்து, கையோடு கைது செய்ய தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் திட்டமிட்டனர்.
இதற்காக அவர்களுடைய வீடுகளை இரவுநேரத்தில் கண்காணித்தனர். ஆனாலும், ஜனவரி 31 ஆம் தேதி போலீஸார் சோதனை நடத்தச் சென்றபோது இருவருமே வீடுகளில் இல்லை. இது ஏமாற்றம் அளித்தாலும், தங்களுடைய சோதனையை தொடங்கினர். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் 20 பேர் கொண்ட குழு கரூரில் சோதனை நடத்தியது. அந்த அதிகாலை நேரத்தில் ஐந்து இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் 16 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக 95 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாக புகார் தயாரித்து இந்தச் சோதனை நடைபெற்றது. சென்னை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் ரகசியமாக அனுமதி பெற்று வைத் திருந்தனர்.
செந்தில் பாலாஜியின் அரசியல் நடவடிக்கைகளை முடக்கவே இந்த சோதனை என்று அவருடைய வழக்கறிஞர் மணிராஜ் தெரிவித்தார். ஏற்கெனவே இதுபோல ஒரு வழக்கு பதிவுசெய்து, அது நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆகியிருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் 9, திருவண்ணாமலையில் 2, கரூரில் 5, கும்பகோணத்தில் ஒரு இடத்தில் சோதனை நடைபெற்றது. 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோத னையில் சொத்து ஆவணங்கள், நகைகள், லேப்டாப், வங்கி காசோலைகள், வங்கிக் கணக்குகள், வங்கி இருப்பு பெட்டக சாவிகளை போலீஸார் எடுத்துச் சென்றனர்.
சோதனை குறித்து செந்தில் பாலாஜி பேசும்போது, ""எனக்கும் என் தம்பிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏற்கனவே முடிந்துபோன வழக்கை மீண்டும் தோண்டி எடுத்து வரு கின்றனர். சென்னையில் இருக்கும் எனது இல்லத்தையும், கரூரில் இருக்கும் ஜவுளி நிறுவனத்தையும் பூட்டியுள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவதை தடுக்க திட்டமிட்டு அரசும், அரசு இயந்திரமும் முழு வேகத்துடன் செயல்படுகிறது'' என்றார்.
இந்த வழக்கில் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் பெற்றுவிடாத அளவுக்கு போலீஸார் எச்சரிக்கையாக இருப்ப தாகக் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் பணபலம், சமுதாய பலம் ஆகியவை எந்தவிதத்திலும் சட்ட மன்றத் தேர்தல் நேரத்தல் கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கு சாதகமாக மாறிவிடக் கூடாது என்பதால்தான் இத்தனை தீவிரம்.
-தாவீதுராஜ்