Skip to main content

20 லட்ச ரூபாய்க்குக் காய்கறிகளை இலவசமாக வழங்கிய செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்... ''ஊரடங்கால் யாரும் பசியோடு இருக்கக் கூடாது!''

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

rs 20 lakhs vegetables labour son in namakkal district


நாமக்கல் அருகே, கரோனா ஊரடங்கால் வேலையிழந்து, வருவாய் இழந்து தவித்து வரும் கிராமப்புற ஏழைகளுக்குக் கடந்த ஒரு மாதமாக அன்றாடம் இலவசமாகக் காய்கறிகள் வழங்கி வருகிறார், செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன். 

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (49). இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. மகன், மகள் உள்ளனர். மகளுக்குத் திருமணமாகி விட்டது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திருச்செங்கோடு ஒன்றியத்தில் 1- வது ரிசர்வ் வார்டு கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் தமிழ்ச்செல்வி. அதற்கு முன்பு, அவினாசிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

கணவர் முருகேசன், உள்ளூரில் விசைத்தறி ஆலைகளுக்குத் தேவைப்படும் பேப்பர் கோன் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். சிறிய அளவில் டிராவல்ஸ் மற்றும் பங்குதாரர்களுடன் சேர்ந்து லாரிகளையும் இயக்கி வருகிறார். தனியார் நிறுவனங்களில் தூய்மைப் பணிகளுக்கு ஆட்களைப் பணியமர்த்தும் ஒப்பந்தத் தொழிலையும் செய்து வருகிறார். 
 

 

rs 20 lakhs vegetables labour son in namakkal district


மல்லசமுத்திரம் சுற்றுவட்டாரத்தில் முக்கியப் பிரமுகர் என்று அறியப்படும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்த நிலையிலும்கூட, தான் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் என்பதை நினைவுக்கூரும் வகையில் இப்போதும் வீட்டில் தன் தந்தை பயன்படுத்தி வந்த செருப்பு தைப்பதற்கான உபகரணங்களைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார், முருகேசன். 

கரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாகத் திடுதிப்பென்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, அனைத்துத் தரப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையையும் அடியோடு புரட்டிப் போட்டிருக்கிறது. குறிப்பாக, பெரிய அளவில் சேமிப்புகள் இல்லாத, தினசரி கூலியை மட்டுமே நம்பி அன்றைய தினம் அடுப்பெரிக்கும் விளிம்பு நிலை மக்களின் சமூகப் பொருளாதாரத்தை முற்றிலுமாகப் பாதித்திருக்கிறது. 

இத்தடைக்காலத்தில் உணவின்றி தவித்து வரும் மக்களுக்குப் பல தன்னார்வலர்கள் உதவி வரும் நிலையில், முருகேசன்- தமிழ்ச்செல்வி குடும்பத்தினர் தான் பிறந்த ஊர் மட்டுமின்றி, சுற்றுப்பட்டில் உள்ள பல கிராமங்களுக்கும் தேடிச்சென்று வீடுகள்தோறும் காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். ஆயிரம் இரண்டாயிரம் பெறுமானத்திற்கு அல்ல.... கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் 70 டன் காய்கறிகளை வழங்கி இருக்கின்றனர். வரிசையில் வந்து வாங்கிச்செல்லும் மக்கள் தங்கள் வீடுகளில் காய்கறிகளைக் கொட்டிவிட்டு, மீண்டும் வந்து வரிசையில் நின்றாலும் முகம் சுளிக்காமல் அதே அளவு காய்கறிகளை வழங்குகின்றனர்.
 

rs 20 lakhs vegetables labour son in namakkal district


பொதுச்சேவையில் ஆர்வம் உள்ளோருக்கு அதுவும் ஒருவித போதைதான் போலும். முருகேசன் மட்டுமின்றி அவருடைய மனைவி, மகன் ஆகியோருக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் ஒரே அலைவரிசையில் இருப்பதும் 'மேட் ஃபார் ஈச் அதர்' ரகம் எனலாம். இந்த ஒரு மாதத்தில் அவர் உதவுவது ஒருபுறம் இருந்தாலும், அதனாலேயே சாதி ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்தாகச் சொல்கிறார் முருகேசன். அவர் நம்மிடம் பேசினார்...

''என்னுடைய அப்பா, இங்குள்ள மோர்ப்பாளையம் புளியமரத்தடியில்தான் செருப்பு தைத்து எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கினார். சின்ன வயசுல எத்தனையோ நாள் கஞ்சி மட்டும் குடிச்சி பொழப்ப ஓட்டியிருக்கிறோம். அதனால வறுமைனா என்னனு எனக்கு நல்லாவே தெரியும். நாலாம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறல. 13 வயசுலயே உள்ளூர்ல ஒருத்தர்கிட்ட பண்ணையத்துல வேலைக்குச் சேர்ந்தேன். அப்புறம் ஈரோட்டுல ஒருத்தர்க்கிட்டயும் பண்ணையத்துல வேலை செஞ்சேன். அஞ்சாறு வருஷம் அப்படித்தான் போச்சு. 

அப்புறம் அவங்ககிட்டயே ரிக் லாரி ஓட்ட கத்துக்கிட்டேன். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம்னு போர்வெல் லாரில போய்க்கிட்டு இருந்தேன். எல்லாமே அனுபவப் படிப்புதான். அந்த அனுபவத்துல சொந்தமாக லாரி வாங்கினேன். சின்னதாகப் பேப்பர் கோன் மில் ஆரம்பிச்சேன். இன்னிக்கு சுத்துப்பட்டு கிராமத்துல நானும் ஒரு கோடீஸ்வரன்தான்.
 

 

rs 20 lakhs vegetables labour son in namakkal district


எதையுமே நான் பிறக்கும்போதும் கொண்டு வரல. போகும்போதும் கொண்டு போகப்போறதில்ல. இருக்கற வரைக்கும் என்னால முடிஞ்ச உதவிகள செய்யணும்னு எப்பவும் நினைப்பேன். அந்த எண்ணம்தான் கரோனா ஊரடங்கால் வேலையிழந்து, வருமானம் இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கும் உதவணும்னு தோணுச்சு. 

கிராமப்புறங்களில் பலருக்கு ரேஷனில் 20 முதல் 30 கிலோ அரிசி வரை கிடைச்சிடுது. ஆனால் அவங்க காய்கறி வாங்கத்தான் காசில்லாமல் தடுமாறுவது தெரிஞ்சது. ஊரடங்கால் சரக்கு போக்குவரத்தில் சிக்கல் இருப்பதால் காய்கறிகள் விலையும் ஏகத்துக்கும் ஏறிப்போச்சுங்க. அதனால மக்களுக்குக் காய்கறிகளை மட்டும் இலவசமாக வீடு தேடிச்சென்று கொடுக்கணும்னு முடிவு செஞ்சேன். என்னோட விருப்பத்துக்கு மனைவி, மகனும் எப்போதும் குறுக்கே நின்னதில்ல. 

முதலில் எங்க சொந்த ஊரான அவினாசிப்பட்டி மக்களுக்குக் காய்கறிகளை வழங்கினோம். அப்புறம் இப்போது என் மனைவி கவுன்சிலராக இருக்கும் பள்ளக்குழி, பள்ளக்குழி அக்ரஹாரம், மங்களம், செண்பகமகாதேவி கிராம மக்களுக்கும், அதன்பிறகு திருச்செங்கோட்டை சுற்றியுள்ள மற்ற ஊர்களுக்கும் சென்று வழங்கினோம். கடந்த மார்ச் மாசம் 28- ஆம் தேதியில் இருந்து ஏப். 28- ஆம் தேதி வரைக்கும் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் 70 டன் காய்கறிகளை மக்களுக்குக் கொடுத்திருக்கிறோம்,''  என்கிறார் முருகேசன்.

பெங்களூரு, ஓசூர், மேட்டுப்பாளையம், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் வியாபாரிகளிடம் இருந்தும், சில இடங்களில் விவசாயிகளிடம் நேரடியாகவும் கத்தரிக்காய், கேரட், தக்காளி, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், வெங்காயம் ஆகிய காய்கறிகளைக் கொள்முதல் செய்துள்ளார். காய்கறிகளுக்காக மட்டும் 15 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கும் முருகேசன், பேக்கிங் முதல் வீடுகளுக்குச் கொண்டு சென்று கொடுப்பது வரையிலான பணிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கும் நாளொன்றுக்கு 300 ரூபாய் வீதம் கூலி வழங்கிய அவர், லாரி ஓட்டுநர்களுக்கு கூலி, சரக்கு லாரிகளுக்கான வாடகை ஆகியவற்றின் செலவுகளே கணிசமாகக் கூடிவிட்டதாகச் சொன்னார். 

''இதையெல்லாம் கூட சமாளிச்சுக்குவேன் சார்... நாங்க தாழ்த்தப்பட்ட சமூகம்ங்க. இங்குள்ள சில பேரு, அதிலும் சொந்தக் கட்சியில இருக்கறவங்களே திடீர்னு, ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரன்கிட்ட போய் வரிசையில் நின்னு காய்கறி வாங்கணுமானு சாதி ரீதியா புகைச்சலை கிளப்பி விட்டுட்டாங்க. பல பேரு என் காது படவே பேசினாங்க. 

ஒருநாள்... காய்கறி வாங்க எங்க பகுதியில உள்ள ஒரு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த அம்மா ஒருத்தங்க வரிசையில நின்னுட்டு இருந்தத கவனிச்சிட்டேங்க. அவங்கள பார்த்ததும் பதறிப் போய்ட்டேன்ங்க. ஏன்னா, ஒரு காலத்துல அவங்க பண்ணையத்துலயும் நான் வேலைக்கு இருந்திருக்கேன். அதனால அவங்கள வீட்டுக்கு அழைச்சு வந்து உட்கார வெச்சி, அவங்களுக்குத் தேவையான பொருள்களைக் கொடுத்து, நானே அந்த அம்மாவை நேரில் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிட்டு வந்தேன். 
 

 

rs 20 lakhs vegetables labour son in namakkal district


என்னதான் மத்தவங்களுக்கு உதவுற அளவுக்கு வளர்ந்திருந்தாலும் நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தவன் தானுங்களே... அத இனிமேல் மாத்த முடியுங்களா? என் மனசுல ஒரு குத்தமும் இல்லீங்க. உதவி கேட்கறவங்க கிட்டயும் ஒண்ணுமில்லீங்க. ஆனா இடையில இருக்கற அரசியல்வாதிங்கதான் ஏதாவது சாதி பிரச்சனைய கிளப்பிட்டு இருக்காங்க. மனசு அளவுல எனக்குப் பெரிய காயத்த ஏற்படுத்திட்டாங்க. என்னை எப்படியாவது முடக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க. கடந்த 15 நாளைக்கு முன்னாடி என் வீட்டுக்கு வருமானவரித்துறையில் இருந்து அதிகாரி ஒருவர் வந்து, காய்கறி வாங்கினதுக்கு கணக்கு வழக்கெல்லாம் கேட்டுட்டுப் போனாருங்க. 

இது போதாதுனு, காய்கறிகள் கொடுக்கறது மூலமாக நான்தான் கரோனா வைரஸை பரப்புறேனு வேற கதை கட்டிவிட்டுட்டாங்க. அப்புறம் போலீஸ், தாசில்தார், விஏஓனு அதிகாரிகள் விசாரணைக்கு வந்தாங்க. என் வீட்டு முன்னாடி, 'இங்கே காய்கறிகள் வழங்கப்படமாட்டாது'னு கைப்பட எழுதி ஒட்டிட்டுப் போனாங்க. ஒருத்தர் உதவி செய்யறதை எப்படியெல்லாம் தடுக்க முடியுமோ அப்படியெல்லாம் முட்டுக்கட்டை போட்டாங்க. எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சுங்க. 
 

http://onelink.to/nknapp


அப்புறம் சில பேரு அட்வைசுங்கிற பேர்ல, முருகேசனுக்கு என்னாச்சு...? சொத்துபத்த வெச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாதா? அவனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்குனு பேசுனாங்க. அதுக்காக கஷ்டப்படற ஜனங்கள பார்த்துட்டு சும்மா இருக்க முடியுங்களா? இது நான் சுயமாக சம்பாதித்த சொத்து. மத்தவங்களுக்கு உதவுறது மூலமா சொத்தெல்லாம் அழிஞ்சாலும்கூட, எங்கப்ப செருப்பு தைச்ச அதே புளியமரத்தடியில் நானும் செருப்பு தைக்க உட்கார்ந்துடுவேன். அவர் பயன்படுத்தின சிமுக்குஆரை, தோல், கத்தி, ஆரை, கூட்டம் எல்லாம் அப்படியேதான் பையில போட்டு வெச்சிருக்கேன். என் தொழில் என்னையும் என் மனைவியையும் காப்பாத்திடும்,'' என்றார் முருகேசன்.

முருகேசன் உதவிக்கரம் நீட்டுவதைப் பல விதங்களிலும் அரசியல் கட்சியினர் தடுத்து வந்த நிலையில், இதுவரை அவருக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் எல்லாருமே இப்போது மக்களுக்கு வீடுகள்தோறும் பத்து கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள் என உதவத் தொடங்கி இருக்கிறார்கள். ''இனி நான் கொடுப்பதை நிறுத்தினாலும்கூட மற்ற கட்சிக்காரர்கள் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை என்னால் ஏற்பட்டு விட்டது,'' என்கிறார் முருகேசன்.

பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி ஆகிய வேறுபாடுகள் கருதாது உணவளித்தல் வேண்டும் என்றதும் வள்ளலார்தான்; தானம் கொடுப்போரை தடுத்து நிறுத்தாதே என்றதும் வள்ளலார்தான். பசிப்பிணியை விடக் கொடியது சாதிப்பிணி. பசியைப் போக்குபவன் எவனோ அவனே மேலோன்.