
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி திருவிழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாகத் திருவிழா தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது திருவிழா நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், கூத்தாண்டவர் கோயில் திருவிழா இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்தத் திருவிழாவில் லட்சக்கணக்கான திருநங்கைகள் வந்து கலந்து கொள்வார்கள். இந்தக் கூவாகம் கோவில் அரவான் களப்பலி திருவிழா தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பல மாநிலங்களிலிருந்தும் வருகை தரும் திருநங்கைகள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய நகரங்களில் உள்ள விடுதிகளில், திருமண மண்டபங்களில் தங்கிக் கொள்வார்கள். பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் திருநங்கைகள் ஆண்டுக்கு ஒரு முறை ஒரே இடத்தில் கூடுவதால் உறவினர்களைச் சந்தோசத்துடன் பரஸ்பரம் விசாரித்து, அவர்களோடு விருந்து சாப்பிடுவது என சந்தோஷமாக இருப்பார்கள்.

இந்த திருவிழாவில் திருநங்கைகள் அழகிப்போட்டி மற்றும் நடனம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். இந்த நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது மிஸ் கூவாகம் அழகிப் போட்டி. இந்த ஆண்டுக்கான மிஸ் கூவாகம் தேர்ந்தெடுப்பது உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், சென்னை திருநங்கைகள் அமைப்பு ஆகியவற்றின் சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் பொன்முடி, எம்பிகள் திருச்சி சிவா, விழுப்புரம் ரவிக்குமார், எம்.எல்.ஏக்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், திரைப்பட நடிகர் சூரி, நடிகை நளினி உட்படப் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த இந்த விழாவில் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். அவர்களில் சென்னையைச் சேர்ந்த மெஹந்தி மிஸ் கூவாகமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இடத்தில் திருச்சியைச் சேர்ந்த ரியானாவும், மூன்றாவது இடத்தில் சேலத்தைச் சேர்ந்த சாக்ஷிஸ்வீட்டி ஆகியோரும் பிடித்தனர்.
முதலிடத்தில் வந்த மிஸ் கூவாகம் மெஹந்தி விமான பயிற்சி முடித்துள்ளார். தற்போது முதல் முதலாக அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் கூவாகம் ஆக வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றவர், திருநங்கைகளின் அபரிதமான வளர்ச்சி அவர்கள் திறமை இவற்றைக் கண்டு எங்களை ஒதுக்கி வைத்திருந்த பெற்றோர்கள் தற்போது எங்களை அரவணைத்து வருகிறார்கள். பெற்றோர்கள் உறவினர்கள் ஆதரவு இருந்தால் இன்னும் எங்களால் நிறைய சாதிக்க முடியும் என்றார்.
இந்நிலையில் நேற்று மாலை கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் மணப் பெண் கோலம்பூண்டு, கடவுளை தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்த பூசாரிகளிடம் ஒவ்வொருவரும் தாலி கொட்டிக்கொண்டனர். விடிகாலை அரவான் களபலி அரவான் சாமியின் சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது. அதன் பிறகு திருநங்கைகள் தங்கள் அலங்காரங்களைக் கலைத்து வெள்ளை சேலை உடுத்தி அரவான் பலியான கதையை சொல்லி ஒப்பாரி வைத்து அழுத்தனர். அதன் பிறகு அவரவர் ஊர்களுக்கு பிரிந்து சென்றனர்.

இதுகுறித்து சில திருநங்கைகளிடம் நாம் கேட்டபோது, ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா நோய் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. எங்களுக்கெல்லாம் மிகவும் வருத்தமாக இருந்தது. பல்வேறு பகுதிகளில் இருக்கும் எங்கள் நண்பர்களை எல்லாம் இந்த திருவிழாவில் தான் நேரில் சந்தித்து மகிழுந்து இருப்போம். இரண்டு ஆண்டுகளாக பிரிந்து இருந்த நாங்கள் இன்று ஒன்று சேர்ந்து இருப்பது எங்களுக்கு பல மடங்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. சந்தோஷத்துடன் வரும் நாங்கள் அரவான் களபலி கொடுத்த பிறகு கவலையுடன் கலைந்து செல்கிறோம். அந்த கவலையிலும் ஒரு புத்துணர்ச்சி சந்தோசம் உள்ளது. அடுத்த ஆண்டு மீண்டும் இனிய சந்தோஷத்துடன் இங்கு நடைபெற உள்ள திருவிழாவிற்கு வருவோம்’ என்றார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட திருநங்கைகள் நல சங்கத்தின் தலைவர் சிந்து, “கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் பல லட்சக் கணக்கான மக்கள் கூடுகின்றனர். அதனால், இங்கு அடிப்படைத் தேவைகள் செய்து தரப்பட வேண்டும். திருநங்கைகள் தங்குவதற்கு சமுதாய கூடம், கழிப்பறை, குளியலறை ஆகியவற்றை தற்காலிகமாகவாவது ஏற்பாடு செய்து தரவேண்டும். இந்தக் கோரிக்கையை பல ஆண்டுகளாக நாங்கள் வைத்து, அதற்காக குரல் கொடுத்து வருகிறோம். இன்னும் அவைகள் நிறைவேற்றப்படவில்லை. சுகாதார வசதியை மேம்படுத்த வேண்டும். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூவாகம் கோவில் அமைந்துள்ளது. எனவே, பல லட்சம் பேர் கூடுகின்ற இந்த திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். இதுகுறித்து திருக்கோவிலூர் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளோம். தமிழக அரசு இவைகளை நிறைவேற்றி தரவேண்டும்” என்றார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கூவாகம் திருவிழா நடைபெறுவதால் லட்சக்கணக்கான திருநங்கைகள் பொதுமக்கள் திரண்டனர். இந்த விழாவுக்காக விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியன் தலைமையில், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ஆரணி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் விடுதியில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அறை எடுத்து தங்கியிருந்தனர். அவர்கள் இரவு ஆடல் பாடலுடன் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். அப்போது, பொள்ளாச்சியைச் சேர்ந்த நமீதா என்ற திருநங்கை மாடியில் இருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவருக்கு தலை மற்றும் இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல் துறையினர், திருநங்கை நமீதாவை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த திருநங்கையிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர், தன்னை யாரும் தள்ளிவிடவில்லை என்றும் தானே தவறி கீழேவிழுந்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.