மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே, பினராயி விஜயன் தரப்பும் அச்சுதானந்தன் தரப்பும் காரசாரமாக அறிக்கை, மீடியா பேட்டிகள் வாயிலாக மோதிக்கொண்டார்கள். இந்தப் பிரச்சனையால் 2007 மே 26ல் பினராயி விஜயனை கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் இருந்து நீக்கியது மத்திய குழு.
அப்போது 2009ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கேரளாவில் சிபிஎம் படுதோல்வியை சந்தித்தது. கட்சித் தலைமை, 'உங்கள் இருவரின் மோதல்தான் தோல்விக்கு காரண'மென இருவரையும் எச்சரித்ததோடு, அச்சுதானந்தனிடமிருந்த மையக்குழு பதவியையும் பறித்தது. அப்படியும் இவர்களின் மோதல் முடியாமல் தொடர, 2011ல் சட்டமன்ற தேர்தல் வந்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. முதல்வர் பதவிக்கு, முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, கேரளா மாநில காங்கிரஸ் தலைவருமான முரளிதரன் (முன்னாள் முதல்வர் கருணாகரன் மகன்) இருவரும் முயன்றனர். கட்சித் தலைமை உம்மன்சாண்டியை முதல்வராக அறிவித்து பதவியில் அமர்த்தியது. சிபிஎம் அச்சுதானந்தன் எதிர்கட்சித் தலைவராக பதவிவகித்தார்.
முதல்வராகயிருந்த உம்மன்சாண்டி மீதும், அவரது அமைச்சரவை சகாக்கள் மீதும் சரிதாநாயர் பாலியல் புகார், லஞ்சப் புகார் கிளப்பினார். கேரளாவுக்கு வெளியேவும் அது சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது. எதிர்கட்சியான சிபிஎம் இதில் கவனம் செலுத்தி பெரிய அளவில் போராட்டம் நடத்த முடியாமல், கட்சிக்குள் தங்களது அதிகாரத்துக்காக மோதிக்கொண்டு இருந்தார்கள் அச்சுதானந்தனும் – பினராயி விஜயனும். இந்த மோதலில் இருவரும் மாற்றி மாற்றி ஆட்சியில் இருந்தபோது செய்த தவறுகளை மறைமுகமாக வெளிப்படுத்தினார்கள்.
கொலை செய்யப்பட்ட டி.பி.சந்திரசேகரன்
அதன்படி அச்சுதானந்தன் முதலமைச்சராக இருந்தபோது, காசர்கோடு மாவட்டத்தில் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு குறைந்த விலையில் அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் அச்சுதானந்தனின் உறவினர் சோமன் என்பவருக்கு 2.3 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டது. 'அவர் இராணுவ வீரரேயில்லை, பொய்யான ஆவணங்களைத் தந்து நிலம் வாங்கியுள்ளார், இதற்கு முதலமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உதவியுள்ளார்' என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாரை கெட்டியாக பிடித்துக்கொண்ட உம்மன்சாண்டி அரசு, அச்சுதானந்தன் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய வைத்தார். தன் மேல் எழுந்த ஊழல் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் ஆகிய குற்றச்சாட்டுகளுக்குப் பின்னணியில் சிபிஎம் கட்சியில் உள்ள தனது போட்டியாளரான பினராயி விஜயன் இருக்கிறார் என்கிற கருத்தை அச்சுதானந்தன் தரப்பு வைத்தது. இது பற்றி கருத்து தெரிவித்த அச்சுதானந்தன், 'என் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தால் எதிர்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்' என்றார்.
இந்த இருவரின் மோதலால் உலகளவில் நறுமண பொருட்களுக்கு பெயர் போன கேரளா, அரசியல் அதிகாரப் போட்டியால் ரத்த வாசம் வீசத் தொடங்கியது. சிபிஎம் தலைவர்களில் ஒருவராக இருந்த கோழிக்கோடு ஓஞ்சியம் பகுதி மார்க்சிஸ்ட் பிரமுகரும் அச்சுதானந்தனின் தீவிர ஆதரவாளராகவுமாக இருந்தவர் டி.பி.சந்திரசேகரன். இவர் கட்சியின் மாநில செயலாளராக இருந்த பினராயி விஜயனை கடுமையாக விமர்சிக்கிறார் என கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட சந்திரசேகரன், புரட்சிகர சோசியலிச கட்சியில் இணைந்தார். கட்சி மாறினாலும் அச்சுதானந்தனின் ஆதரவாளராகவே தொடர்ந்தார், தொடர்ந்து பினராயி விஜயனை கடுமையாக விமர்சனம் செய்துவந்த இவர், திடீரென படுகொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை சாதாரணமாக இல்லை. 84 கத்திக்குத்துகளுடன் கொல்லப்பட்டிருந்தார் சந்திரசேகர். இந்த வழக்கில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்கள் பினராயி விஜயன் ஆதரவாளர்கள் என்கிற கருத்து கேரளாவில் பரவியது. இந்த விவகாரத்தில் அச்சுதானந்தன் – பினராயி விஜயன் மோதல் பகிரங்கமாக தெரிந்தது. சந்திரசேகரன் கட்சி துரோகி என்றும், கட்சி பிளவுபட்ட பின்பும் கூட இன்னும் கட்சிக்குள் துரோகிகள் இருக்கிறார்கள் எனவும் அச்சுதானந்தனை சூசகமாக விமர்சித்தார் பினராயி விஜயன். இதற்கு பதிலளித்த அச்சுதானந்தன், "கட்சியில் மாநில செயலாளரின் அணுகுமுறை சர்வாதிகாரி போல் உள்ளது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவு பட்டபோது, எஸ்.எ.டாங்கோ இப்படித்தான் எங்களை விமர்சனம் செய்தார். கட்சி உறுப்பினர்களிடையே கருத்தியல் ரீதியிலும் கொள்கை ரீதியிலும் மாறுபாடு இருந்தாலும் அதைத் தீர்க்க மாநில செயலாளர் முயற்சிக்க வேண்டும்" என்று அறிவுரை வழங்கினார். இந்த இருவரின் மோதலை மத்தியக்குழு வன்மையாகக் கண்டித்து அமைதி காக்க வைத்தது.
அச்சுதானந்தனிடம் கதறி அழும் சந்திரசேகரன் மனைவி
இந்த நேரத்தில் சிபிஎம் மாநில மாநாடு, அச்சுதானந்தன் பிறந்த மாவட்டமான ஆலப்புழாவில் நடைபெற்றது. 4 நாள் மாநாட்டில் இரண்டாவது நாளன்று மாநில செயலாளரான பினராயி விஜயன் கட்சி செயல்பாடு குறித்த அறிக்கையை தாக்கல் செய்தபோது, கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து அச்சுதானந்தன் விலகிச் செல்வதாகவும், கட்சி விரோத சக்திகளை அவர் தனது கைப்பாவையாகப் பயன்படுத்தி வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபமான அச்சுதானந்தன், மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தார். கட்சியின் தேசிய செயலாளர் பிரகாஷ்காரத் சமாதானம் செய்தார். இதனால் கட்சியில் இருந்து விலகும் முடிவை தள்ளி வைத்தார் அச்சு.
இந்தப் பிரச்சனை முடிவுக்கு வரும் முன்பே 2016 சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடங்கின. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியில் உம்மன்சாண்டி – முரளிதரன் மோதல் அதிகமாகியிருந்தது. அவர்கள் அடித்துக்கொண்டாலும், 'ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க சிபிஎம் கோஷ்டிகள் பதவி வெறியில் சொந்தக் கட்சியினரையே கொலை செய்கிறார்கள்' என மக்கள் மன்றத்தில் புகார்களை அடுக்கினர். இதைத் துடைக்க பினராயி, நவகேரளா என்கிற தேர்தல் யாத்திரையை கட்சி வளர்ச்சி என்கிற பெயரில் நடத்தியபோது, சரிதாநாயர் விவகாரம், காங்கிரஸ் அமைச்சர்களின் பாலியல் சீண்டல்கள், ஊழல்களை வெளிப்படுத்தியது.
கேரளாவில் 140 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 92 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 27 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 5 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களில், இந்திய தேசிய லீக் 3 இடங்களிலும் போட்டியிட்டன. சிபிஎம்-ல் முதலமைச்சர் பதவி போட்டியில் இருந்த பிணராயி விஜயன், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மதான் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா தொகுதியிலும் போட்டியிட்டனர். தேர்தலில் சிபிஎம் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. பினராயி – அச்சு இருவரும் வெற்றி பெற்றனர். ஆனால், கட்சியின் மையக்குழு, மாநிலக்குழு ஆதரவோடு பினராயி விஜயன் முதலமைச்சராக பதவிக்கு வந்தார். தற்போது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கருணாகரன் மகன் முரளிதரன் உள்ளார். வருங்காலத்தில் முதல்வர் பதவிக்கு உம்மன்சாண்டியும் – கருணாகரனும் மோதல் இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
பினராயி விஜயன் குடும்பம்
கேரள மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் பாஜகவினர்தான். பெரும்பான்மை மக்கள் மதப்பற்றாளர்களாக உள்ளனர். மக்களின் மதப்பற்றைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்துக்கு வர ஆசைப்படும் பாஜக மற்றும் இந்துத்துவா சக்திகள், 'கேரளாவில் இஸ்லாமியர்கள் லவ் ஜிகாத் நடத்துகிறார்கள், இஸ்லாமியர்களின் தீவிராவதிகளின் புகலிடம் கேரளா, கிருஸ்த்துவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள்' என பல குற்றச்சாட்டுகளை சுமத்துவதோடு, போராட்டங்களையும் நடத்துகிறது. இதனை கேரளா மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றால், சீசன் நேரத்தில் ஆலப்புழா, குமரகம் போன்ற பகுதிகளில் நடக்கும் பேக்வாட்டர் படகு டூர்க்கு பிறமாநில மக்கள் வந்து மகிழ்ச்சியாக இருந்துவிட்டு செல்வதைப்போல, இந்துத்துவா சக்திகள் அதிகாரத்துக்கு வருவதற்காக அவ்வப்போது இங்கு மத விரோதத்தை தூண்டிவிடுகிறார்கள் என்றே நினைக்கிறார்கள். கடவுளின் தேசத்தில் கடவுளின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்பவர்களால் ஆட்சிக்கு வரமுடியவில்லை.
தற்போதைய முதல்வரான பினராயி விஜயனின் மனைவி கமலா ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். ஒரு மகன் விவேக் கிரண், ஒரு மகள் வீணா. இடதுசாரிகளுக்கே உரிய எளிமையான குடும்ப வாழ்க்கைதான் இவர்களுடையது. முதல்வர் பதவியில் அமர்ந்த பின் மத்தியில் ஆளும் பாஜக அரசின் மதவாத கொள்கையை இன்றளவும் எதிர்த்துவருகிறார் பினராயி. தாழ்த்தப்பட்ட சாதியினரை கோயிலுக்குள் அர்ச்சகராக்கும் சட்டத்தை கொண்டு வந்தார். இது 125 ஆண்டு கால போராட்ட வரலாறு. திருவிதாங்கூர் சமஸ்தானம் விதித்த 'கீழ்சாதியின ஆண்கள், பெண்கள் மேலாடை அணியக்கூடாது, உயர்சாதியினராக இருந்தவர்களின் தெருக்களில் நடக்ககூடாது' என்கிற சட்டத்தை மீறி போராட்டங்கள் நடத்தினார் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த கேரளாவின் அய்யன்காளி. இந்த போராட்டத்தில் பெரியாரும் கலந்துக்கொண்டு கைதானார். இதனால் 1936ல் கேரளாவில் ஆலயப்பிரவேசம் சட்டம் இந்தியாவில் முதன் முதலில் கொண்டு வந்த மாநிலம் கேரளா தான். அந்த ஆலயத்தில் பூஜை செய்ய ஒடுக்கப்பட்ட, தீண்டதகாத சாதியாக இருந்தவர்களுக்கு உரிமை கிடைக்க 125 ஆண்டுகள் ஆனது. அதனை சாதித்துக்காட்டியவர் பினராயிவிஜயன். அதோடு, மத்தியில் பிரதமராகவுள்ள நரேந்திரமோடியின் பண மதிப்பிழப்பு, மாட்டுக்கறிக்குத் தடை, ஆர்.எஸ்.எஸ் அலப்பறைக்கு பதிலடி தருவது என இந்துத்துவாவை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
இந்த எதிர்ப்பு பினராயி விஜயனுக்கு இன்று நேற்று வந்ததல்ல. இளம் வயதில் இருந்தே இந்துத்துவா வெறியை எதிர்த்து வருகிறார். 1970களில் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் வேரூன்ற நினைத்து காரியத்தில் இறங்கி கேரளாவில் வாழும் முஸ்லிம், கிருஸ்த்துவ மக்களிடையே மத கலவரத்தை உருவாக்க நினைத்தது. 1971ல் கண்ணூரில் தலசேரியில் சாமி ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் செருப்பு எறிந்தார்கள் என்கிற புரளியை பரப்ப அது பெரும் கலவரமாக மாறியது. இஸ்லாமிய தொழில் நிறுவனங்கள், சிறு சிறு கடைகள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. அப்போது கிளை செயலாளராக இருந்த பினராயி, கட்சியின் சார்பில் ஒரு ஆட்டோ மூலம், ஊர் ஊராக சென்று அது பொய் தகவல், யாரும் நம்பி வன்முறையில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். கண்ணூர் மாவட்டத்தில் முஸ்லீம் பள்ளிகளின் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க சிபிஎம் தோழர்கள் இரண்டு பேர் வீதம் எல்லா பள்ளிகளிலும் காவல் இருந்தனர். ஒரு பள்ளியில் குஞ்சுராமன், பினராயி இருவரும் காவல் இருந்தனர். இரவில் தூக்க கலக்கத்தில் தரையில் படுத்துவிட இதற்காக காத்திருந்த இந்துவெறியர்கள், இருவரையும் வெட்டி வீழ்த்திவிட்டு ஓடிவிட்டது. இதில் யூ.கே.குஞ்சுராமன் சம்பவயிடத்திலேயே பலியாகிவிட்டார், உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த பினராயி விஜயனை, மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து தீவிர போராட்டத்துக்கு பின் காப்பாற்றப்பட்டார். அரசியல் கொலைகள் இன்றும் கேரளாவில் தொடர்கதைதான். ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்தவர்கள் கொல்லப்படுவதும் அவ்வப்போது பழிவாங்கல்களும் கூட நடந்துகொண்டே இருக்கின்றன. பினராயி விஜயன், தன் பாதுகாப்புக்காக துப்பாக்கி உரிமம் வைத்திருந்தார். ஒரு முறை சென்னை விமான நிலையத்தில் அவரிடமிருந்த துப்பாக்கி குண்டுகளினால் நிறுத்தி வைக்கப்பட்டார். அவரது உரிமம் ஃபேக்சில் வந்த பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டார்.
பினராயி விஜயன் மீது பிற்காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு, உள்கட்சி மோதலில் இரண்டாம் கட்ட தலைவராக இருந்தவரை கொலை செய்ய பின்புலமாக இருந்தார் என்கிற குற்றச்சாட்டு போன்றவை மக்கள் மனதில் நீக்கமற பதிந்துள்ளன. அதை கலைய பினராயி விஜயன் முயல்கிறார். இதனால் அடுத்து வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் சிபிஎம் சார்பில் சீத்தாரம்யெச்சூரி ஆதரவாளரான கொடியேறி பாலகிருஷ்ணனும், பிரகாஷ்காரத் ஆதரவாளரான தற்போதைய முதல்வர் பினராயி விஜயனும் கதகளியாடுவார்கள். தமிழக கிராமங்களில் நடக்கும் கூத்துக்கலையின் மாறுபட்ட வடிவமே கதகளி. தெருக்கூத்தில் பாடி, ஆடி, கதை சொல்லி நமக்கு வரலாற்றை தெரியவைப்பார்கள். நடன உணர்ச்சிகளின் வழியாக ஒரு கதையை நமக்கு புரியவைக்கும் கலை கதகளி. இருவரின் கதகளியில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை வருங்காலம் நமக்கு தெளிவுபடுத்தும்.
அடுத்த பகுதியில்...