பல ஆண்டுகள் கடின உழைப்பு, பல மாநிலங்களின் ஆட்சி மாற்றத்திற்கு காரணகர்த்தா, காவி காலூன்ற முடியாது என மார்தட்டிய பல மாநிலங்களில் காவியை வேரூன்ற வைத்தவர் என பல அடுக்கடுக்கான செயல்களால் அமித்ஷா பெற்ற சாணக்கிய பட்டத்தை சற்றே அசைத்துப் பார்த்திருக்கிறது சமீபத்திய அரசியல் சூழல். இப்படி சமூகவலைதளங்களில் அமித்ஷாவின் சாணக்கிய பட்டம் கேலிக்குள்ளாக்கப்படுவதற்கு காரணம் மஹாராஷ்டிராவில் அக்கட்சி சந்தித்த சறுக்கல் மட்டும்தானா..? என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்கும். அப்படியென்றால் அமித்ஷாவின் சாணக்கிய பட்டத்தையும், பாஜகவின் அரசியல் வியூகங்களையும் இப்படி விமர்சனத்துக்குள்ளாக்கியது எது..?
2014 நாடாளுமன்ற தேர்தலின் போது நாடு முழுவதும் வீசிய மோடி அலை காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கிய கட்சிகளை சுருட்டி வீசியது என்றே கூறலாம். அப்படி ஒரு மிகப்பெரிய மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும்பான்மை கொண்ட அரசாங்கமாக மத்தியில் பதவியேற்ற பாஜக, அதன் பின்னர் நடந்த பல சட்டசபை தேர்தலில்களிலும் வெற்றிபெற்று இந்தியா முழுவதையும் காவிமயமாக்குவது என்பதை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. பாஜகவின் இந்த வளர்ச்சி என்பது ஒரே நாளிலோ அல்லது ஒரே ஆண்டிலோ நடந்தது அல்ல. பல தசாப்தங்களை கடந்த கடின உழைப்பு, எதிர்கட்சியினரை திணறடிக்கும் அதிரடி வியூகங்கள் என படிப்படியாக உயர்ந்து இந்திய அரசியலில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பாஜக பிடித்தது.
2014 ஆம் ஆண்டு வெறும் 7 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியிலிருந்த பாஜக அடுத்த நான்கு ஆண்டுகளில் 21 மாநிலங்களை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது. பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், குஜராத், ஜார்கண்ட், கோவா என 7 மாநிலங்களில் மட்டுமே 2014 ல் ஆட்சி செய்த பாஜக அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் தங்களது அரசியல் சாதுரியத்தால் ஆட்சியை பிடித்தது. தேர்தலுக்கு முன் கூட்டணி, தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய கூட்டணி என ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு திட்டத்தை முன்கூட்டியே தயாராக வைத்திருந்தது பாஜக.
2014 ல் 7 மாநிலங்களை ஆட்சி செய்த பாஜக, 2015 ல் 13 மாநிலத்திலும், 2016 ல் 15 மாநிலங்களிலும், 2017 ல் 19 மாநிலங்களிலும் தனது ஆட்சியை நிறுவியது. இறுதியாக 2018 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்திருந்தது. பாஜகவின் இந்த அசுரத்தனமான வளர்ச்சி மற்றும் தொடர் தேர்தல் வெற்றிகள் என அனைத்திற்கும் முக்கிய காரணமாக பலராலும் பேசப்பட்டது அமித்ஷாவின் வியூகம் எனலாம். இப்படி தொடர் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி சம்பாதித்த சாணக்கிய பட்டம் இன்று கேலிக்குள்ளாக்கப்படுவதற்கான விதை 2018 ஆம் ஆண்டுதான் இடப்பட்டது எனலாம். 2018 ஆம் ஆண்டிலிருந்து நடந்த தேர்தல்களில் பாஜகவின் வியூகங்கள் சறுக்க தொடங்கிய சூழலில் தற்போது பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 17 ஆக குறைந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு மிசோரம் போன்ற எதிர்பார்க்கப்படாத இடங்களில் பாஜக வெற்றியை சுவைத்தாலும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் என பலம்பொருந்திய அதன் கோட்டைகளை தவறவிட்டது. அதேபோல ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடனான கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் பாஜக கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்து குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதில் கர்நாடகா மட்டுமே பாஜகவுக்கு சற்று ஆறுதலாக அமைந்தது எனலாம். தற்போது மஹாராஷ்டிராவில் நடந்தது போன்ற ஒரு மிகப்பெரிய குழப்பத்தை கர்நாடகாவும் கடந்த ஆண்டு சந்தித்தது.
கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் எந்தக்கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. பாஜக 104 இடங்களை கைப்பற்றினாலும், காங்கிரஸ், மஜக திடீர் கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஆனாலும் அடுத்த சில மாதங்களில் அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் உருவாகி ஆட்சியை கலைத்ததால் மீண்டும் பாஜக ஆட்சியில் அமர்ந்தது. இருப்பினும் அடுத்த மாதம் நடைபெற உள்ள 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கர்நாடக அரசியலில் யார் ஆட்சியில் இருப்பார்கள் என்பதை முடிவு செய்யும் என்பதால், கர்நாடகா பாஜகவுக்கு சிக்கலையே கொடுத்துள்ளது எனலாம்.
இறுதியாக தற்போது நடந்த மகாராஷ்டிரா தேர்தலிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும், அரசாங்கம் அமைப்பதில் கூட்டணி கட்சியான சிவசேனாவிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தோல்வியடைந்தது. இதனால் 30 ஆண்டுகால கூட்டணியை முறித்து கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க தயாரானது. அதன்பின்பும் குடியரசு தலைவர் ஆட்சி, திடீர் பதவியேற்பு என பல திருப்பங்கள் நிகழ்த்தப்பட்டும் பாஜகவால் இரண்டு நாட்களுக்கு மேல் ஆட்சியில் நிலைத்திருக்க முடியவில்லை. கர்நாடகாவில் எடுத்த அதே மாதிரியான ஒரு முடிவை மீண்டும் மஹாராஷ்டிராவிலும் எடுத்து அதே போன்ற ஒரு முடிவை பாஜக மீண்டும் சந்தித்துள்ளது.
அருணாச்சல பிரதேசம், ஹரியானா என சில மாநிலங்களை தக்கவைத்துக் கொண்டாலும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என முக்கிய மாநிலங்கள் பலவற்றை இழந்தது பாஜக. 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் 71 சதவீத பகுதிகளை ஆட்சி செய்த பாஜக இன்றைய நிலையில் நாட்டின் 40 சதவீத பகுதியை மட்டுமே ஆட்சி செய்யும் நிலைக்கு வந்துள்ளது. பாஜகவின் வெற்றிகளுக்கு அமித்ஷாவின் சாணக்கியத்தனம் காரணமாக இருக்கலாம் எனினும், தோல்விகளுக்கான காரணமாக அமித்ஷா என்ற ஒற்றை நபரின் வியூகங்களை மட்டுமே கேலிக்குள்ளாக்குவதை கடந்து பாஜகவின் ஆட்சி மீதான மக்களின் பின்னூட்டமாகவும் இதனை பார்க்க வேண்டியுள்ளது.
மத்தியில் பாஜக மேற்கொண்ட சில நடவடிக்கைகள், சிறுபான்மையினர் மத்தியிலான அச்சம், கேள்விக்குள்ளாக்கப்படும் பொருளாதார கொள்கைகள், புதிய தொழில்துறை கொள்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகள், ஒவ்வொரு மாநிலத்தின் உட்புற அரசியல், நிலையற்ற கூட்டணிகள் என பல்வேறு காரணிகள் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா காவிமயமாகும் வேகத்தை குறைத்துள்ளது எனலாம். இந்தியா முழுமைக்கும் நடந்த மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற பாஜகவின் வியூகங்கள், சட்டப்பேரவை தேர்தலில் சமீப காலமாக சறுக்கி வருவதை பாஜக மீதான நம்பிக்கை குறைகிறதோ? என்ற கோணத்திலும் பார்க்க வேண்டியுள்ளது. அதே நேரம், வியூகங்களை கடந்து பாஜக என்பது இந்தியாவின் சில பகுதிகளில் அபரிமித பலத்தோடும், பல பகுதிகளில் பலவீனமாகவும் உள்ளது என்பதையே மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களின் வேறுபட்ட முடிவுகள் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.