Skip to main content

நாம் தமிழர் ஆட்சியிலும் பாலியல் குற்றங்களுக்கு இதே தண்டனை தான் - சீமான் தடாலடி பேட்டி!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019


தெலங்கானா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு கால்நடை மருத்துவர் ஒருவரை இளைஞர்கள் நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அவர்கள் அனைவரும் தற்போது கொல்லப்பட்ட நிலையில், இது இந்தியா முழுவதும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஆதரவு தெரிவித்து பேசினார். செய்தியாளர்களின் கேள்விக்கு அவரின் பதில் வருமாறு,

தெலங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? 

"இதை நான் வரவேற்கிறேன். மரண தண்டனை எதற்கும் தீர்வாக இருக்காது என்ற கொள்கையை உடைய பிள்ளைகள் நாங்கள். ஆனால், பெண்களை போகப் பொருளாக கருதி இத்தகைய குற்றங்களை புரியும் யாருக்கும் மரணத்தை விட சிறந்த, தண்டனை வேறு எதுவும் இருக்க முடியாது என்று நினைப்பவர்கள் நாங்கள். இந்த தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட்டது மிக சரியான முடிவு. பொதுமக்கள் அதனை வரவேற்கிறார்கள். அவர்களுக்கு எதிராக வழக்கு நடத்தி தீர்ப்பு வாங்குவது என்பதெல்லாம் நடக்காது. இப்போது பொள்ளாட்சி வழக்கில் என்ன நடந்தது. 90 நாட்களில் குண்டர் சட்டத்தை உடைத்து வெளியில் வந்தது எல்லாம் பெரிய வரலாற்று பிழை. ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த இடத்தில் இவர்கள் தவறு செய்தார்களோ அதே இடத்தில் இவர்களை பொதுமக்கள் முன்னிலையில் சுட்டக்கொன்றால் தான் இந்த மாதிரி தவறு செய்பவர்களுக்கு அச்சம் பிறகும். பிறகு தவறு செய்யவே அவர்கள் யோசிப்பார்கள். இல்லையென்றால் 90 நாளில்  வெளியே வந்துவிடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுவிடும்.  
 

hg



இந்த மாதரி தவறு செய்தவர்களுக்கு அரசாங்கத்தின் செலவில் சோறு போட்டால் அவர்களுக்கு பயம் விட்டுவிடும். தவறு செய்தால் தண்டனை என்ற மனநிலைக்கு அவர்களை கொண்டு வர வேண்டும். நாம் தமிழர் ஆட்சியில் இதே போன்றுதான் தண்டனைகள் கொடுக்கப்படும். அப்போதுதான் தவறுகள் குறையும், குற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட திருந்துவார்கள். சிறு குற்ற செயலில் ஈடுபட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யுங்கள் என்று நாங்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறோம். ஆனால் பொள்ளாட்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளியில் நடமாடி வருகிறார்கள். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். அந்த வீடியோவில் உள்ள காட்சிகளை பார்க்கும் யாரும் மன நோயாளிகளாக மாறிவிடுவார்கள். ஆனால் அத்தகைய குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். இந்த துப்பாக்கிச்சூட்டை ஒரு முன்மாதிரியாக வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்பது நம்முடைய விருப்பம" என்றார்.