இணையத்தில் அதிகம் புழங்குபவர்கள் அனைவரும் அறிந்த ஒரு பெயர் என்றால் அது வாத கோடங்கி வடிவேல். திரைப்படங்களை விமர்சனம் செய்பவர்கள் படத்தின் கதை, பாடல்கள், இயக்கம் உள்ளிட்ட சில முக்கிய அம்சங்களை பற்றிதான் விமர்சனம் செய்வார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இது கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு இயல்பான நிகழ்வுதான். ஆனால், வாத கோடாங்கி வடிவேல், அவர் விமர்சனம் செய்யும் படங்களில் பணியாற்றிய லைட் மேன்களை கூட சும்மா விடுவதில்லை. அவர்களுக்கு ஏதாவது ஒரு பஞ்ச் வைத்து அலற வைப்பார். நமக்கும் ஏதாவது பஞ்ச் விடுவாரா என்ற எதிர்பார்ப்போடு நாம் அவரை சந்தித்தோம். பெண் பார்க்க வந்த மணமகனை போல நம் அனைத்து கேள்விகளுக்கும் இயல்பாகவே பதிலளித்தார். அவரோடு ஒரு கலகல சந்திப்பு,
கோடங்கி பத்தி எங்களுக்கே நன்றாக தெரியும், விமர்சனம் எப்படி செய்கிறார் என்று, ஆனா இந்த வடிவேல் யாரு, அவர் என்ன செய்கிறார்?
வடிவேல் சோத்துக்கு வேற வேலை வச்சி இருக்காரு. பில்டிங் கட்டி சேல்ஸ் பன்ற வேலையை பாத்துக்கிட்டு இருக்கேன்.
படங்களை ரிவியூ செய்கிற வேலைகளை எப்போது தொடங்கனீங்க?
ஆரம்ப காலத்தில் படம் பார்ப்போம், 10 நண்பர்களை கூப்பிட்டு வைச்சி கதை சொல்லுவோம். நம்ம சொல்கிற கதையை கேட்டுட்டு படத்துக்கு போகனும்னு நினைக்கிறவங்க கூட, மீண்டும் தியேட்டருக்கு போகமாட்டாங்க. அப்புறம் பேஸ்புக் வந்தது, அதில் கிராமத்து நடையில் எனக்கு தோணுவதை எழுதினேன். அதுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அப்புறம் பொபைல் வந்த பிறகு யூ-டியூப்பில் படங்களை விமர்சனம் செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமா தான் இருந்தது. ராங்கா கைவைச்சிட்டமோனு கூட நினைச்சியிருக்கேன். அப்புறம் போகப்போக நல்லா வந்துடுச்சி. சித்திரமும் கைப்பழக்கம் போல, இப்ப ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு.
நீங்க முதன்முதலா சிங்கம் படத்தை தான் ரிவியூ செய்தீங்க. இதை எப்படி பிளான் பண்ணி செய்தீர்களா, இல்லை இயல்பாகவே நடந்ததா?
படம் பார்த்த பிறகு இயல்பாகவே எனக்கு தோன்றியது. இந்த படத்திற்கு முன்பே ஒரு சேனல் தொடங்கி இரண்டு படங்களை விமர்சனம் செய்திருந்தேன். அதன் பிறகு அந்த சேனலை முழுக்கு போட்டாச்சி. கொஞ்ச நாள் காத்திருந்து எல்லா செட்டப்பும் பக்கா செய்த பிறகு, வாக்கா வந்து மாட்டிய படம்தான் சிங்கம் 3.
நார்மலா படம் பார்க்கும்போது எப்படி பார்ப்பீங்க, நாங்க எல்லாம் படம் பார்க்கிற மாதிரி காட்சிகளை பாப்பீங்களா? இல்லை, என்ன கமெண்ட் பண்ணலாம், எப்படி இதை வைத்து காமெடி அடிக்கலாம்னு நினைத்து பார்ப்பீர்களா?
அப்படி எல்லாம் இல்லை. எல்லோர் மாதிரியும் நார்மலா தான் நானும் படம் பார்ப்பேன். 20 நிமிடத்திலேயே ஒரு படத்தோட தரத்தை காண்டுபிடித்து விடலாம். இந்த படம் தாங்குமா? இல்லை நமக்கு தீணிப்போடுமானு ஈசியா கணிச்சிடலாம். சில வருஷத்துக்கு முன்புவரை மாசத்துக்கு இரண்டு படங்கள் தான் இந்தமாதிரி சிக்கும், அதை வைத்து விமர்சனம் செய்வோம். இப்ப ஒரு வாரத்துல ரிலீஸ் ஆகின்ற 5 படங்களுமே எங்களுக்கு வேலை கொடுக்கிறது. அதனால் எங்க பிழைப்பு சிறப்பா போயிட்டு இருக்கு.
நீங்க மற்ற படங்களை விமர்சனம் செய்கின்ற மாதிரி விஜய், அஜித் படங்களை விமர்சனம் செய்றதில்லையே? கைவைத்தால் தப்பா போயிடுமோனு பயப்படுகிறீர்களா?
அப்படி சொல்ல முடியாது...சிரிக்கிறார்...இப்படியும் சொல்லலாம். நாம யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவது இல்லை. யாரை நாம விமர்சனம் செய்கிறமோ அவங்க பார்த்தா கூட அதை சிரிச்சிட்டு கடந்து போற மாதிரிதான் நான் விமர்சனம் செய்கிறேன். என் விமர்சனம் யாரையும் காயப்படுத்தாத வகையில் தான் பெரும்பாலும் இருக்கும்.
குறிப்பாக அஜீத் படங்களை ரொம்ப மென்மையா விமர்சனம் செய்கிறீர்கள், நீங்க அஜீத்தின் தீவிர ரசிகரா?
அஜீத் படம், விஜய் படம்னு பார்த்து நான் விமர்சனம் செய்யவில்லை. சினிமாவை சினிமா என்ற அளவில்தான் நான் பார்ப்பேன். அதை அடிப்படையா வைத்து, அந்த படத்தை பற்றி எனக்கு என்ன தோணுதோ அதை விமர்சனமா செய்வேன், அவ்வளவுதான்.
உங்களுக்கும் சிம்புவுக்கும் எதேனும் தனிப்பட்ட பகை இருக்கா?
எனக்கும் அவருக்கும் எந்த தனிப்பட்ட எந்த பகையும் இல்லை. சொல்லப்போனால் ஒற்றுமைதான் இருக்கு, நானும் அவரும் ஒரே வருடத்தில் பிறந்தோம். அவர் மூந்று வயதில் சினிமாவில் ஆடிக்கொண்டிருக்கும் போது, நான் அவர் படத்தை பார்த்து தியேட்டரில் ஆடிக்கொண்டிருந்தேன். சிம்பு சினிமாவில் அனைத்தையும் தெரிந்தவர். ஆனால், அவரை சுற்றி இருப்பவர்கள் ஜால்ரா அடிப்பதாலோ என்னவோ அவரை தேவையில்லாத விவகாரங்களில் சிக்க வைத்து விடுகிறார்கள். அவர் மேல் இருக்கிற அக்கறையில் தான் அவரை அதிகம் விமர்சனம் செய்கிறோம்.