நாடு விடுதலை அடைந்த பிறகு எத்தனையோ சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அரசியல் சட்டத்திலும் எத்தனையோ மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், குடியுரிமைச் சட்டதிருத்தத்திற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பைப் போல வேறு எந்தச் சட்டத்திற்கும் இந்த அளவுக்கு எதிர்ப்பு கிளம்பியதில்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இதுவரை 144 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில்தான், இந்தச் சட்டத்திற்கு தடைவிதிப்பது தொடர்பான விசாரணையில் 4 வாரத்தில் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் பதிலைக் கேட்காமல் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
இந்த வழக்கில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர்கள், “வரும் ஏப்ரல் மாதம் மக்கள்தொகை பதிவேடு தொடங்குகிறது. இதில் கேட்கப்படும் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு தேசிய அளவில் குடிமக்கள் பதிவேடும் தொடங்கப்போகிறது. குடியுரிமைச் சட்டத்தின் அடிப்படையிலேயே இவை நடக்கப்போவதால், இஸ்லாமயர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் உருவாகி இருக்கிறது” என்றனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதைத் தொடர்ந்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளை மாணவர்கள் புறக்கணித்து, இந்த வழக்கிற்கு ஆதரவாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜமைத் உலமா இ ஹிண்ட் உள்ளிட்ட பல அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் நிர்வாகக் குளறுபடிகளை திசை திருப்பவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இஸ்லாமியர்கள் இந்தச் சட்டம் புறக்கணித்து ஓரங்கட்டுகிறது என்று திமுக தனது மனுவில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, குடியுரிமைச் சட்டம் என்பது வெறும் சட்டம் மட்டுமே என்று மத்திய அமைச்சர் ஜவடேகர் கூறியிருக்கிறார்.