Skip to main content

பிரதமருக்கு போன ரிப்போர்ட்! -டென்ஷனில் சீனியர் அமைச்சர்கள்! ரகசிய முயற்சிகளில் எடப்பாடி!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020
ddd


தமிழக அரசியல்வாதிகளின் பொம்மை விளையாட்டாக பல ஆண்டுகளாக உருட்டி விளையாடப் படுகிறது 7 தமிழர் விடுதலை. ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை, கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது. எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது. சட்டமன்றத்திலும் நிறைவேற்றி கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி. ஆனால் கடந்த 2 வருடங்களாக அதன் மீது ஒப்புதல் தராமல் கிடப்பிலேயே வைத்திருந்தார் பன்வாரிலால்.

பொதுவாக, அரசு அனுப்பும் கோப்புகளை கவர்னர் திருப்பி அனுப்பினால் அந்த கோப்புகளில் உள்ள பிரச்சனைகளை மீண்டும் வலியுறுத்தி இரண்டாவது முறையாக அதே கோப்புகளை கவர்னருக்கு அனுப்பி வைக்கும் சட்ட அதிகாரம் அரசுக்கு உண்டு. அப்படி அனுப்பப்படும் போது அதற்கு கவர்னர் ஒப்புதலளிக்க வேண்டும். இதற்கு காலவரம்பு ஏதுமில்லை என்பதை சாதகமாக்கிக் கொண்டு, அமைச்சரவை தீர்மானத்தை கிடப்பில் போட்டுவிட்டார் கவர்னர்.

இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த ஒரு வழக்கில், கவர்னரின் செயல் குறித்த ஆதங்கத்தை வெளியிட்டனர் நீதிபதிகள். இதனையடுத்து, கடந்த புதன்கிழமை டெல்லிக்கு அவசரமாக அழைக்கப் பட்டார் கவர்னர் பன்வாரிலால். அவரது பயண விவரங்களை அறிந்து டென்ஷனில் இருக்கிறார் எடப்பாடி.

இது குறித்து டெல்லி சோர்ஸ்களிடம் நாம் விசாரித்தபோது, ""டெல்லியில் பிரதமர் மோடியை முதலில் சந்தித்தார் கவர்னர். பிரதமரின் செயலாளர்களும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலும் உடன் இருந்தனர். பிரதமரிடம், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, அரசின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து இரு வாரங்களுக்கு ஒரு முறை டெல்லிக்கு அனுப்பிய ரிப்போர்ட் தொடர் பான ஆதாரங்களை கொண்டு வந்துள்ளேன் என சொல்லி, அவற்றை ஒப்படைத்திருக்கிறார்.

தமிழக அரசின் சீக்ரெட்ஸ் என எழுதப் பட்ட அந்த கோப்புகளில், முதல்வர் எடப்பாடி தொடங்கி அனைத்து அமைச்சர்களின் ஊழல் ரெக்கார்டுகள் இருப்பதை பிரதமரிடம் விவரித்த கவர்னர், எடப்பாடி மற்றும் அமைச்சர்களின் பினாமிகள் குறித்த விபரங்களையும் தெரிவித்திருக்கிறார். அப்போது, ""பழனிச்சாமி அரசின் 4 ஆண்டுகால நிர்வாகத்தை உன்னிப்பாகத்தான் கவனித்து வருகிறேன். விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்'' என்றிருக்கிறார் பிரதமர். ""தேர்தலில் தனித்து இயங்குவதற்காக பணத்தை பதுக்குகின்றனர். அதன் வழிகளை அடைக்க வேண்டும் என கடந்த மாதம் நீங்கள் அனுப்பிய ரிப்போர்ட்படிதான் தமிழகத்தில் வருமானவரித்துறை ஆக்ஷனில் இறங்கியுள்ளது'' என்றும் கவர்னரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பிரதமர்.

இதனையடுத்து, 7 பேர் விடுதலை குறித்த விவகாரத்தில் கோர்ட் சொல்லியிருப்பதை வருத்தப்பட்டு பேசிய கவர்னர், மத்திய உள்துறையின் அறிவுறுத்தலின்படிதான் அதன்மீது முடிவெடுக்காமல் இருக்கிறேன் என்பதையும் தெரிவித்தார். நீதிமன்றங்கள் என்னை நோக்கி விமர்சனங்கள் செய்வதை தமிழக முதல்வரும் அமைச்சர்களும் ரசிக்கின்றனர் எனவும் சொல்லியிருக்கிறார். மென்மையாக சிரித்த பிரதமர் மோடி, பீஹார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழகம்தான் நம் இலக்கு என சொல்லி, உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சந்திக்க கவர்னரை அனுப்பி வைத்தார்.

மோடியிடம் கூறியதையே அமித்ஷாவிடமும் ஒப்புவித்துள்ளார் கவர்னர். அப்போது, ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான பல்நோக்கு விசாரணை குழுவின் விசாரணை முற்றுபெறாமல் இருப்பதால் 7 பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) கருத்தைக் கேட்போம். அதன் பதிலைப் பொறுத்து முடிவெடுத்து, கோர்ட்டில் தெரிவிப்போம் என கவர்னருக்கு தெம்பூட்டியிருக்கிறார் அமித்ஷா.

மேலும், தமிழக அரசின் டெண்டர் ஊழல்கள் முதல் கொரோனா ஊழல்கள் வரை அனைத்தும் ஆராயப்படுவதையும், உங்களின் ரிப்போர்ட்டுகளுக்கும், ஐ.பி. (மத்திய உளவுத்துறை) அனுப்பும் ரிப்போர்ட்டுகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதையும் கவர்னரிடம் அமித்ஷா பகிர்ந்துகொள்ள, ராஜ்பவனை எடப்பாடி மதிப்பதில்லை என்கிற தனது கோபத்தை அமீத்ஷாவிடம் கொட்டியிருக்கிறார் கவர்னர்.

மோடி மற்றும் அமித்ஷாவுடனான சந்திப்பை தொடர்ந்து, எடப்பாடிக்கு பயத்தை டெல்லி விரைவில் காட்டும் என்கிற நம்பிக்கையில் கவர்னரின் கோபம் தணிந்திருக்கிறது. இந்த நிலையில், கவர்னர் கொடுத்துள்ள எடப்பாடி அரசின் ஊழல் ரெக்கார்டுகளை ஆராயுமாறு மோடியின் செயலாளர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ்.சிடம் ஒப்படைத்திருக்கிறது பிர தமர் அலுவலகம்‘என்று கவர்னரின் டெல்லி பயணத் தில் நடந்தவைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதற்கிடையே, டெல்லிக்கு கவர்னர் அழைக்கப்பட்டதிலிருந்தே அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முன்னாள் கேரளா கவர்னரும் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியுமான சதாசிவத்தின் உதவியை நாடியிருந்தார் எடப்பாடி. அதேபோல, பிரதமர் அலுவலகத்தில் தொடர்புவைத்துள்ள தனது சமூக தொழிலதிபர்கள் மூலமாகவும் முயற்சித்தார்.

அ.தி.மு.க. அமைச்சர்களை சிறைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் டெல்லியில் துவங்கியுள்ளதாக டெல்லியிலிருந்து கிடைத்துள்ள தகவல்கள் எடப்பாடியையும் மூத்த அமைச்சர்களையும் டென்சனாக்கியிருக்கிறது. இதனால் சில முக்கிய டெண்டர் விவகாரத்தில் கூட எடப்பாடியால் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த விவகாரத்தை கிடப்பில் வைத்துவிட்டு டெல்லியை சமாதானப் படுத்தும் ரகசிய முயற்சிகளில் குதித்துள்ளார் என்கிறார்கள் மத்திய உளவுத்துறையினர்.

-இரா.இளையசெல்வன்