Skip to main content

சேகுவேரா வாழ்க என்றால் போதுமா? வாழ்ந்து பார்க்க முடியுமா? 

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

“அப்பா நான் டாக்டருக்கு படிக்கப் போகிறேன்”
 

che 1

 

அதுவரை என்ஜினியராக போவதாக கூறிவந்த குவேரா, திடீரென்று டாக்டராகப் போவதாக சொன்னதும், எர்னஸ்டோவுக்கு மட்டுமல்ல, தாய் செலியாவுக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
 

“ஏண்டா திடீர்னு இந்த முடிவுக்கு வந்த? என்றாள் அம்மா.
 

“இதில் என்னோட சுயநலமும் இருக்கும்மா. நானே ஒரு நோயாளி. எனக்கே தினமும் சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கு. வீடுகள், தொழிற்சாலைகள் கட்டுவதைக் காட்டிலும் மனுஷனோட நோய்க்கு சிகிச்சை அளிக்கத் தாம்மா போதுமான அளவுக்கு ஆள் இல்ல.”
 

மகனின் பேச்சு தாய்க்கு நிம்மதி அளித்தது. தனக்காக மட்டுமின்றி, பிறருடைய நிலையையும் இணைத்துப் பார்க்கும் பக்குவமான சிந்தனை அதில் வெளிப்பட்டதைப் புரிந்துகொண்டாள்.
 

வீட்டில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. அப்பாவுக்கு அளவிட முடியாத சந்தோஷம். ஏனென்றால், குவேராவின் படிப்பார்வம், அவனுடைய நடவடிக்கைகள் அவருக்குள் புரியாத புதிராகவே இருந்தன. வயதுக்கு மீறிய அமைதி, பொறுப்புணர்வு எல்லாவற்றையும் அவர் கவனித்திருந்தார்.
 

அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் ஏர்ஸில் உள்ள பல்கலைக்கழகத்தில், 1948 ஆம் ஆண்டு  மருத்துவ மாணவனாக குவேரா நுழைந்தான்.
 

தனது செலவுக்கு தானே சம்பாதிக்கும் உறுதி அவனுக்குள் இருந்தது. அதற்காக எந்த வேலையையும் செய்யும் பக்குவம் பெற்றிருந்தான்.
 

அவனுக்காகவே குடும்பத்தினரும் பியூனஸ் ஏர்ஸில் குடியேறினர். முதலில் வாடகை வீட்டில்தான் எல்லோரும் வசித்தனர்.
 

தனது மேட் தேயிலை தோட்டத்தை விற்றுவிட்டு, அதில் வந்த பணத்தைக் கொண்டுவந்து செலியாவிடம் கொடுத்தார். அதைக் கொண்டு கல்லே அரோஸ் என்ற இடத்தில் 2180 ஆம் எண்ணுள்ள வீட்டின் முதல் தளத்தை விலைக்கு வாங்கினார் செலியா.
 

பியூனஸ் ஏர்ஸில் என்ன வேலை செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்கினான். பிசானி என்பவரின் மருத்துவமனையில் உதவியாளராகச் சேர்ந்தான். நகரின் எண்ணெய் தொழிற்சாலைக்குச் சென்று அவ்வப்போது வேலை செய்தான்.
 

அண்ணன் காட்டிய வழியில் வயதுக்கு வந்த மற்ற தம்பி, தங்கைகளும் தங்களுடைய செலவுகளைச் சமாளிக்கும் வகையில் கிடைத்த வேலையை செய்தனர்.
 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேலை செய்து சம்பாதித்த பணத்தில் தனக்குத் தேவையான உடைகள், புத்தகங்ககள் ஆகியவற்றை வாங்கிக் கொள்வான்.
 

பியூனஸ் ஏர்ஸ் நகராட்சிக்கு சொந்தமான கறி வெட்டும் கூடத்தில் கூடுதல் சம்பளம்  தருவதாக கேள்விப்பட்டு அங்கே போய் கொஞ்சநாள் வேலை செய்தான். கடைசியில் பல்கலைக்கழக நூலகத்தின் உதவியாளராகவும் வேலையில் சேர்ந்தான்.
 

மருத்துவ வகுப்பில் அவனுடன் படித்தவர்களில் மூன்று  பேர் மட்டுமே பெண்கள். அவர்களில் ஒருவரின் பெயர் டிட்டா. மன உளைச்சல் ஏற்பட்டால் அதைப் பகிர்ந்து கொள்வதற்கு அவள்தான் வடிகால். இடதுசாரிச் சிந்தனை மிக்கவள். தனது தோழனை நன்றாக புரிந்து கொண்டவள்.
 

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பல்கலைக்கழக இயற்கை அறிவியல் அருங்காட்சியகத்தில் சந்தித்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள். ஏராளமான விஷயங் களைப் பகிர்ந்து கொள்வார்கள். தனது ஆசைகளை வெளிப்படையாக அவளிடம் மட்டுமே கொட்டித் தீர்ப்பான். அவனுக்குள் இருந்த சாதிக்க வேண்டும் என்ற வெறியை அவள் ஊக்குவிப்பாள்.
 

che


அந்த ஆண்டு அர்ஜென்டினா ராணுவத்திற்கு கட்டாய ஆள்சேர்ப்பு நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தேர்வில் குவேரா கலந்துகொண்டான். ஆனால், அவனுக்கு இருந்த ஆஸ்த்மா தொந்தரவைக் காரணம் காட்டி, தேர்வு செய்ய மறுத்துவிட்டனர்.
 

அவனுக்குள் ஒரு குறுகுறுப்பு தொடர்ந்துகொண்டே இருந்தது. தனது கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவனுக்குள் உறைந்து போயிருந்தது. பரந்த இந்த உலகத்தை சுற்றிவர வேண்டும். புத்தகங்களில் படித்த சக மனிதர்களின் வாழ்க்கையை நேரில் காண வேண்டும் என்ற ஆசை  அவனை வதைத்துக் கொண்டே இருந்தது.
 

ஆனால், ஒன்றுக்குமே உதவாமல் வாழ்க்கை வீணாகிவிடுமோ என்ற கவலை தொற்றிக்கொண்டது.

20 வயதில் அடியெடுத்து வைத்த குவேரா தனது நோட்டுப்புத்தகத்தில் எழுதிய கவிதை வரிகள் அவனுடைய இலக்கு எதை நோக்கி இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தியது.
 

“எனக்கு அது தெரியும், எனக்கு அது தெரியும்.
இங்கிருந்து வெளியேறினால், அந்த நதி என்னை விழுங்கிவிடும்.
அது எனது விதி ; இன்று நான் கட்டாயம் மரிக்க வேண்டும்.
ஆனால், அனைத்திலிருந்தும் மீள என்னிடம் ஆற்றல் இல்லை
தடைகளே அவைதான். அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
வெளியே வர எனக்கு விருப்பமில்லை.
ஒருவேளை நான் மரிக்க நேர்ந்தால்,
இந்த குகையிலேயே அது நிகழட்டும்.
 

துப்பாக்கி ரவைகள்...அந்த ரவைகள் என்னை என்ன செய்துவிடப் போகின்றன?
ஆற்றில் மூழ்கியே சாகவேண்டும் என்பது என் விதி.
ஆனால், நான் விதியிடமிருந்து மீளப் போராடப்போகிறேன்.
விதியை மதிநுட்பத்தால் வெற்றிகொள்ள முடியும்.
இறந்துவிடு, ஆம், துப்பாக்கி ரவைகளால் துளைக்கப்பட்டு...
துப்பாக்கியின் நுனியில் உள்ள கத்திகளால் கிழிக்கப்பட்டு...
அப்படி இல்லையேல், மூழ்கிவிடாதே, விடாதே...
போராடு, இறுதிவரை போராடு.”
 

அவனுக்கு இருந்த ஒரே நம்பிக்கை, அவனைப்போலவே ஊர்சுற்ற வேண்டும் என்ற வெறியுடன் இருக்கும்  ஆல்பர்ட்டோதான். அவனும் இப்போது, பட்டம் பெற்று கோரோடோபா மாநிலத்தின் வடக்குப் பகுதி நகரமான சான் பிரான்சிஸ்கோ டெல் சனாரில் உள்ள தொழுநோய் ஆராய்ச்சி மையத்தில் இயக்குநராக பொறுப்பு வகிக்கிறான்.
 

இலக்கு இல்லாத பயணமாக வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது. மருத்துவப்படிப்பும் முக்கியம் தனது கனவை நனவாக்குவதும் முக்கியம். எப்படா கல்லூரி விடுமுறை வரும் என்று காத்திருந்தான் குவேரா.
 

1948ல் கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டவுடன் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினான்.
 

“அப்பா... எனக்கு மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிள் வேண்டும்” என்ற குவேராவை ஆச்சரியமாகப் பார்த்தார் எர்னஸ்டோ.
 

“சைக்கிளிலா போகப்போகிறாய். சான் பிரான்சிஸ்கோ எவ்வளவு தூரம் தெரியுமா? இங்கிருந்து 870 கிலோமீட்டர்.”
 

“தெரியும் அப்பா. நான் அந்தச் சைக்கிளில் மேலும் அதிக தூரம் செல்ல விரும்புகிறேன்” என்றான் குவேரா.
 

19 வயது மகனின் இலக்கு எதுவென்று புரியாத அப்பா, அவனுடைய விருப்பப்படியே ஏற்பாடு செய்து கொடுத்தார்.
 

ஆல்பெர்ட்டோவின் வீட்டுக்குச் சென்றபோது அவன் குவேராவை ஆரத்தழுவி வரவேற்றான்.  இருவரும்  சான் பிரான்சிஸ்கோ நகரின் அழகை ரசித்தார்கள். நிறைய பேசினார்கள்.
 

அர்ஜென்டினாவின் உள்ளடங்கிய பகுதிகளில் வசிக்கும் மெஸ்டிஸோ மக்களின் சீரழிந்த வாழ்க்கையை  நேரில் பார்த்தால்தான் போராட்ட உணர்ச்சி அணையாமல் இருக்கும் என்பதை ஆல்பெர்ட்டோ தெளிவுபடுத்தினான்.
 

ஸ்பானிய மற்றும் அர்ஜென்டினாவின் பூர்வகுடியினர் இணைந்து உருவான இனம் மெஸ்டிஸோ என்று அழைக்கப்படுகிறது. தென்அமெரிக்காவிலேயே அர்ஜென்டினாவில்தான் பூர்வகுடிமக்கள் வேரோடு அழிந்துபோயிருந்தனர். இன்னமும் கிராமப்புறங்களில் அந்த மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைகளைப்போல வாழ்வதாக ஆல்பர்ட்டோ சொன்னபோது, குவேராவும் ஆமோதித்தான்.
 

che

 

 

“நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இன்னமும் ஏராளமாக இருக்கிறது குவேரா. உன் படிப்பை விரைவில் முடி. நாம் திட்டமிடுவோம்.” ஆல்பெர்ட்டோ உறுதியுடன் கூறினான்.
 

“ஆமாம் சே. நாம் ஒரு நீண்ட பயணத்திற்கு திட்டமிட வேண்டும்” என்றான் குவேரா.
 

நெருங்கிய தோழர்களை சே என்று அழைப்பது குவேராவின் வழக்கம். சே என்றால் அர்ஜென்டினா மொழியில் தோழர் என்று அர்த்தம்.
 

ஒருவழியாக எதிர்காலத்தில் என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுக்கும் நிலையை நெருங்கிவிட்டனர்.
 

பின்னர், அங்கிருந்து மாற்றுப்பாதை வழியாக பியூனஸ்ஏர்ஸ் வரை கிராமப்புறச் சாலைகளில் தனது பயணத்தைத் தொடர்ந்தான். அவன் தனது பயணத்தை முடித்தபோது சுமார் 4 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்திருந்தான்.
 

வீட்டுக்குத் திரும்பிவந்து தனது அனுபவங்களைச் சொன்னபோது, தனது பிரதியாக மகன் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார் எர்னஸ்டோ. அவரும் இப்படித்தான் ஊர்சுற்றுவதில் விருப்பம் கொண்டிருந்தார்.
 

தாய் செலியாவும் தம்பி தங்கைகளும், குவேராவின் சாகசக் கதைகளை திறந்தவாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.
 

(ஆதனூர் சோழன் எழுதி நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ள "அணையா பெருநெருப்பு" என்ற தலைப்பில் சேகுவேராவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தின் ஒரு அத்தியாயம்...)

 

 

 

Next Story

மெஸ்ஸி பெயருக்கு இவ்வளவு பவரா?; சாதுரியமாக தப்பித்த மூதாட்டி

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
 An old lady who cleverly escaped from Hamas soldiers because Is Messi name?;

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த நிலையில், அர்ஜெண்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொல்லி, ஹமாஸ் படையினரிடம் இருந்து சாதுரியமாக தப்பித்த 90 வயது மூதாட்டியின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்து ஹமாஸ் படையினரிடம் இருந்து தப்பித்த மூதாட்டி எஸ்டர் குனியோ கூறுகையில், “ஹமாஸ் அமைப்பை சேர்ந்த இரண்டு நபர்கள் ஒரு நாள் காலை என்னுடைய வீட்டிற்குள் நுழைந்து எனது குடும்பம் எங்கே? என்று கேட்டனர். அதற்கு நான் மட்டும் தான் தனியாக இருக்கிறேன் என்று எனது மொழியில் கூறினேன். எனக்கு ஆங்கிலம் தெரியாததால் அவர்கள் என் மீது கோபமாகி எந்த மொழியில் பேசுகிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு நான் அர்ஜெண்டினாவில், ஸ்பானிஷ் மொழியில் பேசுகிறேன் என்று கூறினேன். அதற்கு அர்ஜெண்டினா என்றால் என்ன..? என ஒருவர் கேட்டார்.

 An old lady who cleverly escaped from Hamas soldiers because Is Messi name?;

நீங்கள் கால்பந்து பார்ப்பீர்களா..? அதில் வரும் மெஸ்ஸியின் ஊர்தான் எனது ஊர் என தெரிவித்தேன். அதை கூறியதும், அவர்களிடம் இருந்த துப்பாக்கியை என்னிடம் கொடுத்துவிட்டு என்னுடன் செல்பி எடுத்துவிட்டு சென்றனர். நான் மெஸ்ஸியின் பெயரை குறிப்பிட்டதால் நான் காப்பாற்றப்பட்டேன்” என்று கூறினார். ஹமாஸ் படையினரால் கடத்தப்பட இருந்த மூதாட்டி, பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொன்னதால் காப்பாற்றப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“நான் சேகுவேராவின் மகள் மட்டுமல்ல” - அலெய்டா குவேரா

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

- நர்மதா தேவி, சி.பி.ஐ(எம்)

 

"I am not only the daughter of che guera" - Aleida Guevara

 

எர்னெஸ்டோ சே குவேரா. வெறும் முப்பத்தியொன்பதே ஆண்டு காலம் வாழ்ந்து மறைந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர். அவர் வீர மரணமடைந்து 56 ஆண்டுகள் கரைந்துவிட்டன. ஆனால், இன்றளவிலும் உலக இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக அவர் திகழ்கிறார். அவரது மகள் அலெய்டா செகுவேரா, ஒரு மாத காலப் பயணமாக இந்தியாவிற்கு வந்திருப்பவர், ஜனவரி 17,18 ஆகிய தேதிகளில் சென்னைக்கு வருகை தந்திருந்தார். அவரோடு அவருடைய மகள் எஸ்டெஃபானி மச்சின் குவேராவும் வந்திருந்தார். அவர் ஹவானா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தொழிற்சங்க அமைப்பான சி.ஐ.டி.யூ, அகில இந்திய கியூப ஒருமைப்பாட்டுக் குழு இவர்களுடைய பயணத்தை ஏற்பாடு செய்திருக்கின்றன.

 

18 ஜனவரி அன்று சோஷலிச கியூபாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அகில இந்திய கியூப ஒருமைப்பாட்டுக் குழுவும் ஏற்பாடு செய்திருந்தன. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். 

 

“நீங்கள் எல்லோரும் சேவின் மகள் என்பதால் என் மீது நிறைய அன்பு செலுத்துகிறீர்கள் என்பதை நான் அறிவேன். அது இயற்கைதான். அந்த அன்பில் ஒரு சிறு பகுதியாவது நீங்கள் நான் நானாக இருப்பதற்காகவும், எனது செயல்பாடுகளுக்காகவும் செலுத்த வேண்டும் என நான் கருதுகிறேன்” என்ற டாக்டர் அலெய்டா, “எனது தாயார் என்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்வார். அது எனக்கு மிகவும் முக்கியமானது. ‘நீ பலராலும் நேசிக்கப்படும் ஒரு புரட்சியாளனின் மகளாக இருப்பதால், நீ அனைவராலும் நேசிக்கப்படுவாய். ஆனால், நீ ஒன்றை நினைவில்கொள்! உனது கால்கள் இந்தப் பூமியில் உறுதியாக ஊன்றிட வேண்டும். நீ செய்ய வேண்டிய பணிகளைச் செய்து, அதற்காக நீ மதிக்கப்பட வேண்டும்!’ என்றார். நான் சேகுவேரா மகளாக இருப்பதற்காக மட்டுமல்ல, எனது அம்மாவின் மகளாக இருப்பதற்காவும் பெருமைப்படுகிறேன்” எனக் குறிப்பிட்டார். தனது உரையின் தொடக்கத்திலேயே, தான் எப்படிப்பட்ட நுண்ணர்வு மிக்க மனிதநேயர் என்பதனை வெளிப்படுத்தி அனைவரின் உள்ளங்களையும் கொள்ளைகொண்டார்.

 

திராவிடக் கழகத் தலைவர் வீரமணி, திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்திப் பேசியபோது, தமிழ்நாடு என்ற பெயருக்கு மிகுந்த அழுத்தம் கொடுப்பதையும், அதற்கு கூட்டத்தில் உணர்ச்சிமிக்க கைதட்டல் எழுந்ததையும் கவனித்தார். ஸ்பானிஷ் மொழி மட்டுமே அறிந்த அலெய்டாவுக்கு, தமிழிலிருந்து ஆங்கிலம் - ஆங்கிலத்திலிருந்து ஸ்பானிஷ் மொழிக்கு என மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. கூட்டம் முழுவதையும் குறிப்பெடுத்துக்கொண்டார்.

 

"I am not only the daughter of che guera" - Aleida Guevara

 

“நான் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளித்துப் பணியாற்ற வேண்டும் எனச் சொல்வேன். இடதுசாரி சக்திகள் ஒற்றுமையை ஏற்படுத்திப் போராட வேண்டும்” என்றவர், “உங்கள் மாநிலத்தின் பெயரை எனக்குச் சொல்லுங்கள் பார்ப்போம்!” எனக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார். தமிழ்நாடு என ஒரு சிலர் சொன்னாலும், “எனக்குக் கேட்கவில்லை, எனக்குக் கேட்கவில்லை” எனத் திரும்பத் திரும்பத் தமிழ்நாடு எனக் கூட்டத்தினரைச் சொல்ல வைத்தார். ஒரு கட்டத்தில் அனைவரும் தமிழ்நாடு என ஒரே குரலில் ஒன்றாக உறக்கக் கத்தியதும்… “ஆம் பார்தீர்களா?” என்றார். அரங்கம் அதிரும் கைதட்டல். சேவின் மகள் என்பதற்காக மட்டுமல்லாமல், அலெய்டாவின் கூர்மையான நுண்ணுர்வுக்காகவும் அவரை கூட்டத்தார் நேசித்தை உணர முடிந்தது.

 

“கியூபாவுக்கு இப்போது ஆதரவு அதிகம் தேவைப்படுகிறது. பத்து சதவிகித அமெரிக்க உற்பத்தி சம்பந்தப்பட்டுள்ள எந்தப் பொருளையும், சேவையையும் நாங்கள் எந்த நாட்டோடும் வர்த்தகம் செய்திட முடியாத அளவுக்கு, வட-அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை எங்கள் மீது விதித்துள்ளது. எங்களோடு வர்த்தகம் செய்யும் கம்பனிகளுக்கு பில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கிறது வட-அமெரிக்கா. இதனால் நாங்கள் இரண்டு மூன்று கட்டங்களில் பிற நாடுகளுடன் வர்த்தம் செய்து பொருட்களைப் பெறும் நிலையில் இருக்கிறோம். அதனால் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கூட எங்களால் உறுதி செய்ய முடியவில்லை. இருந்தும் நாங்கள் கோவிட் தொற்றுநோய்க்கு எதிரான 5 தடுப்பூசிகளைத் தயாரித்துள்ளோம். பிற நாடுகளுக்கு அவற்றை வழங்கியுள்ளோம்” என்றார்.

 

“எங்களோடு வர்த்தகம் செய்ய மாட்டோம் எனச் சொல்வதற்கு வட-அமெரிக்காவுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், எங்களோடு வர்த்தகம் செய்யக்கூடாது எனப் பிற நாடுகளைத் தடுப்பது என்பது கொடூரமானது. வெறும் 90 மைல் தொலைவில் இருந்து கொண்டு, இந்தப் பூமியின் மிகப் பெரும் முதலாளித்துவ சாம்ராஜ்ஜியத்தை எதிர்கொண்டு, சோஷலிசத்தைத் தக்கவைக்க கியூபா போராடி வருகிறது. எங்களுக்கு உங்களது ஆதரவு தேவை” என்றார்.

 

“2022-ஆம் ஆண்டில் ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட, கியூபாவிற்கு எதிரான அமெரிக்கத் தடைகள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்து, பூமியில் இருக்கிற ஏறத்தாழ அனைத்து நாடுகளும் வாக்களித்தன. இரண்டே நாடுகள் மட்டும் வாக்களிக்கவில்லை. ஒன்று அமெரிக்கா. மற்றொன்று இஸ்ரேல்” என முன்னதாக கூட்டத்தில் உரையாற்றிய அகில இந்திய கியூப ஒருமைப்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.பேபி தெரிவித்தார்.

 

டாக்டர் அலெய்டாவின் உரையில் இருந்து, கியூபாவில் ஜனநாயகப்பூர்வமாக மக்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தி சமூகப் பண்பாட்டுத் தளத்தில் புதிய மாற்றங்கள் எப்படிக் கொண்டு வரப்படுகின்றன என்பதை உணர முடிந்தது. கியூப மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி 66 சதவிகித பெரும்பான்மை ஒப்புதலோடு புதிகாகக் கொண்டுவரப்பட்டுள்ள குடும்பச்சட்டம் பற்றிக் குறிப்பிட்டார் டாக்டர் அலெய்டா. பாலின சமத்துவத்தை கியூபாவில் நடைமுறைப்படுத்த அந்தச் சட்டம் எவ்வளவு அவசியமானது என்பதையும் விளக்கினார்.  

 

"I am not only the daughter of che guera" - Aleida Guevara

 

டாக்டர் அலெய்டா தனது உரையின் இறுதியில் சேகுவேராவைப் பற்றி குறிப்பிட்டு விடைபெற்றது அனைவரையும் உருக்கிப்பிழிந்தது. "எனது அப்பா பொலிவியாவில் படுகொலை செய்யப்பட்டபோது, நிறைய இசை அமைப்பாளர்களும் பாடகர்களும் அழகான பல பாடல்களை உருவாக்கினார்கள். அவற்றில் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. இழப்பின் வலியைப் பற்றி பேசும் அந்தப் பாடல், மக்களின் வலிமையைப் பற்றியும் பேசும். 'சேகுவேராவை இழந்ததற்காக இந்த உலகம் அழுதிடும். கண்ணீரால் அல்ல, போராட்டத்தால்’ என அந்தப் பாடல் சொல்லும். அர்ஜென்டீனா பாடல் ஒன்று உள்ளது. 'நான் இறந்தால் எனக்காக அழுதிடாதே! நான் செய்த பணிகளைச் செய்திடு! உன்னில் நான் தொடர்ந்து வாழ்ந்துகொண்டே இருப்பேன்'" எனக் குறிப்பிட்டு, அந்த ஸ்பானிஷ் பாடலை மிக உருக்கமாகப் பாடி முடித்தார்.

 

“எனது குடும்பத்துக்கு நான் எந்தப் பொருளையும் விட்டுச் செல்லவில்லை; நாடு அவர்கள் வாழ்வதற்குத் தேவையானதையும், கல்வியும் வழங்கிடும் என்பதால் நான் எதையும் கேட்கவில்லை” என்று சே தனது தோழன் காஸ்ட்ரோவுக்கு இறுதி மடலில் தெரிவித்து விடைபெற்றார். கியூபா மனிதர்களுக்கான தேசமாக இருக்கிறது. மிக அழகிய உள்ளம் படைத்தவராக சேவின் செல்லமகள் அலெய்டா குவேரா கியூபாவால் வளர்க்கப்பட்டிருக்கிறார்.