Skip to main content

தயாநிதி மாறனுக்கு சாதகமா மத்திய சென்னை ?

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

தி.மு.க.வின் வெற்றிக்கோட்டையாக இருந்த மத்திய சென்னையை கடந்தமுறை வேட்டையாடிய அ.தி.மு.க. 2019 நாடாளுமன்றத்தேர்தலில் கூட்டணிக் கட்சியான பா.ம.க.வுக்கு ஒதுக்கிவிட்டது. ஏற்கனவே, இரண்டுமுறை வெற்றிபெற்று எம்.பி.யாக இருந்த தயாநிதிமாறன். கடந்தத் தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் துவண்டு போகாமல், மீண்டும் அதே தொகுதியில் சீட் கொடுத்திருக்கிறது தி.மு.க. 

 

dhayanidhi maran



இந்தப் பக்கம் தி.மு.க. தயாநிதிமாறன், அந்தப் பக்கம் அ.ம.மு.க. டி.டி.வி. தினகரனின் வேட்பாளர் தெஹலான் பார்கவி இருக்க...…"அவுங்க லெவலுக்கு எங்களால் செலவு செய்ய முடியாது' என்று பா.ம.க. வேட்பாளர்கள் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட... ‘"அ.தி.மு.க. வேட்பாளர் நின்னா, நிர்வாகிகளுக்கு செய்யவேண்டிய ஏ டூ இசட் செலவுகளையும் நான் பார்த்துக்கிறேன்'’ என்று தில்லுதுரையாக முன் வந்தவர்தான் தொழிலதிபரும் வேட்பாளருமான சாம் பால்.

தயாநிதிக்காக எழும்பூர், துறைமுகம், வில்லிவாக்கம் தொகுதிகளை தி.மு.க. மாவட்டச் செயலாளர் சேகர்பாபு கவனித்துக்கொள்கிறார். மீதமுள்ள திருவல்லிக்கேணி-சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் தொகுதிகளை மா.செ.வான ஜெ.அன்பழகன் கவனித்துக்கொள்கிறார். 
 

kameela nasser



கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் ஜெ. அன்பழகனைத் தவிர்த்து திரும்பும் திசையெல்லாம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தப் பக்கம் திரும்பினால் அண்ணாநகர் கோகுலஇந்திரா, அந்தப் பக்கம் திரும்பினால் ஆயிரம்விளக்கு வளர்மதி, மற்றொரு பக்கம் திரும்பினால் கூட்டணிக் கட்சியான எழும்பூர் நல்லத்தம்பி, இன்னொரு பக்கம் திரும்பினால் துறைமுகம் பழ.கருப்பையா என திக்குமுக்காடிப் போனார் தயாநிதிமாறன். இதனால், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. விஜயகுமார் 3,33,296 வாக்குகள் பெற்று எம்.பியானார்.  தயாநிதிமாறன் 2,87,455 வாக்குகள் பெற்றார்.  

இந்தமுறை அப்படியல்ல. அண்ணாநகர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, எழும்பூர்,  துறைமுகம், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் ஆகிய மத்தியசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலுமே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் தேர்தல் வேலைகளை சிறப்பாக செய்வார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளார் தயாநிதிமாறன். "வெறும் நம்பிக்கை வைத்தால் போதுமா? கூட்டணிக்கட்சியான பா.ம.க. வேட்பாளருக்கு இருக்கும் தாராள மனசு தயாநிதிக்கு வரவேண்டுமல்லவா?' என்று எதிர்கேள்வி எழுப்புகிறார்கள் மத்தியசென்னை தி.மு.க. நிர்வாகிகள். "இந்தத் தடவையும் தயங்கினார்னா, தி.மு.க. கோட்டையாக இருந்தது அ.தி.மு.க. கோட்டையா மாறிடும்' என்று எச்சரிக்கிறார்கள். 

லட்சத்திற்கும்மேலான முஸ்லிம் சமுதாய ஓட்டுகளை குறிவைத்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுச்செயலாளர் தெஹலான் பார்கவியை களமிறக்கியிருக்கிறது அ.ம.மு.க. இப்படி, மும்முனை தேர்தல் செலவுகள் இருக்கும் என்பதால்தான் அனைத்து தொகுதிகளுக்கும் இரண்டு செலவின பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்திருந்தாலும் மத்திய சென்னைக்கு மட்டும் மூன்று செலவின பார்வையாளர்களை நியமித்துள்ளது. 

 

sham paul



என்னதான் செலவின பார்வையாளர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கணக்கிட்டாலும், வேட்பாளர்கள் தங்களது செலவை குறைத்துதான் காண்பிப்பார்கள். அதுவும், ஒரு வேட்பாளர் 70 லட்ச ரூபாய்க்குமேல் செலவு செய்யக்கூடாது என்று நிர்ணயித்திருக்கிற தேர்தல் ஆணையம், வேட்பாளரை நிறுத்துகிற கட்சியானது எவ்வளவு கோடிகள் வேண்டுமானாலும் தேர்தலில் செலவு செய்யலாம் என்று லூப்ஹோலை வைத்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட வேட்பாளர்கள் வாக்காளர்களை விலைக்கு வாங்கப்போகிறார்கள். அதனால், "கூடுதல் செலவின பார்வையாளர்கள் என்பது அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம்தான் கூடுமே தவிர... நோக்கம் நிறைவேறாது' என்கிறார்கள் ஊழலுக்கு எதிரான அமைப்பினர்.

அ.தி.மு.க. கூட்டணி பா.ம.கவும் தே.மு.தி.க.வும் பா.ஜ.க. ஆதரவுபெற்ற கட்சிகள்தான். அதனால், முஸ்லிம் சமுதாய ஓட்டுகளை பா.ஜ.க.வுக்கு எதிரான தி.மு.க. கூட்டணிக்குத்தான் போடவேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி உட்பட முஸ்லிம் அமைப்புகள்  ஜமாத்தில் பேசிவருகிறார்கள். மேலும், மார்வாடிகளின் ஓட்டுகளும் மத்திய சென்னை வெற்றியை தீர்மானிக்கக்கூடியது. "மார்வாடிகளோ மோடிதான் வரவேண்டும்' என்று நினைப்பவர்கள். ஆனாலும் மார்வாடிகள் ஏரியாவில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட தயாநிதிமாறன் அவர்களின் ஓட்டுகளை தனக்கு சாதகமாக்கும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். 

மக்கள் நீதி மய்யத்தின் மத்திய சென்னை மா.செ. கோமகனுடன் சென்று மனு தாக்கல் செய்தார் நட்சத்திர வேட்பாளரான கமீலாநாசர்.  தயாநிதிக்கு தனிப்பட்ட முறையில் ப்ளஸ், மைனஸ் இரண்டும் கலந்திருந்தாலும் மத்திய சென்னையில் தி.மு.க.வுக்கு உள்ள செல்வாக்கு கைகொடுக்கிறது.  எனினும், தாராளமான  செலவினால் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளரும், அ.ம.மு.க. அணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. வேட்பாளரும் கடும் போட்டியை உருவாக்கியிருக்கிறார்கள்.