"ஏற்கனவே 2004, 2009-ல் நாங்கள் ஜெயித் ததைப் போலவே இந்த முறையும் வெற்றிக்கனியை பறிப்போம். பிள்ளைகளுக்கு கல்விக்கடன் வாங்கிக் கொண்டு தவிக்கும் பெற்றோர்களே… உங்கள் கவலையை விடுங்கள். எப்படியும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். தேர்தல் முடிந்ததும் உங்கள் கவலைகளைத் துடைத்தெறிவோம்''’என திருப்பூர் வீதிகள்தோறும் முழங்கிக்கொண்டிருக்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்.
"ஆனந்தன் எப்படி ஜெயிப்பார் என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு அவர் செய்த துரோகத்தை ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களிடமும் சொல்லி, பரிசுப்பெட்டி வேட்பாளர் செல்வத்திற்கு ஓட்டுக்கேட்டு வீதிகளில் இறங்கப் போகிறேன். ஆனந்தனை தோற்கடித்தே தீருவேன்'' என்று சபதமெடுத்துக் கொண்டு பொதுமக்களிடம் பேசத் தொடங்கி இருக்கிறார் அ.ம.மு.க. மாவட்ட மகளிரணி செயலாளரான ஜெயமணி.
ஆனந்தன் அமைச்சராக இருந்தபோது ஜெய மணியுடனான நட்பு குறித்த சர்ச்சை பலமாக இருந்தது. ஜெயமணியைக் கழற்றிவிட்டு, அடிப் படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கியது நாடறிந்த சம்பவம். இதையடுத்து, ஜெயலலிதா விடம் ஜெயமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் பதவிநீக்கம் செய்யப்பட்டு ஓரம்கட்டப்பட்ட ஆனந்தன்தான் திருப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
"இப்படிப்பட்ட ஆனந்தனுக்கா வாக்களிக்கப்போகிறீர்கள்?'’என நோட்டீஸ் அடித்து விநியோகிக்கும் அளவுக்கு திட்ட மிட்டிருக்கிறதாம் அ.ம.மு.க. தரப்பு. இதையறிந்து ஜெயமணியின் எதிர்ப்பை எப்படி சமாளிக்கலாம் என்ற யோசனையில் திணறிப்போயிருக்கிறதாம் ஆனந்தன் தரப்பு. இவர்கள் இருவரும் இப்படி முட்டிக் கொண்டிருக்க, தன்வசம் இருக்கும் கதிர் அரிவாளைக் கொண்டு வாக்குகளை அறுவடை செய்துகொண்டிருக்கிறார் தி.மு.க. கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன்.
“மத்தியில் ஆளும் மோடி அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகளால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது திருப்பூர் தொகுதி. பல ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் முடக்கம் ஏற்பட்டு, தொழிற்கூடங்கள் எல்லாம் திருமண மண்டபங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், "தோழர்களுக்குத் தோள் கொடுக்கும் தொகுதியான திருப்பூரில், மதவெறி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் என்னவாகும் என்பதை அ.தி. மு.க.வுக்கு உச்சந்தலையில் அடித்த படி நச்சென்று புரிய வைப் போம்''’என தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியின ரோடு உற்சாக நடைபோடுகிறார் சுப்பராயன்.