Skip to main content

காற்றின் மொழிவழியாக என்றும் பிரபஞ்சன் ஒலித்துக்கொண்டே இருப்பார்...

Published on 21/12/2018 | Edited on 21/12/2018

"மனிதனை மனிதனுக்கு உணர்த்துவதைத் தவிர இலக்கியத்திற்கு வேறு ஒரு வேலையும் இல்லை” என்று சொல்லியவர் எழுத்தாளர் பிரபஞ்சன். அதை மட்டும்தான், தன் வாழ் நாள் முழுக்க செய்தும் வந்தார். 1945-ம் ஆண்டு ஏப்ரல், 27-ம் தேதி புதுவையில் பிறந்த பிரபஞ்சன் எனும் சாரங்கபாணி வைத்தியலிங்கம், புதுவையிலே பள்ளிப் படிப்பை முடித்தவர். அதன் பின் கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றார். அதன் பின் தஞ்சாவூரில் ஆசிரியராக பணியை தொடங்கினார்.

 

 

pp

 


1961-ம் ஆண்டு முதல், தமிழ் எழுத்து உலகில் தன் எழுத்துகளை இயங்க வைத்துக்கொண்டு வந்தவர். 1995-ம் ஆண்டு இவரின் ’வானம் வசப்படும்’ எனும் நாவலுக்கு தமிழுக்கான சாகத்ய அகாடமி விருது பெற்றார். மேலும் தன் வாழ்நாளில் எத்தனையோ விருதுகள் வாங்கியிருக்கிறார். தென்றல் பத்திரிகையில் கவிஞர் கண்ணதாசன் நடத்திய வெண்பா போட்டியில் பங்கேற்று, தனது 13 வயதில் வாங்கிய பரிசுதான் அவரின் முதல் பரிசு. இதைப் பற்றி ஒரு மேடையில் பகிர்ந்துகொண்ட பிரபஞ்சன் “நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, தென்றல் பத்திரிகையில் கவிஞர் கண்ணதாசன் வெண்பா போட்டி வைப்பார். அதில் வெண்பாவின் கடைசி வரியை மட்டும் கொடுத்துவிட்டு மீதி மூன்று வரிகளை நிரப்ப சொல்லுவார். அதில் நான் எழுதி முதல் பரிசு வாங்கினேன்” என்றார்.

 

 

எந்தத் துறையிலும் ஒருவர் சாதிக்க எத்தனையோ பேர் உதவி செய்திருப்பார்கள். ஆனால், யாரும் ஆசிரியர் இன்றி எந்தவொரு துறையிலும் சாதிக்க முடியாது. ஒரு கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு நம்மை வழி நடத்துபவர்கள்தான் ஆசிரியர்கள் என்று இல்லை. நாம் தினமும் சந்திக்கக்கூடிய ஒவ்வொருவரும் நம் ஆசிரியர்கள்தான். அவர்கள் நாம் சார்ந்த துறையிலேயே இருந்தால் அவர்களிடம் இருந்து நிறைய பாடம் கற்று நம் துறையில் சாதிக்க முடியும். இல்லையென்றால் அவர்களின் துறையைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும் அவ்வளவுதான் வித்தியாசமே தவிர, ஆசிரியர்கள் இல்லாமல் யாராலும் சாதிக்க முடியாது. “எந்த மேடைகளிலும் என் தமிழ் ஆசிரியரை மறக்கமுடியாது” என்று தான் பேசும் அனேக மேடைகளில் குறிப்பிடுவார் எழுத்தாளர் பிரபஞ்சன். எங்கிருந்தபோதும் அவர் என்றும் தன் ஆசிரியர்களை மறந்ததேயில்லை. 

 

 

“கலைஞன் ஒருவன்தான் தன்னைப் பற்றி சிந்திக்காமல் சமூகத்தைப் பற்றி சிந்திப்பவன்” என்பதில் அவர் எப்போதும் சமரசம் செய்துகொண்டேதே இல்லை. ஒரு படைப்பாளனின் பொருளாதார வாழ்வு எப்போதுமே முற்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ‘தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடிய பாரதியே வறுமையில்தான் இருந்தார். அப்படியிருக்கையில் பிரபஞ்சன் மட்டும் எப்படி விதிவிலக்காகியிருப்பார். “இரண்டு வேளை உணவு, இந்த சமூகம் எனக்கு உத்திரவாதமாக அளித்திருந்தால், இன்னும் சிறப்பான பல கதைகளை நான் எழுதியிருப்பேன்” என்று அவரே ஒரு மேடையில் சொல்லியிருக்கிறார். மனித உறவுகள் நட்பால் பிணைக்கப்பட வேண்டும் என்பது அவரின் ஆழமான கருத்து. மேடைகளில் பேசும்போதும்கூட ஒரு வாக்கியத்திற்கும், இன்னொரு வாக்கியத்திற்கும் இடையே ‘நண்பர்களே’ எனும் சொல்லை சேர்த்து எதிரிலிருக்கும் அனைவரையும் தன்னுள் இழுத்துக்கொள்பவர். இன்று (21.12.2018) அவர் இயற்கை எய்திவிட்டார். ஆனால் அவரின் நண்பர்கள் (வாசகர்கள்) மூலமாக என்றும் இந்த உலகத்தில் காற்றின் மொழிவழியாக ஒலித்துக்கொண்டேதான் இருப்பார்.