"அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் 5-8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் : கல்வி உரிமையைப பறிக்கும் இருபெரும் ஆபத்துகள்!" என்ற தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் ஜனவரி-30 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் பேரா.வீ.அரசு தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், பேரா.கருணானந்தன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் சக்திவேல், மனநல மருத்துவர் ருத்ரன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
''மோடி அரசு மூன்றாம் வகுப்பிலிருந்தே சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுக்க வேண்டுமென்கிறது. அறத்தை போதிக்கிறேன் என்று சொல்லி புராணங்களையும் இதிகாசங்களையும் மனுநீதியையும் சிறுவயதிலேயே திணிக்க முயற்சிக்கிறார்கள். 14 வயதுக்குள் தேர்வே இருக்கக்கூடாது என கல்வியாளர்கள் வலியுறுத்திவரும் நிலையில், ஐந்தாம் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை திணிப்பதன் மூலம் மாணவர்கள் படிப்பில் ஆர்வம் குறைவதோடு மனரீதியான தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள்." என்று எச்சரித்தார் பேரா.வீ.அரசு.

மேலும், '' தமிழகத்தில்தான் 69% இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதனை இல்லாதொழிப்பதோடு, மாணவர்களை கல்வியிலிருந்து அந்நியமாக்கும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது'' என்று சுட்டிக்காட்டினார்.
''தேர்வு எண்ணைக்கூட சரியாக எழுதி பழக்கப்படுத்தப்படாத, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது என்னை பொறுத்தவரையில் வன்முறை.'' என்று தனது உரையைத் தொடங்கிய மனநல மருத்துவர் ருத்ரன், '' முன்பெல்லாம் சொன்ன பேச்சு கேட்க மாட்டேன்கிறான்; அடம்பிடிக்கிறான்; முரட்டுத் தனமாக நடந்து கொள்கிறான்; என்பது போன்ற காரணங்களோடு ஒழுங்கா படிக்கவும் மாட்டேன்கிறான் என்ற குறைகளைச் சொல்லி தம் பிள்ளைகளை அழைத்துவருவார்கள். அவர்கள் பெரும்பாலும் பத்தாம் வகுப்பு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், கடந்த பத்து நாட்களில் மட்டும் ஒழுங்காக படிக்க மாட்டேன்கிறான் என்று சொல்லி ஐந்தாம் வகுப்பு மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வரத்தொடங்கியிருக்கிறார்கள். பள்ளியைத் தாண்டி தனிப்பயிற்சிக்காக குறிப்பிட்ட தொகையை செலவிட்டு வரும் நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள், அதற்காக தமது அத்யாவசிய தேவைகளை சுருக்கிக்கொள்ளும் அவர்கள், அதன்காரணமாக ஏற்படும் தங்களது மன அழுத்தத்தை தங்கள் பிள்ளைகள் மீதுதான் திணிப்பார்கள். இது மேலும் அந்த மாணவனின் மனநிலையைத்தான் பாதிக்கச்செய்யும்.'' என்றார்.

''இவையிரண்டும் இருபெரும் மோசடி.'' என்று குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கிய பேராசிரியர் கருணானந்தன், '' இவர்கள் முன்வைத்த தேசியக் கல்விக்கொள்கை குறித்து, கல்வியாளர்களிடமும் கலந்தாலோசிக்காமல்; பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு சடங்கை நடத்திவிட்டு; நாடாளுமன்றத்திலும் விவாதத்திற்கு முன்வைக்காமல், அங்கு விவாதிக்கப்பட்டு இன்னும் இறுதிவடிவம் பெறாத நிலையில், அதில் பரிந்துரைக்கப்பட்ட விசயங்கள் அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வருவதென்பது பெருத்த மோசடிதான்'' என்றார்.
''அடுத்து மாநில அரசின் மோசடி. பாஜக ஆளும் மாநிலங்களிலேயே அமல்படுத்தாத நிலையில், குறிப்பறிந்து செயல்படும் மனைவியைப் போல 5-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வை கொண்டு வந்திருக்கிறார்கள்.'' ''குழந்தை பருவம் மகிழ்ச்சியான பருவம். அக்குழந்தை தானாக வளர்வதற்கான வாய்ப்பைத்தான் நாம் வழங்க வேண்டுமே தவிர, மோல்டு செய்கிறேன் என்று கூறி எதையும் திணிக்கக்கூடாது. '
''மாணவர்களை மதிப்பிடுவது அவசியம்தான். அது Evaluation ஆக இருக்க வேண்டும். exam ஆக அல்ல. குழந்தை அறியாமலேயே மதிப்பீடு செய்ய முடியும். இவர்கள் முன்வைக்கும் தேர்வு என்பது மதிப்பிடுவதற்கு அல்ல, மாணவர்களை வடிகட்டுவதற்கு. பொதுத்தேர்வில் தோல்வியடைந்தாலும் அடுத்த வகுப்பிற்கு அனுப்பப்படுவார்கள் என்கிறார்கள். தகுதியற்ற வகுப்பில் இருக்கிறோம் என்ற மனநிலை அந்த மாணவனை நிச்சயம் பாதிக்கும்.''
''அடுத்து, மாநில அரசு சட்டமியற்றி மக்கள் வரிப்பணத்திலிருந்து உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலை போன்ற உயர்கல்வி நிறுவனங்களை மைய அரசு கைப்பற்றும் முயற்சிதான் அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து திட்டம்.

கல்விக்காக ஆண்டுதோறும் 4.55 இலட்சம் கோடி மாநில அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் செலவழித்து வரும் நிலையில், இதில் மைய அரசின் பங்கு 75000 கோடி மட்டுமே. வெறும் 17 சதவீதம். இதுவும்கூட கேந்திர வித்யாலயா, ஐ.ஐ.டி. போன்ற நிறுவனங்களுக்குத்தான் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆக, கல்விக்கூடங்களை கபளீகரம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசு நிதிஉதவி தராது; நடைமுறையிலுள்ள பணிப்பாதுகாப்புச் சட்டங்கள் செல்லுபடியாகாது. மாநில அரசின் அதிகாரங்களை பறிப்பதை நோக்கமாக கொண்டது. முழுமையான பல்கலைகழகம் என்றிருந்த கட்டமைப்பையே சிதைக்கப்போகிறார்கள். கிளியை வளர்த்து பூனையிடம் கொடுக்க முடியுமா? '' என்று கேள்வியெழுப்பினார்.
மேலும், ''அட்மிசன், அப்பாயிண்ட்மெண்ட இரண்டிலும் மெரிட் மட்டுமே என்கிறார்கள். இது இடஒதுக்கீட்டை நிராகரிக்கிறது. அதேசமயம், வேறுவகையான இடஒதுக்கீட்டை கொண்டு வருகிறார்கள். 25% வெளிநாட்டு பேராசிரியர்களையும் 30% வெளிநாட்டு மாணவர்களையும் சேர்க்கப்போகிறார்கள். கல்வி கட்டணத்திற்கு எந்த வரையறையும் கிடையாது. கேபிடல் பீஸ் மட்டும் வாங்காதே என்கிறார்கள். மற்றபடி எவ்வளவு வேண்டுமானாலும் கல்விக்கட்டணம் நிர்ணயித்துக்கொள்ளலாம். மெரிட்டில் சேரும் மாணவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருந்தால், அவர்களுக்கு அரசு உதவ வேண்டுமென்கிறார்கள். இது உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை பின்வாசல் வழி கொண்டுவரும் முயற்சி.''
'மாணவர்களின் தரம் குறித்து பேசுகிறவர்கள், போதிய கல்வித்தகுதி இல்லாதிருந்தாலும், அனுபவத்தில் துறைசார்ந்து நிபுணர்களாயிருப்பவர்களை மாணவர்களுக்கு பாடம் எடுக்க அனுமதிக்கலாம் என்கிறார்கள். இது அவர்களுடைய சித்தாந்தம் உள்ளவர்களை உள்ளே நுழைக்க மேற்கொள்ளும் முயற்சி'' ''இவைகளை எதிர்க்கத் தவறிவிட்டால் சமூகத் துரோகிகளாகிவிடுவோம். நாம் இதனை எதிர்க்கக் கடமைப்பட்டுள்ளோம். எதிர்த்து நிற்போம்.'' என்ற அறைகூவலோடு தனது உரையை நிறைவு செய்தார் பேராசிரியர் கருணானந்தன்.

இறுதியாக பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்தவரும் ஆசிரியருமான சக்திவேல், ''கோத்தாரி கல்விக்குழுவின் பரிந்துரைகளில் வெறும் பத்து சதவீதம் மட்டுமே அமல்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேநிலைப்பள்ளி என போதுமான கட்டமைப்புகளை தமிழகத்தில் திறம்பட கொண்டு வந்திருக்கிறார்கள். தற்போது, தனியார் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் இதனை சிதைக்கப்பார்க்கிறார்கள். மலைப்பாம்பு போல பொதுப்பள்ளிகளை விழுங்கும் செயல். '' என்ற அவர், ''பள்ளிக்கூடங்கள் எழுதப்படிக்க மட்டும் சொல்லித்தரும் இடமல்ல. அனைத்து விசயங்களையும், வாழ்க்கையை புரிந்துகொள்ள, சக மனிதனோடு இணைந்து வாழ்வதையும் கற்றுக்கொள்ளும் இடமாக இருக்கிறது. அந்த சூழலை பாதுகாக்க வேண்டும்.'' என்றார்.

இந்நிகழ்வில், பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக்குழு - சென்னை சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள ''அண்ணா பல்கலைக் கழகம்: உயர் சிறப்புத் தகுதியா? மாநில உரிமை பறிப்பா?'' என்ற நூல் வெளியிடப்பட்டது.