லோக்கல் போலீஸ், சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. என மாறி மாறி சென்றுகொண்டிருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் கைகளில் சென்றடைந்துள்ளது. முதலில் இந்த வழக்கை விசாரித்த லோக்கல் போலீஸ் எஸ்.பி.பாண்டியராஜன் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டார். "இந்த சர்ச்சையால் வெளியான வீடியோக்களுக்கு மேல் வேறு எதுவும் இல்லை' என்றார். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வசம் வழக்கு சென்றது. சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யான ராஜேசுவரி இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என வழக்கு சி.பி.ஐ. வசம் சென்றது.
வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. லோக்கல் போலீசில் ஒரு பெண் கொடுத்த புகாரை தவிர வேறு எந்த புதிய புகாரும் வரவில்லை. அந்தப் புகாரிலும் லோக்கல் போலீசாரால் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ் மற்றும் அவரது நண்பர்களை தவிர புதிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட வீடியோவிலேயே ஆறு பெண்கள் இடம் பெறுகிறார்கள். அவர்களை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. நக்கீரன் அந்த ஆறு பெண்களில் ஒருவரை கண்டுபிடித்து பேட்டியெடுத்து செய்தி வெளியிட்டது. அந்த பெண்ணிடம் கூட புகாரை பெற வழக்கை விசாரிக்கும் ஏஜென்சிகள் தயாராக இல்லை என குமுறல்கள் எழுந்தன.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே சொல்ல தயங்குகிறார்கள். அவர்கள் புகார் தெரிவிக்க பல இடங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பெண்கள் சந்திக்க முடியவில்லை. எனவே புகார் தெரிவிக்க ஒற்றைச் சாளர முறை ஒன்றை அறிவிக்க வேண்டும். ஒரு உயர் பெண் போலீஸ்அதிகாரி தலைமையில் புதிய விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல சிகிச்சை, சட்ட உதவிகள், பெண் சமூகவியலாளர்கள் உதவி வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை மாவட்ட ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி ராதிகாவும், சென்னை உயர்நீதிமன்ற பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டன.
பாலியல் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., "நாங்கள் புதிய குற்றவாளிகளை கண்டுபிடித்திருக்கிறோம். அவையெல்லாம் விசாரணை நிலையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என தெரிவித்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினி சி.சரவணன் அடங்கிய பெஞ்ச் "இனிமேல் பொள்ளாச்சி பாலியல் வழக்குகளை உயர்நீதிமன்றம் மேற்பார்வையிடும். வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் இனிமேல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டது. பொள்ளாச்சி வழக்கு மறுபடியும் புது வேகம் பெற்றுள்ளது. அதனால் வழக்கில் தொடர்புடைய ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள் கலங்கிப் போயுள்ளனர் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.