Skip to main content

“ஒரே ஒரு ரூபாய் கூட தமிழக முதல்வரால் வாங்கிக்கொடுக்க முடியவில்லை” -கே.பாலகிருஷ்ணன்

Published on 01/12/2020 | Edited on 01/12/2020
K.Balakrishnan-MLA

 

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி, கடந்த ஆறு நாட்களாக, பஞ்சாப் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. 

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

 

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவுகின்றன என்றும் விவசாயிகளின் பெயரை குறிப்பிட்டு பயனடைந்துள்ளனர் என்றும் மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே? 

 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடும் குளிரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பிரதமர் விவசாயிகளுக்கு புதிய வாழ்வு, புதிய உரிமை கிடைக்கிறது என்று பேசுகிறார். நீங்கள் போட்ட சட்டம் புதிய வாழ்வு, புதிய உரிமை கிடைக்கிறது என்று விவசாயிகள்தானே சொல்ல வேண்டும். இந்த சட்டம் பயன் அளிக்குமா? பயன் அளிக்காதா? என்பதை அனுபவத்தில் விவசாயிகள்தானே சொல்ல முடியும். 

 

அப்படியென்றால் விவசாயிகள் விவரம் தெரியாமல் போராடுகிறார்களா? புதிய வாழ்வு, புதிய உரிமை கிடைக்கிறது என்றால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். விவசாயிகள் இந்த அளவுக்கு கொதித்தெழுந்து போராட வந்திருக்கிறார்கள், அதனை புரிந்து கொள்ள முடியாத ஜனநாயக பண்பு இல்லாமல் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. 

 

ddd

 

விவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளார்களே?

 

விவசாயிகளுக்கு பாதிப்பு வரும்போது அவர்களுக்காக போராடாத கட்சி நாட்டில் இருந்து என்ன பிரயோஜனம். அரசியல் கட்சி எதற்காக வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு பாதிப்பு வரும்போது, அவர்களுக்கு பிரச்சனை வரும்போது அதனை தட்டிக் கேட்பது, அதற்காக போராடுவதுதான் அரசியல் கட்சிகளின் நோக்கம். 

 

விவசாயிகளுக்கு பாதிப்பான அந்த சட்டத்தை எதிர்த்து அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள்
போராடுவதில் என்ன தவறு. இன்னொன்று விவசாயிகள் ஆதரவு இல்லாமல் அரசியல் கட்சிகள் மட்டும் போராடிட முடியுமா? 

 

இவர்கள் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்சி தூண்டிவிடுகிறது என்றால் கட்சியினர் மட்டும்தானே வருவார்கள். பொதுவான விவசாயிகள் எப்படி வருவார்கள். டெல்லி எல்லைகள் ஸ்தம்பிக்கும் வகையில் அவர்கள் கூடியுள்ளனர். 

 

dd

 

 

ஒப்பந்தம் போட்டப்படியே விவசாயிகளின் பொருளுக்கான விலையை கொடுப்பார்கள் என்று கூறுகிறார்களே?

மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திடம் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் வைத்துள்ள ஒரு சாதாரண விவசாயி எப்படி விலை பேச முடியும். ஒப்பந்தம் போட்ட நிறுவனம்தான் கடன், இடுபொருள்கள் கொடுக்கப்போகிறது. கடன் கொடுக்கிறவர்கள் சொல்கிற விலையை மீறி நீங்கள் சொல்லும் புது விலையை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? நீங்கள் சொல்லும் விலையை ஒப்பந்தத்தில் போடுவார்களா? அப்படியே போட்டாலும் அந்த விவசாய பொருள் கொடுக்கும் நேரத்தில் அதன் தரம் குறைவாக இருப்பதாக கூறி அந்த விலையை குறைப்பார்கள். ஒப்பந்ததில் சொன்னப்படி பணம் கொடுக்கவில்லை என்றால் யாரிடம் முறையிடுவது.

 

அரசு அதிகாரி ஆர்.டி.ஓ.விடம் முறையிடலாம் என்று சொல்கிறார்களே?  

தனியார் கரும்பு ஆலையிடம் விவசாயிகள் தங்கள் கரும்பை கொடுப்பதாக ஒப்பந்தம் போடுகிறார்கள். இதற்கான விலையை மாநில அரசு அறிவிக்கிறது. மாநில அரசு அறிவிக்கிற விலையை தனியார் கரும்பு ஆலைகள் கொடுக்கணுமா வேண்டாமா? மாநில அரசு அறிவிக்கிற விலையை கொடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கிறது. 

 

ஆனால் இந்தியா முழுவதும் தனியார் கரும்பு ஆலைகள் அந்த விலையை விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை. தமிழகம் உள்பட இந்தியா முழுக்க 50 ஆயிரம் கோடி, 60 ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ளது. தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி 6 ஆயிரம் கோடி இருப்பதாக சொல்கிறார்கள். பலமுறை பேச்சுவார்த்தை நடந்து முடிந்துவிட்டது. இதுவரை ஒரே ஒரு ரூபாய் கூட தமிழக முதலமைச்சரால் வாங்கிக்கொடுக்க முடியவில்லை. 

 

நீதிமன்றமே சொன்ன பிறகு என்னால் கொடுக்க முடியாது என்று தனியார் ஆலை முதலாளிகள் சொல்கிறார்கள். இதனால் எந்த முதலாளியை கைது செய்தார்கள். எந்த முதலாளி சொத்துகளை பறிமுதல் செய்தார்கள். இத்தனைக்கும் இது விவசாயியும் தனியார் ஆலையும் போட்ட ஒப்பந்தம் இல்லை. இருவருக்கும் பொதுவாக மாநில அரசு நிர்ணயித்த விலை. அதையே வாங்க முடியவில்லை. 

 

இந்த மத்திய, மாநில அரசுகள் முதலில் பல வருடங்களாக பாக்கி உள்ள கரும்பு விவசாயிகளுக்கான பாக்கித் தொகையை தனியார் ஆலை உரிமையாளர்களிடம் இருந்து வாங்கிக் கொடுக்கட்டும். இதையே வாங்கிக் கொடுக்க முடியாதவர்கள், இன்னும் பல மடங்கு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தம் போடப்பட்ட விலையை வாங்கிக்கொடுப்போம் என்பதை எப்படி நம்புவது?

 

புதிய வேளாண் திருத்த சட்டம் தேவையற்றது மட்டுமல்ல பாழ்படுத்தும் சட்டம். விவசாயிகளை நாசப்படுத்தும் திட்டம் என்றார் அழுத்தமாக.